Bad Girl – ஒரு முக்கியமான திரைப்படம் என்று நினைக்கிறேன். காரணம் பெண்களின் உணர்வுகளை, பதின்ம வயதுப் பெண்களின் பாலுணர்வு மலர்ச்சியிலிருந்து அவர்கள் முப்பது வயது ஆகும்வரை அடையும் உணர்வு மாற்றங்கள் வரை ஒரு பெண்ணின் பார்வையில் விவரித்த முதல் படைப்பு இது. பதின்ம வயதுப் பையன்களின் வேட்கைகளை பாலு மகேந்திரா அழியாத கோலங்களில் காண்பித்துவிட்டார். ஆனால் இளம்பெண்களின் மனங்கள் ஆணின் அருகாமையைஎப்படி உணரும் என்பதை உண்மையாகவே இந்தப் படம் சித்தரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். வர்ஷா பரத் என்கிற பெண்னின் வரிகள், இயக்கம், குரல் எல்லாமே இது ஒரு Sincere effort என்று தோன்ற வைக்கின்றன்.
அஞ்சலி சிவராமன் ரம்யாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது ஒரு clitche. ஆனால் வேறு வகையில் சொல்லத் தோன்றவில்லை. அவர் தாயாராக வருகிற சாந்திப்பிரியாவின் நடிப்பும் பிரமாதம்.
பள்ளிப் பருவத்திலேயே ஒரு ஆணோடு காதல் கொள்வது, கல்லூரிப் பருவத்தில் பாலுறவு வைத்துக்கொள்வது என்பவற்றின் மீது நமக்கிருக்கும் மனத்தடைகளத் தாண்டி அந்தப் பெண்ணின் மீது நமக்கு ஒரு பிரியம் ஏற்படுவது அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. வெறும் காமம் மட்டுமல்ல , தன் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு துணைக்கான ஏக்கம், சுதந்திர வேட்கை எல்லாம்தான் அவள் அலைக்கழிப்புகளுக்குக் காரணம் என்று புரிகிறது. ஆனால் அவள் தன் மூன்றாம் காதலனைப் பிரிந்ததற்கான காரணம் வலுவாக சொல்லப்படவில்லை. முதல் காதலன் அப்பா அம்மா மீது உள்ள பயம் காரணமாக வீட்டை விட்டு ஒடி வரப் பயப்படுகிறான். இரண்டாம் காதலன் ஒரு பொறுக்கி. கதாநாயகி சரியான துணை இல்லாததால்தான் அப்படி இருக்கிறான், தன்னால் அவனை திருத்திவிட முடியும் என்று தப்புக்கணக்குப் போட்டு ஏமாந்து விடுகிறாள். ஆனால் மூன்றாம் காதலனைப் பிரிய காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் அப்படி ரொம்ப “ஸ்ட்ரிக்ட்”, அநியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. பாட்டி இறந்து போகிற போது உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி ஜாதி மாறி கல்யாணம் செய்த பெண்ணை அனுமதிக்கிற அளவிற்கு முற்போக்காகவே இருக்கிறார்கள். பதினைந்து வயதில் பெண் ஓடிப்போனால் பெற்றோர்கள் சும்மா இருக்க வேண்டுமா, வளர்க்கிற பூனை வெளியா போனால் மற்ற விலங்குகள் வேட்டையாடுமே, பாதுகாப்பில்லையே என்று மகள் தவிப்பது போலத்தானே எங்களுக்கும் இருக்கும் என்று அந்த தாயார் புலம்புவதும் நியாயமாகத்தான் படுகிறது. அந்த தாயார் அவர் ரிடயர் ஆகும்போது தன் மாணவிகளிடம் IIT, அண்ணா யுனிவெர்சிடியில் படித்து பெரிய ஆளாகுங்கள் என்று சொல்கிறார். அவர்கள் நாங்கள் காமர்ஸ் மேடம் என்கிறார்கள். அதனால் என்ன? அவற்றில் படித்தவர்களை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். அப்போது புன்னகை வருகிறது.
இயக்குநர் பிராமண சமூகத்திலிருந்து வந்ததால் கதை பிராமண சூழலில் நடப்பதாக காண்பித்திருக்கிறார். அது இயல்பாகவே இருக்கிறது.
இது ZEN -Z பெண்கள் கதை என்கிறார்கள். ஒரு பெண் எல்லா ஆண்களையும் கொன்று விட வேண்டும் என்கிறாள். மற்றொரு பெண்ணோ ஆனால் ஆண்கள் தருகிற செக்ஸ் பிடிக்கிறதே என்கிறாள். இப்படி சில Zen -Z தூவல்கள் இருக்கின்றன. ஆனால் எனக்குத் தெரிந்து எல்லா ஜென் Z பெண்களும் இப்படி பூனையோடு சுதந்திர வாழ்க்கை வாழ விரும்புவதில்லை. பெரும்பாலும் நிறைய உலகியல் புரிதலோடு இருக்கிறார்கள். இது மிகுந்த நுண்ணுணர்வு உள்ள , சுதந்திர வேட்கை உள்ள ஒரு special character ஐப் பற்றிய படம். இத்தகையப் பெண்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வார்கள். ரம்யா ஒரு தனி வீடு பார்த்து பூனையோடு வாழ ஆரம்பிக்கும் போது இனியாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று ஒரு பெண்ணின் தந்தையாக என் மனம் ஆசைப்படுகிறது. அதே சமயம் இந்த வாழ்க்கை சந்தோஷமாக அமையுமா என்று சந்தேகமும் படுகிறது. படம் பார்க்கலாம். Hotstar-ல் இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக