பக்கங்கள்

புதன், 15 அக்டோபர், 2025

BREAKING BAD

கடைசியாக நானும் Breaking Bad  பார்த்து விட்டேன். 2008 -லிருந்து 2013 வரை வந்த தொடரை இப்போது தான் பார்க்க முடிந்தது. Netflix-ல் இருக்கிறது. தொலைக்காட்சித் தொடர்களிலேயே தலை சிறந்த ஒன்று என்று பலரால் பாராட்டப்பட்டது. பாராட்டுக்குத் தகுதியானது தான். 

ஒரு சாதாரண மசாலாத் தொடர் என்று விட முடியவில்லை. பல ஆழங்கள் இருக்கின்றன. Breaking Bad என்றால் கெட்டுப் போதல் அல்லது கெட்டவனாக மாறுதல் என்று தமிழ்ப் படுத்தலாமா? 

வால்டர் வைட் ரசாயனத் துறையில் தலை சிறந்த அறிவாளி, ஆழ்ந்த புத்திசாலி , கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் ஒரு சாதாரண ஆசிரியராக இருக்கிறார். மாலை வேளைகளில் கார்கள் சுத்தம் செய்யும் கம்பனியில் வேலை செய்கிறார். கர்ப்பிணியான அழகான மனைவிநரம்பியல் குறைபாடு உள்ள மகன் என்று சிறு குடும்பம். வாழ்க்கை அமைதியாகப் போகிறது. ஆரம்ப காலத்தில் நண்பர்களோடு Grey Matter Technologies  என்ற கம்பனி  தொடங்கியிருக்கிறார். பிறகு கருத்து வேறுபாடுகளால் வெளியே வந்து விட்டிருக்கிறார். ஆனால் அது மகத்தான வெற்றி பெற்று பங்குதாரர்கள் கோடீஸ்வரர்களாகிறார்கள்.  வால்ட் புழுங்குகிறார். இவருக்கு கான்ஸர் வருகிறது. சிகிட்சை செய்ய பணமில்லை. மெத் என்று அழைக்கப்படுகிற மெத்தம்பெட்டமைன் என்கிற போதைப் பொருள் தயாரிக்க ஆரம்பிக்கிறார். முதலில் சிகிட்சைக்காகபிறகு குடும்பத்திற்காக என பணம் சம்பாதிக்க தொடங்கியது எப்படி தன் ஈகோவிற்காக என்று மாறுகிறது என்கிற அந்த ஆளுமை மாற்றத்தை நுணுக்கமாக சித்தரித்திருத்திருக்கிறார்கள்.

Breaking Bad -n சிறப்புகளை நிறையப் பேர் பதிவிட்டிருக்கிறார்கள். நான் வியந்த சில விசயங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதலில் அந்த வால்டர் வைட் ஒரு இலக்கிய வாசகர். அவரிடம் அப்பரண்டிஸாக சேரும் இளைஞன் அவருக்கு வால்ட் விட்மனின் Leaves of Grass கவிதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறான். அதை வால்டர் வைட் கழிவறையில் தான் வைத்திருக்கிறார். அங்கேதான் அவரும் அவர் போலீஸ்கார மச்சினன் ஹான்கும் அந்த புத்தகத்தைப் படிக்கிறார்கள். கிரிமினலும், போலீஸும் இலக்கியம் படிப்பது எனக்குப் பிடித்திருந்தது. அந்த புத்தகத்தினால்  வால்டர் வைட் மாட்டிக்கொள்கிறார்தான். எனக்கு ரொம்ப பிடித்தது கழிவறையில் புத்தகம் வைக்க ஸ்டாண்ட் எல்லாம் வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கழிவறை!. அமெரிக்கர்கள் கழிவறையில் புத்தகம் படிப்பார்கள் என்பது தெரிந்ததும் எனக்கு அமெரிக்கர்களை பிடிக்க ஆரம்பித்து விட்டது. நானும் கழிவறையில் புத்தகம் படிப்பேன். எங்கள் வீட்டில் சரஸ்வதியை அவமதிப்பதாக திட்டுவார்கள். எனக்கு இப்போது சப்போர்ட் கிடைத்துவிட்டது. ஆனானப்பட்ட வால்ட்டே இந்த பழக்கத்தினால்தான் சிக்கிகொள்கிறார்.

வால்ட் ஒரு சாதாரண Chemistry  ஆசிரியர். ஆனால் எவ்வளவு பெரிய வீடு வைத்திருக்கிறார். நீச்சல் குளம் வேறு. இருந்தாலும் மருத்துவ செலவுக்கு பணம் பத்தவில்லை. போதை மருந்து தயாரிக்க வேண்டிய நிர்பந்தம். அதிலும் பயங்கர Quality conscious. 96% Purity லெவலில்   வால்டர் வைட் ஒருவரால் தான் தயாரிக்க முடிகிறது. அதற்கு பயங்கர டிமாண்ட். அதே வேண்டும் என்று எல்லோரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஒரு போதைப் பொருளுக்கு அவ்வளவு  தர எதிர்பார்ப்பு.  ஒரு ஈ லேபுக்குள் வந்து விடுகிறது. Contamination ஆகி விடும் என்று ஒரு எபிஸோட் முழுவதும் சுத்தம் செய்கிறார் வால்டர் வைட்..  Export Quality  என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று எங்கள் மில்லில் மிரட்டியது நியாயம் தான் போல.

     ஒரு அவசரமான தருணத்தில் தாய் மகனை அழைத்துக்கொண்டு காரில் வருகிறாள். அவன் அப்பா ஒரு போதை மருந்து கிரிமினல் என்று தெரிந்து பயங்கர வருத்தத்தில் இருக்கிறான். இருந்தாலும் தாய் சீட் பெல்ட் போடச் சொல்லி வற்புறுத்துகிறாள். சீட் பெல்ட் இல்லாமல் பயணம் செய்வது  பாதுகாப்பு இல்லை என்கிறாள். அதேபோல் குடும்பத்தில் ஒரு விசயம் விவாதிக்கும் போது ஒரு தலயணை வைத்துக் கொள்கிறார்கள். யாரிடம்  தலயணை இருக்கிறதோ அவர்தான் பேச வேண்டும். மற்றவர் குறிக்கிடக்கூடாது. பேசுகிற விசயம்  புற்று நோய் சிகிட்சை.  இதற்கே இப்படி கட்டுப்பாடு. அமெரிக்க குடும்பங்களின்  பிணைப்பும்  நமக்கு சற்றும் குறைந்தது அல்ல என்பதும் நமக்கு தெரிய வருகிறது. அவர்கள் சமூக ஒழுக்கம், பழக்க வழக்கங்கள் சிறு சிறு சம்பவங்கள் மூலம் தெரிய வரும் போது ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.

வால்ட் குற்றவாளியாவதன் உளவியல் காரணிகள், படிப்படியான குண மாற்றங்கள் திறம்பட எடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா எபிசோடும் உலகத்தரம். நிச்ச்யம் பார்க்க வேண்டிய ஓன்று. அடுத்தது Better call Saul பார்க்கலாம் என இருக்கிறேன். அது இதன் முதல் பாகமாம்.

கருத்துகள் இல்லை: