பக்கங்கள்

சனி, 30 மே, 2026

சுந்தர ராமசாமி என்னும் மானிடன்

 1984-ல் நான்  டிப்ளமா முடித்து கோவையில் ஒரு மில்லில் வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளம் பெற்றிருந்தேன். கோவையில் ஒரு புத்தக கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று போயிருந்தேன். புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். கண்காட்சியிலிருந்த பெரியவர் நான் புரட்டிக் கொண்டிருந்த ஜே ஜே சில குறிப்புகள் புத்தகத்தைப் பார்த்து ரொம்ப நல்ல புத்தகம். இது ஒன்று விற்றாலும் இந்தக் கண்காட்சி நடத்தியதற்கு சந்தோஷப்படுவேன் என்றார். அவர் விஜயா பதிப்பகம் வேலாயுதம். என் சம்பளத்தில் வாங்கிய முதல் புத்தகம். என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்த  புத்தகம். அத்தனை வீச்சு நிறைந்த தமிழ் நடையை அது வரை படித்திருக்கவில்லை. இன்றும் அந்த நடைக்கு ஈடாக ஒன்று படித்ததில்லை.

சமீபத்தில் சுந்தர ராமசாமியின் ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் என்ற புத்தகத்தைப் படித்தேன். ஏழுமலை என்கிற தடா கைதி சுந்தர ராமசாமிக்கு சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதற்கு சுந்தர ராமசாமி எழுதிய பதில்களின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஏழுமலை எழுதிய கடிதங்கள் இல்லை. சுந்தர ராமசாமியின் பதில்கள் மட்டும்தான். மாதிரிக்காக ஏழுமலையின் இரண்டு கடிதங்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏழுமலை 57 கடிதங்கள் சுந்தர ராமசாமிக்கு எழுதியிருக்கிறாராம். அதில் பெரும்பான்மையைச் சேர்த்திருந்தால் முக்கியமான ஆவணமாக இருந்திருக்கும். 

சுந்தர ராமசாமியின் கடிதங்கள் வழி தெரிவது அவரது மென்மையான மனதும்  பரிவும். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்திகொண்டே இருக்கிறார். உங்கள் கதைகளை எனக்கு அனுப்புங்கள் , நான் படித்துப்பார்க்கிறேன் என்று எழுதுகிறார். காலச்சுவடு பதிப்பகம் உங்கள் கதைகளைப் பதிப்பிக்காது. ஆனால் எனக்கு அனுப்புங்கள். நான் படித்துப் பார்க்கிறேன் என்று எழுதுகிறார். இரண்டு மூண்று கடிதங்களில் தொடர்ந்து கேட்டும் அவர் அனுப்பவில்லை. உண்மையாகவே படிக்க ஆசையாக இருக்கிறது அனுப்புங்கள் என்று மீண்டும் எழுதுகிறார். ஏழுமலை அனுப்பிய கவிதைகளை காலச்சுவடு பிரசுரிக்கவில்லை என்ற  மனக்குறைக்கு ஆறுதல் சொல்கிறார்.  காலச்சுவடு நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்கிறார். என் மன ஓட்டமும் காலச்சுவடின் மன ஓட்டமும் ஒன்று என்று நினைக்க வேண்டாம் என்கிறாரர். அவர் கேட்கிற புத்தகங்களை அனுப்பி வைக்கிறார். அவர் கேட்கிற மதம், அரசியல் , சமூகம் சார்ந்த எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார். சிறைக்கம்பிகளுக்கு அப்பாலிருந்து வருகிற ஒரு சிந்திக்கிற ஆத்மாவின் குரலை செவி மடுக்க வேண்டும்; அவரது படிக்கிற, எழுதுகிற துடிப்புகளைத் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் அவா அவர் வரிகளில் புலப்படுகிறது. சக மனிதன் மீதுள்ள அவரது அக்கறை அவர் வரிகளில் சிந்திக்கொண்டே இருக்கிறது.

ஜெயமோகன் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவார். கேரளாவில் அவரும் சுந்தர ராமசாமியும் பயணம் செய்யும்போது ஒரு ஆட்டோ டிரைவரைச் சந்திக்கிறார்கள். அந்த ஆட்டோ டிரைவர்  சுந்தர ராமசாமியின் தீவிர வாசகர். இவர்களை சாப்பிட அழைக்கிறார். அவர் வீட்டிற்கு போகிறார்கள். ஆட்டோ டிரைவரும் அவர் மனைவியும் பாசத்துடன் உணவு பரிமாறுகிறார்கள். மீன் குழம்பும் சோறும். சுந்தர ராமசாமி அசைவம் சாப்பிட மாட்டார். அவர்கள் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. சுந்தர ராமசாமி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று ஜெயமோகனிடம் கண் ஜாடை காட்டுகிறார். மீன் குழம்பை சாதத்துடன் குழைத்து ரசித்து சாப்பிடுகிறார். எல்லாம் முடிந்து  அறைக்கு திரும்பி வந்த பிறகு  சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் முகம் வீங்கி கஷ்டப்படுகிறார். வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே என்று ஜெயமோகன் கேட்கிறார். எவ்வளவு ஆசையாக சாப்பிடக் கூப்பிட்டார். சாப்பிடவில்லையென்றால் அவர் மனம் எவ்வளவு  கஷ்டப்படும் என்று  சுந்தர ராமசாமி சொன்னாராம். இந்தக் கடிதங்கள் , இந்த சம்பவம்  அனைத்தும் சுந்தர ராமசாமி எவ்வளவு உன்னதமான மனிதர் என்று காட்டுகின்றன.  எழுத்தாளர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். அவர்கள் படைப்பு எவ்வளவு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றுதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நல்ல இலக்கியவாதிகள் நல்ல மனிதர்களாகவும் இருப்பது எவ்வளவு இனிமையாகவும் , இதமாகவும் இருக்கிறது.

அந்த ஏழுமலை விடுதலையாகி விட்டாரா? என்ன செய்கிறார்? ஏதேனும் புத்தகம் எழுதியிருக்கிறாரா? ஒன்றும் தெரியவில்லை.

ஒரு மகத்தான எழுத்தாளர் நான் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்.அவரை ஒரு முறை கூடப் போய் பார்க்கவில்லை. ஒரு கடிதம் கூட எழுத வில்லை. பாழாய்ப் போன இந்த கூச்ச சுபாவத்தை எண்ணி குற்ற உணர்வு எழுகிறது.

இன்று சுந்தர ராமசாமியின் பிறந்த நாளாம். அவர் எழுத்துகள் சில பக்கங்கள் மீண்டும் படித்தேன். அவர் ஆன்மா இன்னும் பலகாலம் உயிர்ப்புடன் இருக்கும்