பக்கங்கள்

புதன், 29 அக்டோபர், 2025

சிதம்பரம்

1985- ல் எனக்கு இருபது வயது. நானும் என் நண்பர் கணேசமூர்த்தியும் சோமனூரில் வேலை பார்த்துகொண்டிருந்தோம். கணேசமூர்த்தி  FRONT LINE  பத்திரிக்கை வாங்குவார். ஒரு இதழில் சிதம்பரம் என்கிற திரைப்படத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அது ஒரு மலையாள- தமிழ் இருமொழிப் படம். G. அரவிந்தன் இயக்கியது. அதில் கொடுத்திருந்த படங்களும், விவரிப்பும் மனதை மிகவும் கவர்ந்தன. உடனே அந்தப் படம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து எங்கே திரையிடப்பட்டிருக்கிறது என்று விசாரித்தோம். பாலக்காட்டில்  என்று தெரிந்ததுஅடுத்த நாளே லீவு எடுத்துகொண்டு பஸ் ஏறிவிட்டோம்.

                 பாலக்காட்டில் கோட்டை மைதானம் என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விழித்துக் கொண்டு நின்றோம். எங்கே தியேட்டர் என்று தெரியவில்லை. ஒரு இளைஞரிடம் சிதம்பரம் திரைப்படம் ஓடுகிற தியேட்டர் எங்கே இருக்கிறது என்று கேட்டோம். அவர்  நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று மலையாளத்தில் கேட்டார். சிதம்பரம் பார்க்க கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறோம் என்றோம். அவர் வியப்புடன், “சினிமா பார்க்க கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களா?” என்றார். “வாங்கள், நான் அழைத்துப் போகிறேன்” என்று ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து தியேட்டர் வாசலில் விட்டார். “அண்ணா நீங்களும் படம் பார்க்க வாருங்கள்”, என்று அழைத்தோம். “இல்லை. ஒரு அவசர வேலை இருக்கிறது  கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களே என்று தான் வந்தேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

                  அடுத்த இரண்டு மணி நேரம் ஒரு புது அனுபவம். நாங்கள் பார்த்த எந்த திரைப்படம் போலவும் இல்லை அந்தப் படம்.  Visual treat  என்கிற வார்த்தைக்கு அன்றுதான் அர்த்தம் தெரிந்தது. அந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகள், காமிராக் கோணங்கள் எங்களை அசர அடித்தது. இந்தப் படம் எடுத்த இடத்தை உடனே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அடுத்த வாரமே மூன்று தினங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

              மூணாறும், மாட்டுப்பட்டியும் உண்மையிலேயே கடவுளின் சொந்த இடங்கள்தான். மாட்டுப்பட்டியின் இந்தோ ஸ்விஸ் மாட்டுப்பண்ணைதான் சிதம்பரத்தின் கதைக்களம்.  அன்றெல்லாம் சுற்றுலாப்பயணிகளை பண்ணையைப் பார்க்க அனுமதிப்பார்கள். (சிலர் செய்த சில அயோக்கியத்தனங்களால் இப்போது அனுமதி இல்லை). குட்டி யானைகள் போல இருக்கின்ற மாடுகளின் கம்பீரமும், ஆழ்ந்த புல்வெளிகளின் வசீகரமும் மனதில் ஒரு அமைதியைக் கொடுத்தது. இயற்கையின் பிரமாண்ட தரிசனம் மனதின் கொந்தளிப்புகளை அடக்கி ஒரு மோன நிலையைத் தந்தது. என்பதுகளின் மூணாறு எப்படி அழகாக இருந்தது என்பது உங்களுக்குப் புரிய சிதம்பரம் தான் பார்க்க வேண்டும்.

                  மூணாறின் அழகை ஷாஜி கரூணின் காமிரா பசியோடு இருக்கும் கன்று முட்டி முட்டி பால் குடிப்பதைப் போல குடித்திருக்கிறது. அழகு ததும்பும் பிரேம்கள். கண்கள் நிறைந்து போகும்.

