பக்கங்கள்

ஞாயிறு, 7 ஜூன், 2020

ஜெயமோகனுக்கு ஒரு கடிதமும் அவர் பதிலும்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
                                உங்கள் ஊரடங்கு கால இலக்கிய வேள்வியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஒரு மாபெரும் அதிருஷ்டம். எனக்கு கதைகள் படிப்பதுதான் ஒரே ஆன்மத் தேடல். இலக்கியம் தான் என் மதம். ஆகவே விஸ்வரூபம் எடுத்த உங்கள் பித்து என்னையும் உள்ளிழுத்துக்கொண்டது. என் எல்லா நாட்களும் உங்கள் புனைவுடனே ஆரம்பித்து உங்கள் புனைவுடனே முடிவடைந்தன. நன்றி. இந்த நாட்களை அர்த்தமுள்ளவைகளாக்கியதற்கு,
                    உங்கள் கதைகளுக்கு வந்த கடிதங்களுக்கு அப்பால் ஏதும் சொல்லிவிட முடியாது. என்றாலும் என்னை மிகவும் பாதித்த கதைகளை குறிப்பிடாமல் இந்த கடிதம் முடிவடையாது. தன் வேலை செய் நேர்த்தியை கலையாய் மாற்றி, தான் கலைஞன் என்கிற கர்வத்துடன் உலகை துச்சமாக பார்க்கிற மாடன் பிள்ளை தன்னையே அந்த கலையாய் மாற்றிய ஒரு குருவியின் முன் கண் கலங்கி பணியும் குருவி என்கிற கதை என் உள்ளத்திற்கு நெருக்கமான கதை. காமப் பொம்மைகளுக்கு மாதிரியாய் தன் உடலை விற்ற பெண்ணையும் தேவியாய் காணும் யாதேவி, பாம்பும் சேர்ந்த லூப்பு, வான் கீழ் என்கிற அழகான காதல் கதை, ஆண் பெண் உறவின் சுழல்களை சொல்கிற ஆழி, கள்ளன்களையும் நேசிக்க வைக்கிற கதைகள், பெண்களின் பயணத்தில் உடன் வரும் நற்றுணை,, கலைஞன் இறைவனாகிற இறைவன் கதை, வனவாசத்தில் இருந்தாலும், கலைஞர்களாகிற போது அரசர்களாய் தோன்றும் சாமியப்பாவும், குமரேசனும், தன் கலை மூலம் தேவியாகவே மாறும் தேவி,  பாட்டைக் கேட்க விரும்பியும் வர முடியாமல் போன பெண்ணிற்காய் வீட்டிற்கே செல்கிற பயில்வான் பாகவதர், ஜானகிராமனின் ஒரு கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்திகிற கடவுளாகியே மாறிப்போன சங்கரன் போற்றி என எத்தனை பாத்திரங்கள், எத்தனை தருனங்கள். நீங்களும் மாடன் பிள்ளையைப் போல நீயும் நானும் ஒன்னு தான்வே என்று சாமி கிட்ட சொல்லலாம்
அன்புடன்
ராமகிருஷ்ணன்
கோவில்பட்டி 

அன்புள்ள ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நலம்தானே?
நானும் நலம்

உங்கள் கடிதம் கண்டேன். இக்கதைகள் இன்றைய முழுஅடைப்புச் சூழலில் ஒரு வகையான அகப்பயணத்திற்கான வாசல்கள். இயல்பான எளியகதைகளில் இருந்து மேலும் மேலும் செல்பவை. உங்களுக்கு அவை உதவியிருப்பதை அறிந்தேன். மகிழ்ச்சி
கோயில்பட்டியில் வெயில் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டேன்😂
ஜெ