பக்கங்கள்

திங்கள், 6 அக்டோபர், 2025

கடல்புறா

பணி ஓய்வு பெற்ற போது சில நண்பர்கள் நான் ஒரு புத்தகப் பிரியன் என்று தெரிந்ததால் புத்தகங்களைப் பரிசளித்தார்கள். அவர்கள் இலக்கியம் படிப்பவர்கள் அல்ல. அன்பினால் கொடுத்தார்கள். ஒருவர் வேள் பாரியையும், ஒருவர் கடல் புறாவையும் கொடுத்தார். 

              கடல் புறா பழைய நினைவுகளை கிளறி விட்டது.  நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நூலக உறுப்பினராகி விட்டேன். அதில் எங்கள் தமிழ் ஆசிரியருக்கு ரொம்பப் பெருமை.  எல்லா மாணவர்களுக்கும் என்னை ஒரு முன் உதாரணமாக காட்டுவார்.  நூலகம் செல்லும் போது சாண்டில்யன் நாவல்களுக்கு கிராக்கி அதிகம் இருப்பதை கவனித்திருக்கிறேன். திரும்பி வந்ததும் உடனே போய் விடும். கிடைக்கவே கிடைக்காது. சிலர் நூலகரிடம் சொல்லி வைத்திருப்பார்கள். வேறு ஒருவர் எடுத்துப் போய்விட்டார் என்று தெரிந்ததும் நூலகர் சாமியிடம் “ என்ன சாமிசொல்லியிருந்தேனே “ என்று அலுத்துக்கொள்வார்கள். அப்படி என்ன இருக்கிறது சாண்டில்யன் புத்தகங்களில் என்று தோன்றும்.

                  எங்கள் ஊரில் ஒரு பூசாரி இருந்தார். அவர் கட்டுக் கட்டாய் புத்தகங்கள் வைத்திருப்பார். அழகாக பைண்டு செய்யப்பட்ட சாண்டில்யன் புத்தகங்கள் அவர் வீட்டில் நிறைய இருக்கும். அவர் ஒரு சாண்டில்யன் ரசிகர். அவரிடம் புத்தகங்கள் வாங்குவதற்காகவே நாங்கள் சில பையன்கள் ஒரு குரூப்பாக அவரிடம் சுற்றிக்கொண்டு சிறு ஏவல் வேலைகளை செய்துகொண்டிருப்போம்.  அதில் சிலர் சுண்டலுக்காகவும்தான். நான் அவரிடம் இருந்த எல்லா புத்தகங்களையும் அவர் வீட்டிலிருந்தே படித்துவிட்டேன். கடல் புறா நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது படித்தேன். சரசரவென்று வேகமாக போகும் திருப்பங்கள் நிறைந்த கதை. ஓரு ஞாயிறன்று அவர் திண்ணையில் படுத்துக்கொண்டு மூன்று பாகங்களையும் படித்துவிட்டேன். சாப்பிடக்கூட போகவில்லை. அப்பா வந்து தலையில் ஒன்று போட்டு இழுத்துச்சென்றார். சில நாட்கள் கடலிலேயே கடல்புறாவின் பாய் மரத்தில் கம்பீரமாய் நின்றுகொண்டிருப்பேன். பாய் மரச் சீலைகள் பறந்து கொண்டிருக்கும். இல்லாத மீசையை தடவிக்கொண்டு இளைய பல்லவனாய் கற்பனை செய்துகொண்டு போர்த்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருப்பேன்.

சாண்டில்யன் நாவல்களில் ஒரு அத்தியாயம் ஆறு பக்கங்கள் என்றால் மூன்று பக்கங்கள் வர்ணனையாக இருக்கும். முதல் இரண்டு வரிகளும் கடைசி இரண்டு வரிகளும் படித்துவிட்டால் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளலாம். வர்ணனைகளை தள்ளி விடுவேன். அடுத்த மூன்று பக்கங்களும் பட்டாசாக கதை போகும். இடை இடையில் வர்ணனைகள் இடை பற்றியதாய் இருக்கும். அந்த வயதில் அது போர் அடித்தது. டிப்ளமா மூன்றாம் வருடம் இரண்டாம் முறை படித்தபோது கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. அவர் கதைகளின் பெண் வருணனைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருந்தது போல் கடும் விமரிசனங்களும் இருந்த. அவர் அதை சிருங்கார ரசம் எப்படி ஒரு ஒரு இலக்கிய முறை என்று காளிதாசன்கம்பன் எல்லோரையும் சாட்சிக்கு அழைத்து பக்கம் பக்கமாக எழுதுவார். இன்றைய திகட்டும் இணைய உலகில் அவருடைய  SOFT PORN  வளவள வரிகளாகவே கடந்து போகப்படும்.

ஒரு  Nostalogic  உணர்வுடன் தான் கடல்புறாவை கையில் எடுத்தேன். இப்போதும் சுவாரசியமாகவே படிக்க முடிந்தது என்பது சாண்டில்யன் ஒரு வெற்றிகரமான வணிக எழுத்தாளர் என்பதற்கு சாட்சி.

1967 -ல் முதல் பதிப்பு. 2025 -ல் எழுபத்தி ஏழாம் பதிப்பு என்பது சாண்டில்யன் நடையில் சொன்னால் சிறு பத்திரிக்கை இலக்கிய எழுத்தாளனுக்கு கோபப் பெருமூச்சு வரவழைக்கும் விஷயம். .

கதா நாயகன் ஒரிஸா போகிறான்: (கலிங்கம்). மலேசியா போகிறான். (கடாரம்) இந்தோனேஸியா போகிறான்.(ஶ்ரீ விஜயம்). சீனாக்காரர்கள் வருகிறார்கள்: அரேபியர்கள் வருகிறார்கள். எல்லோரும் இலக்கண சுத்தத் தமிழ் பேசுகிறார்கள். பேசிக்கொண்டிருக்கையிலேயே LOGIC பிரச்சினை சாண்டில்யனுக்கு ஞாபகம் வந்து  அவர்கள் மொழியில் பேசுவது போல் எழுதிவிடுகிறார். அது ஒன்றும் பிரச்சினை இல்லை. கதா நாயகனுக்கு எல்லா மொழிகளும் புரிகிறது. நமக்கு ஆந்திரா போவதற்குள்ளேயே நாக்கு தள்ளி விடுகிறது.

நாற்பது வருடங்கள் கழித்துப் படிப்பதாலாயோ என்னவோ கதை முழுவதும் மறந்து விட்டது. ஆகவே ஒவ்வொரு திருப்பம் வரும் போதும் ஆ என்று ஆச்சரியப்பட வைத்தது. விரு விரு என்று படித்தேன். மூன்று பாகங்கள்ஆயிரத்து அருநூறு பக்கங்களை விட்டு விட்டு நான்கைந்து மணி நேரத்தில் படித்து விட்டேன் என்று  நினைக்கிறேன். என்னுள்ளே உள்ள பாலகன் இன்னும் சாகவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

கதை எல்லா சாண்டில்யன் நாவல்களிலும் ஒன்று தான். ஓரு தமிழ் வீரன் அன்னிய நாட்டு அரசுகளை வீழ்த்துகிறான். போகிற இடத்திலெல்லாம் அழகிகள் அவனை வீழ்த்துகிறார்கள் அல்லது வீழ்கிறார்கள். சாண்டில்யனுக்கு பலதார உறவு என்பது பெரிய கவர்ச்சி என்று தெரிகிறது. காந்தர்வ விவாகம் தெரியுமா?  Instant Marriage.  ராஜ வம்சத்திற்கு அது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாம்!

சாதாரணமாக சாண்டில்யன் கதைகளில் ஒரு மந்திரி அல்லது துறவி பயங்கர புத்திசாலியாக வருவார். இதில் காணோம். கதா நாயகனே அந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான்.

ஒரு காலத்தில் இத்தகைய வணிக நாவல்களை ஒரு பெரிய நச்சு சக்தி என்று இலக்கிய வாதிகள் எதிர்த்தார்கள். அதற்கான தேவை இருந்தது. காரணம் இலக்கியம் பற்றிய பிரக்ஞை தமிழ் உலகில் இல்லை. வணிக எழுத்துவணிக கலை ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும். இலக்கியத்தின் மூலம் தான் வாழ்க்கையின் ஆழங்களைஅர்த்தங்களை உணர முடியும். நிகர் வாழ்க்கை வாழ முடியும். ஆனால் எல்லாராலும் உடனடியாக இலக்கியத்துக்குள் வந்துவிட முடியாது. அதற்கான வாசிப்புப் பயிற்சியை வணிக எழுத்து தரும். ஆகவே அதற்கான இடம் மதிப்பு இருக்கிறது என்கிறார் ஜெயமோகன். எனக்கும் அதே கருத்துதான். என் படிப்பு ருசியை வளர்த்தியவர்கள் சாண்டில்யன்கல்கிசுஜாதா போன்றவர்கள். அவர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்தான்.

அதேபோல் ஒரு அலையாய் வந்தவர் ரோலிங். ஹாரி போட்டர் கதைகள் படிப்பு ஆர்வத்தை ஒரு தலைமுறையினரிடம் புயல் போல் மூட்டியது. என் மகன் ஹாரி போட்டர் கதைகளை இரவும் பகலுமாக படித்தான். எவ்வளவு ஆழமாக படித்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள ஹாரி போட்டரின் அங்கிள் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டேன். டிரில் தயார் செய்யும் கம்பனி  வைத்திருக்கிறார் என்றான். அசந்து போனேன்.

படிப்பின் ருசியையும் ஆனந்தத்தையும் அறிந்து கொள்ள ஹாரி போட்டர், சாண்டில்யன் போன்றவர்கள் ஒரு துவக்கப்படி. அந்த வகையில் இவர்கள் முக்கியமானவர்கள். ஆனால் ஒரு சிலரே இந்தப் படிகளைத் தாண்டி இலக்கிய சிகரங்களில் ஏறுகிறார்கள். படிப்பின் சுவையை தக்க வைக்கும் சூழல் இருந்தால் இவர்கள் எண்ணிக்கை உயரலாம்.

சாண்டில்யனை எண்பது தொன்ணூறுகளில் மாணவர்களாக இருந்தவர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என நினைக்கிறேன். இன்றைய இளைஞர்கள் படிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் படிப்பது போல நவீனப்படுத்தப்பட்ட சாண்டில்யர்கள் படிப்பின் தித்திப்பை ஊட்ட நிச்சயம் தேவை. இனிப்பு அதிகம் ஆனால் நோய் வரும் என்று காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள். நல்ல உணவிற்கு வந்து சேர்வார்கள்.

கருத்துகள் இல்லை: