பக்கங்கள்

புதன், 31 டிசம்பர், 2025

BETTER CALL SAUL

BETTER CALL SAUL  பார்த்து விட்டேன். BREAKING BAD, BETTER CALL SAUL, GAME OF THRONES மூன்றையும் தொலைக்காட்சித் தொடர்களில் தலை சிறந்தவையாக பலர் சொல்கிறார்கள். மூன்றையும் பார்த்து விட்ட திருப்தி எனக்கு. இத்தகைய பாராட்டுகளுக்குத் தகுதியான தொடர்கள்தான். வெறும் பொழுதுபோக்கு வணிகத் தொடர்கள்தான் என்று தள்ளிவிட முடியாத தரத்தில்தான் இருக்கின்றன மூன்றும். இந்த மூன்றின் தர வரிசை பற்றி நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. எனது வரிசை BREAKING BAD, BETTER CALL SAUL    GAME OF THRONES Better call Saul இரண்டாம் இடத்திற்கு வருவதற்கு காரணம் சில பாகங்கள் இழுவையாக இருப்பதுதான். ஐந்து ஸீஸனில் முடித்திருக்கலாம்

இந்த OTT  தொடர்கள் நான்கைந்து வருடங்கள் முன்பு பிரபலமாக வந்தபோது வேலை நெருக்கடி காரணமாக நான் பார்க்கவில்லை. நான் ரொம்ப லேட்டு. இவ்வளவு தாமதமாக பார்த்துவிட்டு விமர்சனம் எழுத வேண்டுமா என்று தயங்கத்தான் செய்தேன். ஆனால் என் நண்பர்களில் பலர் பார்க்கவில்லை என்று தெரிந்ததால் எழுதுகிறேன். இந்த மூன்று தொடர்களை நிச்சயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

 BREAKING BAD இல் வருகிற ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரம் Saul.  அந்த கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி , ஆறு seasons வருகிற ஒரு தொடர் எடுத்திருக்கிற வின்ஸ் கில்லிகன் மற்றும் பீட்டர் கௌடின் புத்திசாலித்தனம் பாராட்டப்பட வேண்டியது. எவ்வளவு அற்புதமாக  கதை அமைத்திருக்கிறார்கள்!.  இரு சகோதரர்களுக்குள் நடக்கிற உளவியல் மோதலாக வடிவமைத்திருப்பது ஒரு  BRILLIANT STROKE.

BREAKING BAD , BETTER CALL SAUL இரண்டிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மிகப் புத்திசாலியான ஒருவன் பல காரணங்களால் வாழ்வில் தோல்விகளை, அவமானங்களைச் சந்திக்கும்போது, அவன் எந்த வழியிலும் வெற்றியை நாடத் துணியும்போது அடையும் கீழ்மையே இந்தத் தொடர்களின் அடிநாதம். 

இந்தக் கதைகளின் நாயகர்கள் கிரிமினல்கள்தான். ஆனால் அவர்கள் மீது வெறுப்பு கொள்வதை விட பரிதாபமே கொள்கிறோம். அதற்குக் காரணம் அவர்கள் சந்திருக்கிற அவமானங்கள் திறம்பட சித்தரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி அவர்களின் மனிதாபிமானப் பக்கங்களும் வெளிப்படுவதுதான். ஜிம்மி முதியோர் வழக்குகளில் ஈடுபடும்போது அவனது அன்பான அணுகுமுறை காரணமாக முதியவர்கள் அனைவரும் அவனை நேசிக்கிறார்கள். அது வெறும் நடிப்பல்ல. அவன் இயல்பு. ஒரு நஷ்டஈடு வழக்கு சீக்கிரம் முடிந்தால் ஜிம்மிக்கு (ஸால்) தேவைப்படும் பணம் சீக்கிரம் கிடைக்கும். அதற்காக பொறுப்பில் உள்ள மூதாட்டி சுயநலத்துடன் செயல்படுவதாக மற்ற முதியவர்களை நம்ப வைக்கிறான். அவர்கள் அழுத்தம் காரணமாக வழக்கும் விரைவில் முடிக்கப்பட உள்ளது. ஆனால் மற்ற பெண்கள் யாரும் அந்த மூதாட்டியுடன் பேசுவது இல்லை என்பதை ஜிம்மி உணர்கிறான். தான் தான் இப்படி எல்லாம் பொய் சொன்னது என்பது அவர்களுக்குத் தெரிய வருவது போல ஒரு நாடகம் ஆடுகிறான். வழக்கு சமரசத்திற்குப் போகாமல் நிற்கிறது. அவனுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகிறது. அதேபோல் இறுதியில் ஒரு வயதான பெண் அவனை வெளிபடுத்த அவசர உதவி பட்டனை அமுத்தும்போது அவரை தாக்க விரும்பாமல் தடுக்காமல் விடுகிறான்.அவனது மனிதாபாமானமே அவன் சிறை செல்ல காரணமாகிறது.

ஜிம்மியின் அண்ணன் சக்கின் நினைவாக கொடுக்கப்படும் உதவித் தொகைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்யும் குழுவில் ஜிம்மியும் ஒரு உறுப்பினர். ஒரு மாணவிக்கு அவள் ஒரு கடைத் திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பதால் உதவித் தொகை மறுக்கப்படுகிறது. ஜிம்மி மட்டும் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அவள் அனுபவம் அவளை மேலும் பக்குவப்படுத்தியிருக்கும் என்று வாதிடுகிறான். அவன் வாதம் நிராகரிக்கப்படுகிறது. அவன் அந்த மாணவியிடம் இப்படித்தான் நீ பழைய  நிகழ்ச்சிகளை வைத்து முத்திரை குத்தப்படுவாய். அதை எதிர்த்து போராடித் தான் மேல் வர வேண்டும். உன்னால் முடியும் என்று பேசுகிற காட்சி மனதைத் தொடுகிறது.

ஜிம்மிக்கும் அவன் அண்ணன் சக்கிற்கும் உள்ள முரண் ஆழமானது. சக் எல்லோரும் போற்றும் சட்ட மேதை. மிகுந்த படிப்பும் கடின உழைப்பும் கொண்டு முன்னேறியவர். ஆனால் அவரை எல்லோரும் மதிக்கிறார்களே தவிர அன்பு செலுத்துவதில்லை. ஆனால் ஜிம்மி விளையாட்டுப் பிள்ளை. குறுக்கு வழி, சிறு சிறு ஏமாற்று வேலைகள் மூலம் பணம் சம்பாதிப்பது என்றிருக்கிறான். ஆனால் அவர்கள் அம்மா, சக்கின் மனைவி எல்லோரும் ஜிம்மியைத்தான் நேசிக்கிறார்கள். அவன் ஒரு பகுதி நேரக் கல்வி மூலம் வக்கீலானதை சக்கினால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. ஜிம்மி தன் காதலிக்காக ஒரு தவறு செய்ததும் அவன் வக்கீல் பட்டத்தையே பறிக்க சக் திட்டமிடுகிறார். கடைசியில் அந்த உறவும் ஒரு துன்பியல் நாடகமாக முடிகிறது.

ஜிம்மியின் காதலியாக வருகிற கிம்மும் ஒரு நல்ல பாத்திரம். ஜிம்மி சிறு தவறுகள் புரிகிற போதெல்லாம் அவன் மனசாட்சியாக நிற்கிற கிம்மும் ஒரு மன அழுத்த குறைப்பு விளையாட்டாக சிறு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறாள். அவளும் ஜிம்மியும் சேர்ந்து செய்கிற ஒரு திட்டம் அவளை படிக்க வைத்த ஒரு வழக்கறிஞரின் மரணத்தில் முடிவடையும்போது அதிர்ந்து போகிறாள். நாம் இருவரும் சேர்ந்து இருந்தால்  மற்றவர்களுக்கு ஆபத்து என்று பிரிந்து போகிறாள்.

கூர்மையாக அவதானிக்கிற, திறமையாக திட்டம் தீட்டுகிற பாதுகாவலராக வரும் மைக் என்கிற முன்னாள் போலீஸ்காரர் மற்றொரு சக்தி வாய்ந்த பாத்திரம். அவரது மற்றொரு முகமான அன்பான தாத்தாவும் மனிதாபிமான இயல்பும் நன்றாக காட்டப்பட்டிருக்கிறது.

இந்த கதாபத்திரங்களும், உளவியல் நாடகங்களும் இந்த தொடர்களை  கலா சிருஷ்டி என்ற தரத்திற்கு உயர்த்துகின்றன.

நிச்சயம் பார்க்க வேண்டிய தொடர்கள் தான். ஆனால் ஒவ்வொரு தொடரும் 60 முதல் 70 மணி நேரத்தை சாப்பிட்டு விட்டன. புத்தகம் படிப்பதை இந்தப் பழக்கம் நிச்சயம் பாதித்து விட்டது. இனி இதைக் குறைத்துவிட்டு படிப்பதை அதிகரிக்க வேண்டும். Only Exceptional series or films only. பார்ப்போம்.