காசி
என் மகள் IIM LUCKNOW-ல் சேர தேர்ந்தெடுக்கப்பட்டதால் குடும்பத்துடன் சென்று அவளை சேர்த்துவிட தீர்மானித்தோம். அப்படியே எங்காவது கோவிலுக்கு சென்றுவிட்டு கல்லூரி செல்லலாம் என்று யோசித்தோம். காசி அதே மாநிலம் என்பதால் அங்கு சென்றுவிட்டு அங்கிருந்து லக்னோ செல்லலாம் என்று திட்டமிட்டோம். கோவையிலிருந்து விமானம் மூலம் காசி சென்றோம்.
காசி பற்றி பல எழுத்தாளர்களின் எழுத்து மூலம் ஒரு மனச்சித்திரம் இருந்தது. அது கொஞ்சம் சிதைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய காசி வளர்ந்து வருகிற ஒரு நவீன நகரமான வாரணாசிக்குள் தன் புராதனத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்கிற நகரம்.
உயர்ந்து நிற்கிற ஸாப்பிங் மால்கள், மதுக்கடைகளில் முண்டி நிற்கிற கூட்டம்,அங்கும் இங்கும் பறக்கிற விலை உயர்ந்த கார்களுள் இடையில் புகுந்து முன்னேறுகிற ஆட்டோக்கள், இவை உருவாக்கும் போக்குவரத்து நெரிசலில் பொறுமையாக நகரும் சைக்கிள் ரிக்ஷாக்கள்.
எப்போதும் கூடுதல் காசு கேட்கும் கார்-ஆட்டோ டிரைவர்கள், படகோட்டிகள், அதிகம் கொடுத்துவிட்டோமோ, ஏமாந்து விட்டோமோ என்கிற ஆன்ம நெருக்கடியில் நாம், எல்லாம் மாயை என்று ஆறுதல் சொல்கிற காசியின் பழமை மாறா படித்துறைகள், புன்னகைத்து மிதந்து செல்கிற கங்கை, , பரப்பிரம்மமாய் காசி விஸ்வனாதர்,
எப்போதும் சிதை நெருப்பு அணையாத மணிகர்னிகா படித்துறை, அரிச்சந்திரா படித்துறை அடங்கிய 80 படித்துறைகளையும் படகுப்பயணத்தில் ஒரு பறவைப் பார்வை பார்த்தது,காசியின் குறுகலான சந்துப்பாதைகளில் கஞ்சா அடித்து மயங்கிக் கிடக்கும் சாமியார்களைக் கடந்து நடந்தது எல்லாம் ஒரு ஆன்மீக அனுபவமாகத்தான் இருந்தன.
நமது அரசு இலக்கினையான அசோகா சின்னம் இருக்கிற சாரநாத் போய் வந்தோம். புத்தர் தன் முதல் பிரசங்கத்தை அங்கேதான் நடத்தினாராம். இப்போதுவெயிலில் குளித்துக்கொண்டு மோனத்தில் இருந்தார்.
காசியில் சில இடங்களில் சாலை அறிவிப்புப் பலகைகளில் ஹிந்தி, ஆங்கிலம் இவற்றோடு தமிழிலும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். ஏற்கனவே கேதார்நாத் படித்துறையில் சிவ சிவ என்று எழுதியிருந்தாலும் இது வாரணாசி வளர்ச்சி போர்டு வைத்திருக்கிற அதிகாரப்பூர்வமான போர்டுகள். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்திய போது வைத்ததாக இருக்கும். அத்தனை தூரம் போய் தமிழைப் பார்த்தது மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்தது.
கங்கையில் இரவு படகுப்பயணமும் கங்கை ஆர்த்தியும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது நிஜம். இருட்டில் அழகாக ஆடுகிற தீபங்களும், அவற்றின் ஒளியில் மின்னுகிற கங்கை நீர்ப்பரப்பும், நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் கூடிய பூசகர்களின் உடல் அசைவுகள், பெரும் கூட்டத்தைப் பொருட்படுத்தாத அவர்கள் அர்ப்பணிப்பு எல்லாம் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்தன.
நாங்கள் போன நேரம் கோடைக்காலம். கடுமையான வெயில் சுட்டெரித்தது. காசி விஸ்வனாதர் கோயிலில் இரண்டு கிலோ மீட்டர்கள் முன்பே நிறுத்தி விட்டார்கள். பயங்கரக் கூட்டம். நீண்ட வரிசை. தரிசனம் முடிந்து வருகையில் களைப்படைந்து விட்டோம். கோவிலை விட்டு வெளியே வந்ததும் சற்று தூரத்தில் ஒரு வித்தியாசமான உணவகம் கவர்ந்தது. கொஞ்சம் உள்ளடங்கி இருந்தது. உணவு அருந்திச் செல்வோம் என்று உள்ளே சென்றோம். உணவு அருந்திக்கொண்டிருக்கையில் அருகே பார்த்தால் ஒரு அழகிய கோவில். அழகிய வேலைப்படுகளுடன் ஒரு பழமையான கோவில். என்ன கோவில் என்று கேட்டோம். இது கௌதமேஸ்வர் மஹாதேவ் மற்றும் காசிராஜ் காளி கோவில் என்றார்கள். வெளியே வைத்திருக்கிற போர்டில் இந்தக் கோவில் காசி மஹாராஜாவிற்கு சொந்தமானது, யாரும் ஆக்கிரமிப்பு செய்யவோ மாற்றங்கள் செய்யவோ கூடாது, மிருகங்கள் வளர்க்ககூடாது என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. கர்ப்பக்கிரகத்தில் காளியின் சிலையும் சிவ லிங்கமும் இருந்தன. அருகிலேயே ஒரு பிராமணக் குடும்பமும் வாழ்கிறது. பூஜைகள் செய்வதற்காக போல இருக்கிறது. தூண்களில் எல்லாம் நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள அழகான கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என்கிறது GOOGLE. அருகில் உள்ள காசி விஸ்வனாதர் கோவிலில் உள்ள லிங்கத்தைப் பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. இந்தக் கோவிலில் ஆளே இல்லாமல் லிங்கம் அனாதையாக நிற்கிறது. கடவுள்களுக்கு கூட சரியான இடமும் அதிருஷ்டமும் வேண்டும் போல.
அந்தக் கோவிலின் படங்களைக் கொடுத்திருக்கிறேன். காசிக்குப் போனால் இந்த சிவனையும் தரிசித்து வாருங்கள். தனிமையில் இருப்பதால் மனதார உரையாட முடியும்.