பழைய ஆங்கிலப் படங்களை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கோகுல் பிரசாத்தின் தலை சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் பட்டியலும் இதற்கு உதவியாக இருந்தது. இதில் GOD FATHER-I, GOD FATHER-II இரண்டும் பார்த்தேன். மரியோ பூசோவின் காட் ஃபாதர் நாவல் முன்பே படித்திருந்தேன். படங்கள் பார்த்ததும் மீண்டும் ஒருமுறை புத்தகத்தைப் படித்தேன். நாவல்களிலிருந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெறுவது அபூர்வம். காட் ஃபாதர் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றிருக்கிறது. தலை சிறந்த பொழுதுபோக்குப் படங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இரண்டு காட்ஃபாதர் படங்களும் வரும். அதிலும் காட்பாதர் -2, ஒருபடி மேல். எனக்கு நாவலும் பிடித்தது. படங்களும் பிடித்திருந்தன. திரைப்படங்கள் சிறந்த கலை வெற்றியைப் பெற்றிருந்தாலும், நல்ல காட்சி அனுபவத்தைத் தந்தாலும் சில இடங்களில் நாவல் கடத்துகிற உணர்வுகளை முழுமையாக திரையில் கொண்டு வர முடியவில்லை என்று தோன்றுகிறது.
உதாரணமாக மைக்கேலின் மனமாற்றத்தை படிப்படியாக நாவலில் நாம் உணர்கிறோம். தந்தை ஊரே பயப்படும் மாஃபியா தலைவராக இருந்தாலும், அந்த குடும்பத்திலிருந்து விலகி சாதாரண குடிமகனாகவே வாழ மைக்கேல் விரும்புகிறான். அவன் எப்படி தன் தந்தையைபோலவே தந்திரம் மிக்க, இரக்கமற்ற , கடினமான ஒரு டானாக உருவெடுக்கிறான் என்பதே கரு. அவன் மனதில் மாற்றத்தை வரவழைக்கிற சம்பவங்கள், தன் தந்தையின் மீது வைத்திருக்கிற பாசம் , குடும்பத்தின் மரியாதை போன்றவை உருவாக்குகிற பரிமாண மாற்றத்தை நாவல் திரைப்படத்தைக் காட்டிலும் திறம்பட உணர்த்துகிறது. அதேபோல் மைக்கேலின் தாயார் புத்தகத்தில் ஒரு வலுவான பாத்திரம். திரையில் அந்தப் பாத்திரம் அத்தனை வலுவுடன் படைக்கப்படவில்லை.. அதேபோல சில துணைப்பாத்திரங்களின் வாழ்வும் விரிவாக நாவலில் காட்டப்படுகிறது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அத்தனையையும் திரையில் கொண்டு வர முடியாது எங்கிற உண்மையையும் புரிந்துகொள்ளமுடிகிறது. அதே சமயம் இத்தாலிய குடும்பங்களின் வண்ண மையமான கொண்டாட்டங்களையும், மாஃபியா ரவுடிகள் என்றாலும் அவர்களின் ஆழமான குடும்பப் பிணைப்புகள், அவர்கள் பாசம், அவர்கள் நிகழ்த்துகிற வன்முறைகளின் கொடுரம் ஆகியவை திறையில் நன்றாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. மார்லன் பிராண்டோ, அல் பஸீனோ தொடங்கி சிறு கதைப்பாத்திரங்கள் வரை சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தாமலே வசன உச்சரிப்பு மூலம் அல் பஸீனோவும், பிராண்டோவும் குளிர் அச்சத்தை நெஞ்சுக்குள் கொண்டு வருகிறார்கள். திரைக்கதையையும், இயக்கத்தையும் உயர்தரத்தில் மரியோ பூஸோவும், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்பாலாவும் படைத்திருக்கிறார்கள்.
காட்ஃபாதர் -1 படத்தைவிட காட்ஃபாதர்-2 சிறப்பாக வந்திருக்கிறது. சாதாரணமாக ஒரு தொடர் படம் முந்தையப்படத்தை விட நன்றாக வருவது அபூர்வம். சாதாரணமாக முதல் படத்தால் கவரப்பட்டவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் சென்று இரண்டாம் படத்தில் எமாற்றம் அடைவது வழக்கம். ஆனால் காட்ஃபாதர்-2 முதல்படத்தை விட சில படிகள் மேலாகவே அமைந்திருக்கிறது.
காட்ஃபாதர் என்று அவரைச்சுற்றியிருப்பவர்களால் அன்புடன் அழைக்கப்படுகிற விட்டோ கார்லியோனியின் இளமைக்காலமும், அவர் டானாக மாறி அடைகிற உயர்ச்சியும், அவரைத் தொடர்ந்து டானாக பதவியேற்கிற மைக்கேலின் எழுச்சியும் மாறி மாறி நேர்த்தியாக காட்ஃபாதர்-2 படத்தில் காண்பிக்கப்படுகிறது. கிரிமினல் உலகில் வெற்றிகள் அடைந்தாலும் அவர் அடைகிற மன நெருக்கடியயும், தனிமையையும் அல்பசீனோ அற்புதமாக காட்டுகிறார். தேர்ந்த நடிப்பு.
இத்தகைய வணிகப் படங்கள், தமிழ் வணிகப்படங்கள் போல் பார்வையாளர்களை முட்டாள்களாக கருதுவதில்லை. கொஞ்சமாவது ஆழ்ந்து கவனித்தால்தான் , யோசித்தால்தான் சில காட்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். மைக்கேலின் வீட்டில் படுக்கையறையில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். தன் குடும்பத்தில் யாரோ ஒரு துரோகி இருக்கிறான் என்று மைக்கேல் புரிந்துகொள்கிறான். அது யார் என்று மைக்கேலைப் போலவே நாமும் அனைத்து உரையாடல்களையும் கவனித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அதைப்போலவே பழைய விசுவாசி ஒருவர் மைக்கேலுக்கு எதிராக சாட்சி சொல்ல ஒத்துக்கொண்டு நீதிமன்றம் வருகிறார். மைக்கேல் சிசிலியிலிருந்து அவர் சகோதரரை அழைத்துக்கொண்டு வருகிறார். அவர் பேசுவதே இல்லை. அமைதியாக அமர்ந்திருக்கிறார். சாட்சி மைகேலுக்கு ஆதரவாக சாட்சியம் கொடுக்கிறார். மிரட்டலா? அன்பா எது அவரை அப்படி மாற வைத்தது என்று பார்வையாளரே ஊகம் செய்து கொள்ள வேண்டியதுதான். கடைசியில் அந்த நபர் நான் என்ன செய்ய முடியும் என்று மைக்கேலிடம் கேட்கிறார். அவர் ரோம சாம்ராஜியத்தில் இவ்வாறு துரோகம் இழைத்துத் திருந்தியவர்கள் தண்ணீர் தொட்டியில் கையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிற கதையை சொல்கிறார். அடுத்த காட்சியில் அவர் தண்ணீர்த் தொட்டியில் இறந்து கிடக்கிறார்.
வன்முறையாலும் , குற்றங்களாலும் டான் என்கிற நிலைக்கு உயர்ந்தாலும், தன் சகோதரர்களை இழந்து, மனைவியைப் பிரிந்து மைக்கேல் தனியாக நிற்கிற காட்சி பல சிந்தனைகளை தூண்டும்.
காட்ஃபாதர்-3 படம் இரண்டு வெர்ஸனில் இருக்கிறதாம். இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.
நிச்சயம் புத்தகத்தையும் படங்களையும் பரிந்துரைக்கிறேன். புத்தகத்தைப் படித்துவிட்டு படங்களைப் பார்த்தாலும் சரி,படங்கள் பார்த்துவிட்டு புத்தகம் பார்த்தாலும் சரி. மீண்டும் ஒருமுறை படங்களை திரும்பப் பார்ப்பீர்கள் அல்லது புத்தகத்தை திரும்பிப் படிப்பீர்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக