பக்கங்கள்

SUYA THAMPATTAM

நான் ராமகிருஷ்ணன். ஒரு தமிழ் வாசகன் . நிஜம் தான். மறுக்கமுடியாமல் ஒரு படைப்பாளியாகிற ஆசை உள்ளூர உள்ளவன்.


                          நான் எழுதுவதை அதிகம் பிரசுரிக்க முன் வராததால் ப்ளாக் பக்கம் வந்து விட்டேன்தான் . இனி யாரும் தப்பிக்க முடியாது.வாழ்க வலை. ஆனால் அப்துல் ரஹ்மான் கூறுவது போல இது மீன் வலையா கொசு வலையா என்று தெரியவில்லை. ஆனால் எழுத்தே ஒரு வலை தானே!

                         இன்றைக்கு தேதிக்கு எனக்கு 46 வயசு ஆகிறது. அப்பா ஒரு ஆசிரியர். நல்ல நண்பரும் கூட. பெயர் KC ஆறுமுகம். அம்மா அம்மாதான் . பெயர் வள்ளியம்மாள். காதல் திருமணம் இல்லாமலே அமைந்த காதல் மனைவி சுதா. கௌதம் என்பது மகன் . பத்தாம் வகுப்பு படிக்கிறான். மகள் ஜனனி விஷ்மயா மூன்றாம் வகுப்பு. இரண்டு பெரும் பயங்கர துருதுரு. எல்லா குழந்தைகளும் அழகிய மலர்கள்தான் என்றாலும் எல்லா அப்பாக்கள் போல எனக்கும் என் குழந்தைகள் கொஞ்சம் ஜாஸ்தி அழகு போல தோன்றும் தான்.

                                                 தம்பி அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியர். ஒரு தங்கை பெங்களூரில். மாப்பிள்ளை சாப்ட்வேர் துறையில். மற்றொரு தங்கை ஈரோடில். சின்ன மாப்பிள்ளை ரயில்வேயில்.

                           ஆழமான நண்பர்கள் என் பலம் ......

                   நல்ல குடும்பமும், ஆழ்ந்த நட்பும் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் கொடுத்து வைத்தவன்..

                                நான் ஒரு TEXTILE ENGINEER . ஏட்டு சுரைக்காய் DTT ,AMIE ,MBA 26 வருட அனுபவம். தொழிலில் கொஞ்சம் நல்ல பெயர் தான் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு , கேரளா ஆந்திரா என்று ஜல்லியடித்துவிட்டு ( உபயம்: சுஜாதா) இப்போது மதுரா -UP -யில் தனிமையில் வாடிகொண்டிருப்ப்பதால் இந்த BLOG .



                                                           இதில் TEXTILE பற்றி எழுத உத்தேசமில்லை. கண்டிப்பாக இலக்கியம் மட்டும்தான். கொஞ்சம் கவிதை ! கொஞ்சம் கதை.. கொஞ்சம் அபிப்ராயம்..


                                                  விருப்பமில்லாதவர்கள் விலகி விட இந்த எச்சரிக்கை போதுமென்று நினைகிறேன்


அன்புடன்

ஆ. ராமகிருஷ்ணன் -13 .08 .2010 . 11.30 . P.M .