பக்கங்கள்

திங்கள், 12 நவம்பர், 2018


ஜெயமோகனின் கட்டண உரை
10-11-2018
ஒரு ஆர்வத்தில் பதிவு செய்து விட்டாலும் உடல் நிலை பயமுறுத்தியது. குளிரூட்டப்பட்ட ஹால் என்ற அறிவிப்பு மேலும் அச்சத்தைக் கொடுத்தது. தொடர்ந்த இருமல். எங்கே ஜெயமோகன் பேசிக்கொண்டிருக்கும் போது அடுக்கடுக்காய் இருமி,  யார் இந்த ஆள்? வெளியே அனுப்புங்கள் என்று சொல்லி விடுவாரோ என்ற பயம். இருந்தாலும் வீரியம் கூடிய மருந்துகள் மற்றும் வென்னீர் உபயத்துடன் தைரியமாக சென்று விட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று கதவு பக்கத்தில் இடம் பிடித்து அமர்ந்தேன். கழிப்பறை சென்று வருவதற்குள் அந்த இடத்தை   ஒருவர்  பிடித்துக் கொண்டார். கடலூர் சீனு என்று தோன்றியது. வேறு வழியில்லை. பின்னால் சென்று அமர்ந்தேன்.
ஜெயமோகன் வந்தார். கோவையில் செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் நடந்த ரப்பர் விழாவிற்குப் பிறகு இன்று தான் நேரில் பார்க்கிறேன். நிறைய மாறிவிட்டார். அப்போது சினிமா ஸ்டார் மாதிரி இருப்பார். இப்போதும் அழகாகத்தான் இருக்கிறார். முன்பின் தெரியாதவர்களையும் சினேகத்துடன் பார்க்கும் கண்கள். அழகான சிரிப்பு. ஒரிரு வார்த்தைகளில் அறிமுகம் செய்து கொண்டு அமர்ந்தேன். சமீப காலமாக என் சிந்தனையை அதிகம் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவரை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்.
கிருஷ்ணன் திறமையான நிர்வாகி என்று தெரிந்தது. அரங்கு நிரைந்திருந்தது.சரியான நேரத்தில் ஆரம்பித்தது. சுருக்கமான வார்த்தைகளில் கட்டண உரையின் நோக்கங்களை விளக்கி வரவேற்றார். ஜெயமோகன் போல் புகழ் பெறாத , அதே சமயம்  ஜெயமோகன்  அளவிற்கே அசலான இலக்கியவாதிகளையும்  கட்டண உரைக்கு அழைப்போம் என்றார்.
150 ரூபாய் கொடுத்தால் தான் உன்னையும் உள்ளே விடுவார்கள் என்று சொன்னதும் ஜெயமோகன் மனைவி 500 ரூபாய் நீட்டியது, சப்த சோதனைக்காக ஒரு குத்து பாடலை போட , ஜெயமோகன் பதறி அடித்துக் கொண்டு நிறுத்தச் சொன்னது, இடை வேளையில் டீ கிடையாது , தண்ணீர் தான் என்று கிருஷ்ணன் சொன்னதும், வெளியே தண்ணீர் வினியோகித்தவர் இதை எதற்கு வெளியே சொல்லி மானத்தை வாங்குகிறார் என்று சலித்து கொண்டது போன்ற மெல்லிய நகைச்சுவைகள் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கின.
சிறுகதையின் தேவதச்சன் வண்ணதாசனிடம் கையெழுத்து ஆசீர்வாதம் வாங்கியது மகிழ்வாய் இருந்தது.
ஜெயமோகனின் உரை  நன்றாக திட்டமிடப்பட்டு, ஆழமான உழைப்புடன் கட்டமைக்கப்பட்ட உரை. நமது சிந்தனைத்தடத்தை ஒரு வீட்டுடன் உருவகம் செய்தார். ஒரு மரபான வீடு எப்படி தனி மனிதனுக்கான இடத்தை அளிக்காமல், பெண்களை பின்னுக்குத் தள்ளி உருவாக்கப்பட்டது. அது எப்படி இன்று உருமாறி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனியான இடம், பெண்களுக்கான சமையலறை வரவேற்பறையை நோக்கி எப்படி நகர்ந்து வந்திருக்கிறது என்று காட்டி, அதே போல் நமது மரபான சிந்தனையில்  தாராளவாத சிந்தனைகள் ஏற்படுத்திய பாதிப்புகளை ஒப்பிட்டு விளக்கினார்.
தாராளவாதம் என்கிற வாக்கியம் அவ்வளவு சரியில்லை என்று ஜெயமோகனே அபிப்ராயப்பட்டதால் சுதந்திர வாதம் என்கிற வார்த்தையை உபயோகிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
என்னதான் சுதந்திர வாதம் நமது சிந்தனைகளை பாதித்தாலும் நமக்குள் இன்னும் நாட்டார் கூறுகள் இருக்கின்றன என்றார். 4000 வருடமாக அறுபடாத ஒரு மரபுச் சங்கிலி நமக்குள் இருக்கிறது  என்றார்.
அதே போல் என்னதான் சுதந்திர வாதம் தனிமனித சுதந்திரம், பெண் விடுதலை, ஜன நாயகம் போன்ற கொடைகளை மனித குலத்திற்கு அளித்தாலும் , அதற்கான limitations  கொண்டுள்ளது என்றார். தர்க்க புத்திக்கு அப்பாற்பட்ட , நுன்ணுணர்வுகளால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்களை அதால் புரிந்து கொள்ள முடியாது என்றார். சபரி மலை விஷயத்தை உதாரணமாக முன் வைத்தார்.
மார்க்சியம் போன்ற சித்தார்த்தங்களின் பங்களிப்பையும், நேர்மறை பாதிப்புகளையும் விளக்கினார். மார்க்சிசம் binary எதிரிகளையே முன் வைக்கிறது. இரு கருத்துகள் இருந்தால் ஒன்று இன்னொன்றை அழித்துதான் வாழ முடியும் என்கிற கருதுகோள் அபாயகரமானது என்றார்.
மாறாக எல்லா சித்தாந்தங்களில் உள்ள நல்ல விஷயங்களை அடையாளம் கண்டு கொண்டு ஒரு முழுமையான சிந்தனையை நோக்கி செல்வதுதான் ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சி என்றார்.
மார்க்சியம் எல்லா தனி மனிதர்களின் உள்ளேயும் ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது என்றார். சுந்தர ராமசாமி ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் கனவு இருந்தது என்று சொன்னதை விவரித்தபோது அவையில் எழுந்த சிரிப்பொலி ஒரு துனுக்குறுதலை அளித்தது. மார்க்சியம் மட்டுமல்ல , காந்தியம் உட்பட எல்லா சித்தாந்தங்களும் அத்தகைய லட்ச்சியவாத கனவுகளை உருவாக்கதானே செய்திருக்கிறது. தங்கள் சொத்துக்கள் எல்லாம் இழந்து அத்தகைய கனவுகள் பின்னே சென்றவர்கள் மூலமாகத்தானே கொஞ்சம் மாற்றங்களாவது நடந்திருக்கிறது.
இன்றைய சிந்தனையில் சிரிக்க தோன்றலாம். ஆழமாய் யோசித்தால் வணங்கத் தான்  தோன்றுகிறது. இன்று எந்த சித்தாந்தமும், எந்த பேச்சும் அத்தகைய கனவுகளை எற்படுத்த முடியாது என்று தோன்றும்போது ஏக்கம் தான் வருகிறது.
மார்க்சியத்தை பின்பற்றிய நாடுகளில் ஏற்பட்ட அழிவு சமுதாய மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவினால அல்ல , என்றென்றைக்குமான அறங்களை கணக்கிலெடுத்துக்கொள்ளாததே என்று நினைக்கிறேன். 
ஆரோக்கிய நிகேதனம் நாவலை வைத்து மரபு சிந்தனைகளுக்கும், நவீன சிந்தனைகளுக்கும் உள்ள மோதல்களை விளக்கியது அற்புதமாக இருந்தது.
அதேபோல அலை கடல் மேல் நிலவு என்ற படிமத்தின் மூலம் கொந்தளிப்பான வாழ்க்கையின் மேல் குளிர்ந்த அமைதியாய் அமர்ந்திருக்கும் ஞானத்தையும், பாற்கடல் கடைந்து கிடைக்கும் அமிர்தம் என்ற படிமத்தின் மூலம் வாழ்வின் நெருக்கடிகள் மூலம் கிடைக்கும் ஞானம் பற்றியும் விளக்கியது அழகாக இருந்தது.
மொத்தத்தில் புதிய சிந்தனை திறப்புகளை அளித்த உரை.
 

கருத்துகள் இல்லை: