பக்கங்கள்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

மத்துறு தயிர்

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு,

அறம், சோற்று கணக்கு, இவை   தந்த பிரமிப்பு மாறுவதற்குள் மத்துறு   தயிர்.. !
உங்கள் மத்து இதயத்துக்குள் ஏற்படுத்திய கொந்தளிப்புகள்  அநேகம்..! ஏற்கெனவே  நான் பதினெட்டு வருடம் கழிந்து முதல் முறையாக  குடும்பத்தை பிரிந்து தனிமையின் பாலையை உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் செல்ல மகளின் புகைப்படத்தை  பார்க்கிற ஒவ்வொரு நிம்டமும் என் மனம் அடையும் உணர்வை அன்றே கம்பன் சரியாக சொல்லியிருக்கிறானே. கம்பன் ஒரு மகாகவி என்று உணர  வைத்ததற்கு நன்றி ஜெயமோகன்!. எழுத்து உங்களுக்கு ஒரு தவம் எனதை நீங்கள் நிருபித்துகொண்டே  இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிரிவும்  சின்ன சாவுகள் தான்... எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..!  ஆனால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது போன்ற துயரங்கள் தற்காலிகமானவை  ! ராஜத்தின் துயரம் முன்னால்  இதைப்பற்றி சொல்வதே அநாகரிகமானது.  சில மனிதர்களை மகத்தான துயரங்கள் தாக்குகிற போது கையாகலாமல் அருகிலிருந்து   பார்க்க நேரிடுவது ஒரு  சோகம்.. எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.. உங்கள் கதை இன்றும் எனக்கு உறக்கம் இல்லாமல் செய்துவிடும்..!

அன்புடன்
ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நன்றி

பிரிவு என்பது ஒரு பயிற்சியும் கூட

உனக்கு வணக்கம் பிரிவே
நீ கண்களைக் கட்டி எங்களை
ஒருவரை ஒருவர் பார்க்கச்செய்தாய்


என்பது வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனனின் மலையாள கவிதை

பிரிவில் நாம் பலவற்றை துல்லியமாக காண்கிறோம்

ஜெ

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு
சத்தியமான வார்த்தைகள்.

இந்த பிரிவில் எனக்கும் என் மனைவிக்குமான புரிதல் மேம்பட்டதை உணர்ந்திருக்கிறேன்.

இன்றைய  என் வாழ்வில் உங்கள் வலைப்பூவின் பங்கு மகத்தானது.  எனக்காக நேரம் செலவிட்டதில் நன்றி.

அன்புடன்

ராமகிருஷ்ணன்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அறம் , சோற்று கணக்கு - ஜெயமோகனின் புதிய சாதனைகள்

ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதைகளான  அறம், சோற்று கணக்கு இரண்டையும் அவரது தளத்தில் படித்தேன். நிச்சயம் அவரது சிறந்த படைப்புகளில் இவை சேரும்.  அறம் இதுவரை மூன்று முறை படித்துவிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் கண்ணில் நீர் மல்குவதை தவிர்க்கமுடியவில்லை. அறம் அது அவகிட்ட அல்ல இருந்தது என்ற முத்தாய்ப்பில் ஒ. ஹென்றியின் இறுதி வரிகள் தருகிற பரவசம் கிடைக்கிறது. இந்த கதையை எழுத்தாளர்களை , மற்ற எளியவர்களை சுரண்டி பிழைக்கிற கயவர்களை எல்லாம் படிக்க சொல்ல வேண்டும். கொஞ்சம் பேருக்காவது சொரணை வராதா?  கேதேல்  சாகிப்பு மகத்தான பாத்திரபடைப்பு.  இந்த மாதிரி மகாத்மாக்களும்  வாழ்ந்திருக்கிறார்கள் என்று எண்ணும்போது நிறைவாக இருக்கிறது. இந்த இரண்டு கதைகளும் நிச்சயம் ஜானகிராமனின் தரத்தை  அடைந்தவை