பக்கங்கள்

வியாழன், 23 அக்டோபர், 2025

WHEN BREATH BECOMES AIR


WHEN BREATH BECOMES AIR  என்கிற புத்தகம் படித்தேன். பால் கலாநிதி எழுதியது. படிக்க வேண்டிய புத்தகம்தான். இதன் சிறப்பு  இது மரணத்தின் நிழலில் நிற்கிற ஒருவர், சில நாட்களில் இறக்கப் போகிறோம் என்று தெரிந்த ஒருவர் எழுதியது. மரணத்தின் மணம் அடிக்கிற  அசலான வரிகள்.

பால் கலாநிதி ஒரு மூளை நரம்பியல் நிபுணர். அமெரிக்காவில் வசித்த ஒரு இந்திய வம்சாவளியினர். இலக்கியம் , தத்துவம் மற்றும் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். அவருக்கு நுறையீரல் புற்று நோய் வரும்போது முப்பத்தாறு வயது. சில காலமே தன் ஆயுள் என்று தெரிந்து கொள்கிறார். நரம்பியல் துறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என்கிற கனவில் இடியாய் விழுகிறது இந்த செய்தி. அவரும் அவர் காதல் மனைவி லூசியும் எப்படி இந்த துயரத்தை எதிர் கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த புத்தகம்.

பால் கலாநிதி இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். இலக்கியம் மூலமே இதை எதிர்கொள்கிறார். தன் வாழ்க்கையை, தன் போராட்டங்களையே புத்தகமாக எழுதுகிறார். அவருக்கு T.S. ELIOT  மிகப் பிடித்தமான எழுத்தாளர் என்று தெரிகிறது.எலியட்டின் வரிகள் புத்தகம் நெடுகத் தெறித்துக்கொண்டே இருக்கின்றன.

இது புனைவு அல்ல. நிஜம். மரணத்தைக் கண்களுக்கு முன் காண்பவனின் வரிகள். விசையாய் நம்மை அறைகின்றன. எந்த தத்துவம் இதற்கு நீதி சொல்ல முடியும்?  முட்டி மோதுகின்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?ஆனால் இது ஒரு அழுகாச்சி புத்தகம் அல்ல. மரணத்தை தீரமாக எதிர்கொள்கிறார் பால். Matter of Fact  தொனியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் மெலோ டிராமா கிடையாது. 

பால் சொல்கிறார்.  Death may be a  one time event. But living of a terminal illness is a process.   ஒவ்வொரு படியும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளப்படுகிறது.  ஏமாற்றத்தோடு முடிகிறது. இருந்தாலும் அடுத்த படியையும் நம்பிக்கையோடுதான் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்தப் பயணத்தில் பாலின் குடும்பம் உறுதியோடு துணை நிற்கிற்து. புற்று நோய் என்று தெரிவதற்கு முன் அவர் மனைவி லூசியோடு ஒரு சிறிய கருத்துவேறுபாடு உண்டாகிறது. பிரியலாமா என்று கூட யோசிக்கிறார்கள். ஆனால் கணவருக்கு புற்று நோய் என்று தெரிந்ததும் லூசி  ஊசலாடவே இல்லை. பால் மறுமணம் செய்யச் சொல்வதை பொருட்படுத்தவே இல்லை. குழந்தை வேண்டுமா என்கிற முடிவை பால் எடுக்க வேண்டும் என்று லூசியும், லூசிதான் எடுக்க வேண்டும் என்று பாலும் நினைக்கிறார்கள். கடைசியில் செயற்கை முறையில் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.  CADY  என்று பெயரிடுகிறார்கள். அந்த குழந்தையை அவர்கள் வளர்த்துகிற முறையும் , பாலுக்கும் அந்த குழந்தைக்கும் உள்ள உறவும் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்தின் ஆரம்பப்பக்கங்களில் இந்திய வம்சாவளியினர் அமெரிக்க சிறு நகரங்களில் வாழ்கிற பால்ய காலங்கள் அழகாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. படிக்க சுவரசியமாக இருக்கிறது. அமெரிக்க கல்லூரி வாழ்வையும் புரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் புத்தகங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்: புத்தகங்களை பரிசளிக்கிறார்கள். ஏக்கப் பெருமூச்சு வருகிறது.

பாலின் புற்று நோய் மருத்துவர் எம்மா, பாலை விரும்பினால் ,அறுவை சிகிட்சை நிபுணர் தொழிலை மேற்கொள்ளச் சொல்கிறார். முதல் அறுவை சிகிட்சையின் போது பலவீனம் காரணமாக பாதியிலேயே வேறு ஒரு மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் அடுத்த சர்ஜரிகளில் திறம்பட பணி பிரிந்து உயிர்களைக் காப்பாற்றுகிறார். பெருமிதம் கொள்கிறார். சர்ஜரிகளிலும் , நரம்பியல் சம்பந்தமான ஆய்வுகளிலும் சாதனைகள் நிகழ்த்த திட்டங்கள் தீட்டுகிறார். ஆனால் புற்று நோய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறது.

மருத்துவத் துறையின் வாழ்வியல் நுணுக்கமாக விவரிக்கபட்டிருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சிக்காக சாதாரண மக்கள் தங்கள் உடல்களை தானமாகத் தரும்போது , நன்றாக விவரம் தெரிந்த பல மருத்துவர்கள் தங்கள் உடல்களைத் தானமாகத் தருவதில்லை என்கிறார். மூளையில் ஒரு 2  mm  தவறாக ஆழமாக கத்தியை சொருகி விட்டால் , நோயாளியின் விதியே மாறி விடக் கூடும். மிகச் சிக்கலான வேலை  மூலை நரம்பியல் நிபுணர் வேலை.

 பால் இந்த புத்தகத்தை முடிக்க முடியவில்லை. லூசி தான் எழுதி முடிக்கிறார். அவர் மொழியும் நன்றாக இருக்கிறது.எப்படி அவரும், பாலும், குடும்பமும், மரணத்தின் நொடிகளிலும், ஜோக்குகளைப் பகிர்ந்துகொண்டு பாலின் இறுதி நிமிடங்களில் இனிமை சேர்த்தார்கள் என விவரித்திருக்கிறார். பாலின் இறுதி நொடிகளில் எப்படி அவர் உடல் இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன , எப்படி பால் தைரியமாக சுவாசிக்கும் இயந்திரத்தை நிறுத்தச் சொன்னார் என்று அவர் நுணுக்கமாக எழுதியதை கண் கலங்காமல் படிக்க முடியாது. அவரின் வார்த்தைகளிலே “Paul’s decision not to avert his eyes from death epitomizes a fortitude we don’t celebrate in our death avoidant culture. His strength was defined by ambition and effort but also by softness, the opposite of bitterness. He spent much of his life wrestling with the question of how to live a meaningful life and his book explores that territory.

 

 

எனக்குப் பாலின் பல வரிகள் பிடித்திருந்தன. 

If the unexamined life was not worth living, was the unlived life worth examining? 

 As a resident my highest ideal was not saving lives but guiding a patient or family to understanding of death or illness.

Even if I am dyeing , until I actually die, I am still living.

You can’t ever reach perfection. But you can believe in an asymptote towards which you ceaselessly striving.

The main message of Jesus is that mercy trumps justice every time.

Learning to live with the awareness of death is learning to live with grace

 

 நிச்சயம் படியுங்கள். வாழ்வு, மரணம் பற்றி சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். சில புதிய கேள்விகளும்.......

கருத்துகள் இல்லை: