பக்கங்கள்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

ZORBA THE GREEK

பணி ஒய்வு பெற்றதும் படித்த முதல் புத்தகம் Zorba, the Greek என்பது தற்செயலாக அமைந்த விஷயம். ஆனால் சரியான  நேரத்தில் சரியான புத்தகம்தான். ஒஸோ, சாரு, ஜெயமோகன் எல்லோரும் சிலாகித்து எழுதியிருந்ததால்  படித்தேன். Nikos Kazantzakis  எழுதியது. படிக்க கஷ்டமான புத்தகம்தான். அவ்வளவு சுவாரசியமான நடை என்று சொல்ல முடியாது. பொறுமையாகத்தான்  படிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் படிக்க முடிந்ததற்கு காரணம் இடை இடையில் வருகிற சில அபாரமான பகுதிகள். படித்து முடிந்ததும் படிக்க வேண்டிய புத்தகம் தான் என்று தோன்றியது.

கதாநாயகனின் பெயர் சொல்லப்படுவதில்லை. புத்தகம் படித்துக் கொண்டு இலக்கற்ற வாழ்க்கை வாழும் ஒரு அறிவு ஜீவி, போர் அடிப்பதால் க்ரேட் என்கிற கிரேக்க கிராமம் ஒன்றில் சுரங்க வேலை செய்யப் புறப்படுகிறான். வழியில் அறுபத்தைந்து வயதுள்ள ஸோர்பா என்பவன் தன்னையும்  அழைத்துச் செல்லும்படி கேட்கிறான். எதற்காக என்றால் அற்புதமான சூப்புகள் செய்வேன் என்கிறான். இவனும் சம்மதிக்கிறான். இருவரும் சேர்ந்து அந்த கிரேக்க கிராமத்தில் சுரங்கத்தில் நிலக்கரி எடுக்கும் வேலை செய்வதுஅங்குள்ள பெண்களுடனான அவர்கள் உறவுகள்மடாலயத்தில் இருக்கும் துறவிகளுடன் தொடர்பு என ஒரு வாழ்க்கைச் சித்திரம் விரிகிறது. படிக்காத சோர்பாவின் வாழ்க்கைச் சித்தாந்தம் ஒரு மகத்தான தத்துவம். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் தேன் போல அருந்துபவன் அவன். அந்தந்த நொடியில் வாழ்கிறவன். அவன் வாழ்வின் தத்துவத்தை அழகான இரண்டு சித்தரிப்புகளில் விவரிக்கிறார் கஸந்த்ஸாகிஸ்.

ஸோர்பா தன் முதலாளியிடம் சொல்கிறான். “பாஸ்ஓரு நாள் சிறிய கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். 90 வயதுள்ள தாத்தா ஒருவர் ஒரு பாதாம் செடியை நட்டுக் கொண்டிருந்தார். என்ன தாத்தா செடி நடுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார்’ “மகனேநான் இறக்கவே போவதில்லை என்பது போல காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன் “. நான் சொன்னேன “ நான் அடுத்த நிமிடத்தில் இறந்து போய் விடுவேன் என்பது போல காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன். யார் இதில் சரி பாஸ்?”  முதலாளியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அவர் நினைக்கிறார். இரண்டுமே  ஒரே சிகரத்துக்கு இட்டுச் செல்லும் இரு பாதைகள். எது சரி என்று எப்படி சொல்ல முடியும்?

கஸாந்த்ஸாகிஸ் இந்த நாவலில் பெண்களை சித்தரிக்கும் விதம் இந்தக் காலத்தில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. மிகவும் பலவீனமானவர்களாக பூக்களைப் போல கையாள வேண்டியவர்களாக சித்தரித்திருக்க்றார். ஓரு விவேகமான பலமான பெண் கதாபாத்திரம் ஒன்று கூட இல்லை. 1952-ல் எழுதப்பட்ட புத்தகம். இருந்தாலும் பெண் பாத்திரங்களின் சித்தரிப்பு ஏமாற்றம்தான்.

தன் இளமை வயதைக் கடந்த சத்திர உரிமையாளரான டேம் ஹார்டென்ஸிடம் ஸோர்பா காட்டுகிற காதல் வியப்பூட்டும். அவள் இளமைப் பருவத்தை மீண்டும் அவளில் விதைக்கிறான். அவள் மனதில் மீண்டும் மலர்கள் பூக்கின்றன. இளம்பெண்ணாகிறாள். அவளை திருமணம் செய்து கொள்கிறான். இருந்தாலும் இறந்து போகிறாள். ஸோர்பா மிகவும் துயர் அடைகிறான். ஆனால் சீக்கிரம் மீண்டு விடுகிறான். அவன் சொல்கிறான். நேற்று நடந்ததை நான் நினைப்பதை நிறுத்திவிட்டேன். நாளை என்ன நடக்கும் எனக் கேட்டுக்கொள்ள மாட்டேன். இந்த நிமிடத்தில் என்ன நடக்கிறதோ அதில்தான் எனக்கு அக்கறை. ஸோர்பா இப்போது என்ன செய்கிறாய்தூங்குகிறேன். ஆனந்தமாக தூங்கு. என்ன செய்கிறாய் ஸோர்பாவேலை செய்கிறேன். நன்றாக வேலை செய். இப்போது என்ன செய்கிறாய் ஸோர்பா? முத்தமிடுகிறேன். நன்றாக முத்தமிடு. மற்ற எல்லாவற்றையும் மறந்து விடு. உலகில் நீயும் அவளும் மட்டும் தான் இருக்கிறீர்கள்.  இந்த நொடியில் உலகில் வேறு ஏதும் இல்லை. இதுதான் ஸோர்பாவின் வாழ்க்கை கோட்பாடு.

மற்றொரு ஆழமான நிகழ்வு நாவலில் வருகிறது. கதாநாயகன் ஒரு பட்டாம்பூச்சி அதன் கருமுட்டையிலிருந்து வெளி வரும் தருணத்தை கவனிக்கிறான். முட்டையில் லேசான விரிசல் தெரிகிறது. ஆனால் அது உடைய நேரமாகிறது. இவனுக்குப் பொறுமையில்லை. மெதுவாக முட்டை மேல் ஊதுகிறான். அது உடைகிறது. பட்டாம்பூச்சி வெளி வருகிறது. ஆனால் அதன் சிறகுகளை அதனால் விரிக்க முடியவில்லை. இவன் அதன் மேல் மீண்டும் மீண்டும் ஊதிப் பார்க்கிறான்.  ஆனால் பலனில்லை. இவன் உள்ளங்கையில் அது இறக்கிறது. அந்த பட்டாம்பூச்சியின் எடை மிக கனமாக அவன் மனதை அழுத்துகிறது. அததற்கு அததனான நேரம் தேவை. அதை கொடுத்தே ஆக வேண்டும். இயற்கையின் விதிகளை மீறுவது மகத்தான பாவம் என உணர்கிறான்.

மடாலயத்தில் நடக்கிற சம்பவங்கள் மூலம் மதங்களின் இறுக்கமான விதிகளின் அபத்தங்களை அங்கதமாக விவரிக்கிறார் கஸந்த்ஸாகிஸ். கடைசியில் ஒரு துறவியே மடாலயத்தை தீ வைத்துக் கொளுத்துகிறார்.

நிலக்கரிப்பாறைகளை சரிவு  மூலம் கீழே கொண்டு வரும் திட்டத்தை செயல் படுத்துகிறான் ஸோர்பா. பெரும் தோல்வி. அதைப் பற்றிக் கவலைப்படாமல் இயற்கையின் பெரும் நடனமாக கருதி நடன்மாடுகிறார்கள் இருவரும்.

பல அடுக்குகள் கொண்ட ஒரு ஆழமான நாவலாக மிளிர்கிறது ஸோர்பா தி க்ரீக். படிக்க வேண்டிய இலக்கியம்தான்.

 

கருத்துகள் இல்லை: