பக்கங்கள்

வியாழன், 29 ஜூன், 2017


திரு ஜெயமோகன்  அவர்களுக்கு,

                                                              என் எல்லா தினங்களும் வெண்முரசுடனே  ஆரம்பிக்கிறது .  வெண்முரசின் தொடர்ந்த வாசகன் என்ற போதிலும் இதுவரை அதைப்பற்றி எழுத தோன்றவில்லை.  ஆனால்  நீர்க்கோலத்தின்  ஆரம்ப  அத்தியாயங்கள்  என் உள்ளத்தை  அதிகம் பாதித்த ஒரு  விஷயத்தை  பேசுகின்றன . நீர்க்கோலத்தில் நீங்கள் ஒரு உச்சத்தை அடைந்து விட்டதாக தோன்றுகிறது. அதிகம்  பேசப்படாத  நகுலன், சகாதேவன்  இவர்களை நீங்கள் ஆழமாக சித்தரிப்பது மட்டுமல்ல , இந்தப்   பகுதி  செய்யும் தொழிலை ஒரு தவமாக மாற்றி ஆத்ம திருப்தி  அடைவதை சொல்கிறது .  புத்தகம் படிப்பதை தொடங்கிய காலத்தில் என்னை  மிகவும்  பாதித்த  புத்தகங்களில் ஓன்று   CRONIN -னின்  CITADEL . அதன் பிறகு தாஸ்தாயெவெஸ்கி , டால்ஸ்டாய் என்று படிக்க ஆரம்பித்தபிறகு அதன் இலக்கிய மதிப்பு பற்றி ஒரு ஐயம்  இருந்தபோதும் , இன்றும் என்னை  மிகவும் கிளர்ச்சி  அடைய வைக்கும் புத்தகம் அது.நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று தெரியாது. முப்பது வருடங்களுக்கு பிறகு அதை இன்று படிக்கும்போதும் அதே உணர்வுகள் ஏற்படுகிறது. என் வேலையை  இன்றும் நான் நேசித்து செய்வதற்கு அந்த புத்தகம் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. என்  வேலையில்  என்றாவது சோர்வு  ஏற்படும்போது  திரும்ப திரும்ப அந்த  புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பேன் . ஒரு வணிக இலக்கியமான  CITALDEL  ஐ   ஒரு மகத்தான காவியத்துடன்  ஒப்பிடுவது சரியா  என்று தெரியவில்லை. ஆனால் ANDREW  அந்த  குழந்தையை காப்பாற்றும்போதும் , இறுதியில் ஆற்றுகின்ற  உரையை  படிக்கும்போதும்  கண்கள் பனிக்காமல்  இருந்ததில்லை .  அதே உள்ளக்கிளர்ச்சி  நீர்க்கோலத்தின் ஆரம்ப அத்தியாயங்கள் படிக்கும்போதும் ஏற்படுகிறது.  புரவிகளுடன்  பேசுகிற நகுலனில்  தொடங்கிய அந்த படைப்பாற்றல்   செங்கோலுக்கும்  மேல் செல்லும் அடுமனைக்கரண்டியைப்பற்றி பேசுகிற போது  உச்சத்தை தொடுகிறது. பீமனை இந்த பரிமாணத்தில் யாரும் சொன்னதாக தெரியவில்லை. சமையல்  கலையை இவ்வளவு உயர்வு செய்த  தமிழ்  படைப்பு வேறு இருப்பதாகவும்  தெரியவில்லை.திரும்ப திரும்ப படித்து கொண்டே இருக்கிறேன். 
                                

கருத்துகள் இல்லை: