பக்கங்கள்

வியாழன், 29 ஜூன், 2017


திரு ஜெயமோகன்  அவர்களுக்கு,

                                                              என் எல்லா தினங்களும் வெண்முரசுடனே  ஆரம்பிக்கிறது .  வெண்முரசின் தொடர்ந்த வாசகன் என்ற போதிலும் இதுவரை அதைப்பற்றி எழுத தோன்றவில்லை.  ஆனால்  நீர்க்கோலத்தின்  ஆரம்ப  அத்தியாயங்கள்  என் உள்ளத்தை  அதிகம் பாதித்த ஒரு  விஷயத்தை  பேசுகின்றன . நீர்க்கோலத்தில் நீங்கள் ஒரு உச்சத்தை அடைந்து விட்டதாக தோன்றுகிறது. அதிகம்  பேசப்படாத  நகுலன், சகாதேவன்  இவர்களை நீங்கள் ஆழமாக சித்தரிப்பது மட்டுமல்ல , இந்தப்   பகுதி  செய்யும் தொழிலை ஒரு தவமாக மாற்றி ஆத்ம திருப்தி  அடைவதை சொல்கிறது .  புத்தகம் படிப்பதை தொடங்கிய காலத்தில் என்னை  மிகவும்  பாதித்த  புத்தகங்களில் ஓன்று   CRONIN -னின்  CITADEL . அதன் பிறகு தாஸ்தாயெவெஸ்கி , டால்ஸ்டாய் என்று படிக்க ஆரம்பித்தபிறகு அதன் இலக்கிய மதிப்பு பற்றி ஒரு ஐயம்  இருந்தபோதும் , இன்றும் என்னை  மிகவும் கிளர்ச்சி  அடைய வைக்கும் புத்தகம் அது.நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று தெரியாது. முப்பது வருடங்களுக்கு பிறகு அதை இன்று படிக்கும்போதும் அதே உணர்வுகள் ஏற்படுகிறது. என் வேலையை  இன்றும் நான் நேசித்து செய்வதற்கு அந்த புத்தகம் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. என்  வேலையில்  என்றாவது சோர்வு  ஏற்படும்போது  திரும்ப திரும்ப அந்த  புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பேன் . ஒரு வணிக இலக்கியமான  CITALDEL  ஐ   ஒரு மகத்தான காவியத்துடன்  ஒப்பிடுவது சரியா  என்று தெரியவில்லை. ஆனால் ANDREW  அந்த  குழந்தையை காப்பாற்றும்போதும் , இறுதியில் ஆற்றுகின்ற  உரையை  படிக்கும்போதும்  கண்கள் பனிக்காமல்  இருந்ததில்லை .  அதே உள்ளக்கிளர்ச்சி  நீர்க்கோலத்தின் ஆரம்ப அத்தியாயங்கள் படிக்கும்போதும் ஏற்படுகிறது.  புரவிகளுடன்  பேசுகிற நகுலனில்  தொடங்கிய அந்த படைப்பாற்றல்   செங்கோலுக்கும்  மேல் செல்லும் அடுமனைக்கரண்டியைப்பற்றி பேசுகிற போது  உச்சத்தை தொடுகிறது. பீமனை இந்த பரிமாணத்தில் யாரும் சொன்னதாக தெரியவில்லை. சமையல்  கலையை இவ்வளவு உயர்வு செய்த  தமிழ்  படைப்பு வேறு இருப்பதாகவும்  தெரியவில்லை.திரும்ப திரும்ப படித்து கொண்டே இருக்கிறேன். 
                                

ஞாயிறு, 4 ஜூன், 2017





வெற்றி -  ஒரு எதிர்வினை


தினமும் காலையில் எழுந்ததும் மொபைலில் ஜெயமோகனின் சைட்டில்  உள்ள  வெண்முரசு மற்றும் கட்டுரைகளை விரைவாக ஒரு முறை படிப்பேன். இரவு சாவதானமாக லேப்டாப்பில் மீண்டும் ஒருமுறை அனுபவித்து படிப்பேன். அப்படிதான் வெற்றி சிறுகதையையும் படித்தேன் .  முதல் முறை படிக்கும்போது மனதில் அதிர்வலைகளை உருவாக்கியது. இரவில் படிக்கும் போதும்.. முதலில் கோபம். சாதாரணமாக மனதில் எழும் பாமரத்தனமான கேள்விகள்தான் எழுந்தது. மீண்டும் சில முறை நிதானமாக படித்தபோது சில உள்ளடுக்குகள்  புலனானது . அதை    எழுததோன்றியது.  . எழுதும் முன் ஜெயமோகனின் வாசகிகளின்  எதிர்வினை என்ன என்று பார்க்க தோன்றியது. காரணம்  அவர்கள் தேர்ந்த வாசகிகள் . ஞாயிறு காலை வரை இரண்டு எதிர்வினைகள்  தான் வந்திருந்தது . இரண்டும் எதிர்மறை தான்.

CSK  வின் விமரிசனமும் படித்தேன்

CSK  இது அந்த பெண்னின்  ராஜதந்திரத்தின் வெற்றி என்று எழுதியிருந்தார். எனக்கு சிறுவயதில் படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகம் வந்தது . ஒரு கழைக்கூத்தாடி தினமும் குரங்குகளை  வைத்து விளையாட்டு காட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான் . அவனுக்கு ஒரு பையன் இருந்தான். ஒருநாள் பையனை அழைத்து உனக்கு வயதாய்விட்டது . வந்து வித்தை  கற்றுக்கொள்  என்று கூட்டிக்கொண்டு போனான். நன்றாய் பார்த்துக்கொள் என்று பையனிடம் சொல்லிவிட்டு கையை தட்டினான். குரங்கு ஒரு கரணம்  அடித்தது. உடனே அதற்கு ஒரு பழம் கொடுத்தான். பார்த்தாயா எப்படி குரங்கை பழக்கி வைத்திருக்கிறேன்  என்றான் பையனிடம். கரணம்  அடித்து திரும்பிய குரங்கு அருகிலிருந்த  குட்டியிடம் பார்த்தாயா , ஒரு கரணம் அடித்தால் பழம் கொடுப்பான். அப்படி பழக்கி வைத்திருக்கிறேன்  அவனை என்றதாம் .  யார் சரி?

வெற்றியில்  யார் வென்றது? கற்பை இழக்காமல் , மகனை  காப்பாற்றிய தாயா , பந்தயத்தில் வென்று பணக்காரனான நமச்சிவாயமா  , ஐந்து லட்சத்தை இழந்து , நினைத்த பெண்ணை அடைந்து , தன்  நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொண்ட ரங்கப்பரா , . எல்லோரும் எதோ வென்றிருக்கிறார்கள். ஏதோ  இழந்திருக்கிறார்கள். வெற்றி என்பது எது அவர்களுக்கு முக்கியம் என்பதைப்பொறுத்தது.

விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆணோ பெண்ணோ அனைவருமே பலவீனமானவர்கள்தான். காமம் என்கிற விஷயத்தில் 99.9% ஆண்கள்  வீழ்ந்து விடுவார்கள்  என்பதில் பெரிய அபிப்ராய பேதம்  இருக்காது  என்று நினைக்கிறேன். பெண்களிலும் ஒரு கணிசமான  அளவினர்  ஏதோ  ஒரு பலவீனத்தில்  , ஒரு தருணத்தில்  வீழ்ந்து விடுவார்கள்  என்பதும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும். எவ்வளவு சதவிகிதம் , எதற்காக  என்பதில் தான் சர்ச்சை.

எல்லாப் பெண்களும் ஒரு குறைந்த எண்ணிக்கை  தவிர  பணத்திற்காக விழுந்து விடுவார்கள்  என்ற தொனி  வருவதால்தான் சிக்கல். 

எல்லா ஆண்களும் காமத்தில் விழுந்து விடுவார்கள் என்று எழுதினால் சிக்கல் இல்லை. காரணம் இந்த சமூகத்தில் ஒரு ஆண்  எத்தனை  பெண்களை  வீழ்த்தினான்  என்பதிலே வெற்றி என்று காண்பிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு பெண் எத்தனை  ஆண்களை வீழ்த்தினாள்  என்பது வெற்றியாக கருதப்படுவதில்லை. எவ்வளவு ஆண்களின் முயற்சிகளை தடுத்தாள்  என்பதை வைத்து தான் அவள் வெற்றியை காண்பிக்க முடியும். இந்த கதையில் கூட அவள் தன பெயர் கெடாமல் , மகனையும் காப்பாற்ற்றினாள்  என்பது தான் அவள் வெற்றியாக  கருதப்படுகிறது.

உலக சுகங்களுக்காக பெண்கள் வீழ்ந்து விடுவார்கள் , ஆண்கள் தங்கள் ஆணவத்திற்காக  எதையும் தியாகம் செய்வார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை  ?  அழகிற்காகவோ , கிடைக்காத  அன்பிற்க்காகவோ , சொத்து சுகங்களை  துறந்து ஓடுகிற எத்தனை பெண்களை கண்டிருக்கிறோம். விரும்பிய பெண்ணிற்காக அதிகாரத்தையே துறந்த ஆண்கள் எத்தனை ?  ராமராவ்  ஞாபகம்  வருகிறார் .

ஜெயமோகனின் படைப்புகளை தொடர்ந்து படித்து கொண்டிருப்பதால்  எனக்கு ஜெயமோகனின் ஒரு இயல்பாக தோன்றுவது இரண்டு முரணியக்கங்கள். அவர் பெண்கள் ஒருபக்கம் உலக சுகங்களில் பலவீனம் உள்ளவர்கள்  என்று எண்ணுகிறார்.. மறுபக்கம் தாய்மையின் மகத்தான சக்தி பற்றி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் படைப்புகளில் தாய்மையின்  சக்தி  திரும்ப திரும்ப  வருகிறது.

.
ரங்கப்பரிடம் பெற்ற அனுபவத்தைப்பற்றி லதா என்ன  நினைக்கிறாள்  என்று தெளிவாக தெரியவில்லை. ஜெயகாந்தனின் சூயிங்கம்  போல எதாவது இருக்கிறதா என்று பார்த்தேன் . ஒரே நாளில் பத்து  பதினைந்து வயது கூடியது போல இருந்தாள் . எங்கிருந்தோ   ஒரு தனி ஒளி அவள் மேல் வீழ்ந்தது  போல இருந்தது என்று எழுதியிருக்கிறார்.  அந்த ஒளி  தியாகத்தின் ஒளியா  , இதுவரை  கிடைக்காத  பரிவு இப்போது கிடைத்ததின்  ஒளியா  என்று தெரிய வில்லை.
இந்தக்  கதையில் காச நோய்  பிடித்த மகனை  காப்பாற்ற அவள் வீழ்வதாக காட்ட  வேண்டிய தேவையே இல்லை.  ரங்கப்பர் வீசிய பனத்திற்கெல்லாம்  மயங்காமல்  , ஆனால் அவர் காண்பித்த அன்பிற்காக , நமச்சிவாயத்தின் புறக்கணிப்பிற்கு பழியாக அவள் தன்னை ரங்கப்பரிடம் சமர்ப்பித்தாக அமைந்தால் லதாவின் பாத்திரம் மோசமடையுமா ? இல்லை என்றே தோன்றுகிறது. ரங்கப்பர் லதா பணத்திற்காக வீழவில்லை , தன்  அன்பிலேயே  வீழ்ந்தாள் . ஆகவே பெண்கள் பணத்தில்  வீழ்வார்கள்  என்ற தன்  சித்தாந்தம் தோற்றுப்போனதை ஒத்துக்கொண்டு பணம் கொடுப்பதாக முடித்தாலும் சரியான முடிவாகத்தான் இருக்கும்.

அப்புறம் எதற்கு ஜெயமோகன்  ஒரு காச நோய்  மகனை உருவாக்கி , தாய்மைக்காக அவள் வீழ்வதாக  எழுதியிருக்கிறார்.?  இது ஒரு சீரியல் எழுத்தாளரின் உத்தி என்று அவருக்கு தெரியாதா ?

அவர் சுமதி என்ற பெண் வாசகருக்கு எழுதிய பதில்  சுவாரசியமானது. இது தான்  என் தரப்பா   என்றால் இல்லை என்கிறார். ஆனால் எந்த எழுத்தாளரும் தான் அந்தரங்கமாக  நம்பாததை எழுத மாட்டான் . அதை அடுத்த வரியிலேயே ஒத்துக்கொள்கிறார் . இவ்வுண்மையை கண்டு அஞ்சி அறம்  போன்ற கதையில் ஒளிந்து  கொள்வேன்  என்று எழுதுகிறார்.  அந்த பெண் வீழ்வாள் என்று அவர் உள்  மனம் நம்புகிறது. இது பெரும்பாலான  ஆண்கள் உண்மையாக உணர்வது. அந்தராத்மாவை உண்மையாக நம்பும் எந்த எழுத்தாளரும் அதை எழுதாமல் தப்ப முடியாது. இதனால் பெரும் திட்டுகளை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்த பிறகும் கூட. ஆனால்  தாய்மையை ஆராதிக்கிற ஜெயமோகனுக்கு அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அதை ஒரு தாய்மையின் தியாகமாக  மாற்றி ஆறுதல் கொள்கிறார் . ஒரு உத்தியாக  அது ஒரு தோல்வி என்ற போதும் கூட.  அது அவர் அறம் . இது அவர் வெற்றியா  , தோல்வியா என்பது  அவரவர் கோணத்தைப் பொறுத்தது .
ஆனால்  கதை ஒரு வாசகனாக  என்னை வென்றிருக்கிறது.