                      அடுத்த அற்புதமான விஷயம் தேவராஜனின் இசை. அவர் மலையாள திரை உலகின் மூத்த இசை அமைப்பாளர் என்று தெரியும். ஆனால் தமிழ் இசையில் இவ்வளவு ஞானம் உள்ளவர் என்று தெரியாது. நந்தனார் பாடல்கள், தேவாரம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று ஒரு நல்ல நாத அனுபவம். ஸ்மிதா பாடீலின் முக பாவங்களும்,ஷாஜியின் காமிரா வழி மூணாறின் பூக்களும், தேவராஜனின் இசையில் தேவார வரிகளும் ஒரு தெய்வீக அனுபவம்தான்.

                   ஸ்மிதா பாடிலின் நடிப்பு மற்றொரு சிறப்பு. ஒரு தமிழ்ப் பெண்ணாக சரியாகப் பொருந்துகிறார். மருட்சியும் , மலர்ச்சியும் திறம்பட வெளிப்படும் கண்கள், நுணுக்கமான உணர்வுகளைக் காட்டும் முக பாவங்கள் என ஒரு நடிப்பு உற்சவத்தையே நடத்தியிருக்கிறார்.  What a beautiful women!

                    C.V. ஶ்ரீராமன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படியாக வைத்து அரவிந்தன் உருவாக்கிய இந்த திரைச்சித்திரம் இந்தியாவின் மிகச்சிறந்த படம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது.

                       மாட்டுப்பட்டி இந்தோ ஸ்விஸ் பண்ணையில்  மாடு மேய்க்கும் ஒரு தமிழ்த் தொழிலாளி முனியாண்டி. சங்கரன் ஒரு அன்பான மலையாளி சூப்ரிடண்ட். முனியாண்டியோடு நட்பாக இருக்கிறார். சமயத்தில் பண உதவியும் செய்கிறார். குடிக்கும்போது முனியாண்டிக்கும்  ஊற்றிக்கொடுக்கிறார். இது கண்டிப்பான மற்றொரு சூப்பர்வைசரான ஜேக்கப்பிற்குப் பிடிப்பதில்லை. அவன் தொழிலாளிகளிடம் ஒரு இடைவெளி வைத்திருக்க வேண்டும் எனக் கருதுபவன்.

                       முனியாண்டி சிதம்பரத்திலிருந்து சிவகாமி என்கிற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வருகிறான்.  வரண்ட பகுதியான சிதம்பரத்திலிருந்து வந்த சிவகாமிக்கு மூணாறின் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களும், பிரமாண்ட மரங்களும் ஒரு மிரட்சியைக் கொடுக்கின்றன. அதேசமயம் அழகான மலர்களால் ஈர்க்கப்படுகிறாள். இந்த சூழ்நிலை ஒருவித தனிமை உணர்வைக் கொடுக்கிறது. ஏதேனும் வேலை செய்ய நினைக்கிறாள். ஆனால் முனியாண்டி அதை விரும்பவில்லை.

                         சங்கரன் சிவகாமிக்கு அவள் அப்பாவுக்கு கடிதம் எழுதும்போது அட்ரஸ் எழுத உதவியாக இருக்கிறார். அவளிடம் அன்பாக, கரிசனையாக நடந்து கொள்கிறார். ஜேக்கப்பின் கரடுமுரடான நடவடிக்கை சிவகாமிக்கு பயத்தைக் கொடுக்கிற போது சங்கரனின் அன்பான அருகாமை முனியாண்டியாலும் கொடுக்க முடியாத ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

                   ஓரு திரைப்படக் குழுவோடு மது விருந்தில் இருக்கும்போது சிவகாமியைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான் ஜேக்கப். சங்கரன் அவனைத் தாக்கிவிடுகிறார். ஜேக்கப் சிவகாமிக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்துகொடுக்கிறான். அதை முனியாண்டி மறுக்கிறான். அதனால் அவனுக்கு இரவு ஸிப்ட் ஏற்பாடு செய்கிறான் ஜேக்கப். ஒரு பாடம் கற்பிக்கப் போவதாக மிரட்டவும் செய்கிறான்.

                        இரவு ஷிப்டில் வேலை செய்கிறபோது ஜேக்கப்பின் பைக் சப்தம் கேட்டு ஓடி வருகிறான் முனியாண்டி. தன் வீட்டிலிருந்து ஒடிப்போகும் சங்கரனைக் காண்கிறான். அடப்பாவி என்று கதறி அழுகிற முனியாண்டி மனைவியைக் கொன்று தற்கொலை செய்து கொள்கிறான்.

                               அடுத்தப்பகுதி முழுவதும் குற்ற உணர்ச்சியிலும், கழிவிரக்கத்திலும் அல்லலுறும் சங்கரனின் பாவ விமோசனத்திற்கான பயணத்தை விவரிக்கிறது. இடையறாது குடித்ததின் விழைவாக கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் சங்கரனை , ஆன்மீகத்தில் ஈடுபடும்படியும் , பயணம் மேற்கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

                            ஊர் ஊராய் செல்லும் சங்கரன் இறுதியாக சிதம்பரம் வருகிறார். அங்கே செருப்பு வாங்கி டோக்கன் தரும் பெண் சிவகாமியாக சங்கரன் கண்களுக்குத் தோற்றம் தருகிறாள். அவள் முன் தலை குனிந்து சரணாகதித் தோற்றத்தில் நிற்கிறார்  சங்கரன். ஊழித்தாண்டவமாடும் இசையின் பின் புலத்தில் காமிரா சிதம்பரக் கோயிலின் கோபுர அடுக்குகளை படிப்படியாக காண்பித்து, உயர்ந்து வானத்தோற்றத்தில் நிற்கிறது.

சிதம்பரம் கொடுக்கிற ஆன்மீக, தத்துவ தரிசனங்கள் பல. சங்கரன், முனியாண்டி என்பவை சிவனின் வெவ்வேறு பெயர்கள், சிவகாமி என்பது சிதம்பரக் கோயிலில் அம்பாளின் பெயர் என்பதை யோசிக்கும்போது, சிதம்பர கோயிலின் தொன்மத்தை உணர்ந்தவர்களுக்கு பல புது புது அர்த்தங்களை இந்த திரைப்படம் கொடுக்கிறது.

               சிதம்பரத்தின் தொன்மம் என்ன? இந்து மத சம்பிரதாயப் படி பஞ்ச பூத சக்திகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோயில் இருக்கிறது. சிதம்பரம் ஆகாயத்திற்கான கோயில். சிதம்பர ரகசியம் பார்ப்பது என்று சடங்கு ஒன்று சிதம்பரம் கோயிலில் உண்டு. அதில்  ஆகாயத்தைத் தான் காட்டுவார்கள். முதலும் முடிவும் இல்லாத பிரமாண்ட ஆகாய வெட்ட வெளிதான் பிரம்மம் என்பதே சிதம்பர ரகசியம். இந்த மகா சக்தியின் முன் ஒரு தூசியாக தன்னை உணர்ந்து சிவகாமியின் முன் பணிந்து நிற்கும் சங்கரனின் தோற்றமே சிதம்பரம் திரைப்படத்தின் தரிசனம்.

                       இருபது வயதில் என் அழகுணர்ச்சிகளை தூண்டிய , என் ரசனைகளை மேம்படுத்திய படம் சிதம்பரம். நான் பார்த்த முதல் கலைப்படம் சிதம்பரம். சத்யஜித்ரே, அகிரா குருசேவா எல்லாம் அப்புறம் தான் பார்த்தேன். அதற்காக அரவிந்தன் என்றும் என் நன்றிக்கு உரியவர். இந்தப் படத்தை 2025 -ல் மீண்டும் பார்த்தேன். ஶ்ரீராமனின் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் படித்தேன். எனக்கு திரைப்படம் ஒருபடி மேலாகத் தோன்றுகிறது. நாற்பது வருடங்களுக்கு முன் எனக்கு கொடுத்த அதே பிரமிப்புகளை, உணர்வுகளை இன்றும் கொடுக்கிறது சிதம்பரம். நாற்பது வருடங்களுக்கு முன் பூத்தது அல்ல இன்று பூத்த மலர் என்று வாசம் வீசி நிற்கிறது சிதம்பரம்.

கருத்துகள் இல்லை: