PRECOT மில் ஊழியர்களின் ஒரு ஒன்றுகூடல் விழாவிற்காக குன்னூர் அருகில், மாங்கொம்பை கிராமத்தில் இருக்கும் பெம்ப்ரோக் விடுதிக்கு (PEMBROKE VILLA) இரண்டு நாள் சுற்றுலாவாகச் சென்றிருந்தோம். முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்த நண்பர்களுடன் ஒரு கூடல். உணர்ச்சி பூர்வமான, ஆனந்தம் நிறைந்த கொண்டாட்டமாக அமைந்தது. தமிழ்நாட்டின் நூற்பாலைகளில் PROFESSIONALISM கொண்டு வர PRECOT, PATSPIN, PREMIER, LOYAL, RAMCO போன்ற நிறுவனங்களின் பணி பெரியது. ஒருமாதிரி உயர்தர கூட்டு வாழ்க்கையையும் குடியிருப்புகளில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதைப்பற்றித் தனியாக எழுத வேண்டும். இந்தப் பதிவில் PREMPOKE VILLAவைப் பற்றி எழுதத் தோன்றியது.
வளைந்து வளைந்து செல்லும் ஊட்டி மலைப்பாதையில் குன்னூருக்கு சற்று முன் வழி மாறி மாங்கொம்பை கிராமம் அருகே சென்றால் வரும் விடுதி. ஒரு இரண்டு மூன்று கிலோ மீட்டர்களுக்கு சரியான பாதை கூட கிடையாது. மேடும் , பள்ளமும் நிறைந்த பாதையில் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். ஆனால் செமையான பங்களா. அழகான லொகேஷன் என்று சொல்வது பெரிய under statement.
சுற்றிலும் ஆளரவமேயில்லாத தேயிலைத்தோட்டங்கள், அடர்ந்த மரங்கள் இவற்றின் மத்தியில் ஒரு வெள்ளை மாளிகை PEMBROKE VILLA. இங்கிலாண்டு வேல்ஸ் பகுதியில் BEMBRKSHIRE என்ற மாவட்டமும், BEMBROKE என்கிற சிறுநகரமும் இருக்கிறது என்று படித்தேன். அங்கிருந்து வந்த ஏதோ பிரபு கட்டியிருக்க வேண்டும். அழகாக வடிவமைக்கப்பட்ட மாளிகை. மூன்று படுக்கையறைகள். கழிவறைகள் இணைக்கப்பட்டவை. வரவேற்பறை, டைனிங் ஹால், சமையலறை. எல்லாம் விசாலமான வசதியான அறைகள். ஒவ்வொரு படுக்கயறைக்கும் ஒரு பெயர் . அவர் குழந்தைகளின் பெயராக இருக்கக் கூடும். வெளியே கூடுதலாக இரண்டு அவுட் ஹௌஸ்கள்.
யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கிருந்தோ இங்கிலாந்திலிருந்து வந்து, இந்த தேயிலை வனத்தில் வசித்த அந்தக் குடும்பத்தின் மன நிலை எப்படி இருந்திருக்கும்? என்னதான் ஒரு ஆளும் வர்க்கத்தில் இருந்து வந்திருந்தாலும் இந்த தனிமையில் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? அவர்கள் அடிமையாய் நடத்திய இந்த மக்களின் வெறுப்பை வெளியே காட்டாத , பயத்துடன் இறைஞ்சும் கண்கள் முதுகில் குத்தும்போது எப்படி உணர்ந்திருப்பார்கள்?இந்த நுன்னுணர்வுகள் அவர்களுக்கு இருந்திருக்குமா?
ஆனால் ரசிகர்கள்.! வீடு அமைந்திருக்கிற லோகேஷன், வீட்டில் இருக்கிற வசதிகள் அவர்கள் ரசனையைக் காட்டுகிறது. ஒரு புத்தக அலமாரி கூட இருக்கிறது. பியானோ போன்ற இசைக் கருவிகள் கூட இருந்திருக்கும். நூறு வருடம் பழைய ஸ்காட்ச் விஸ்கியை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்திருப்பார்கள். இனிமையான இசையைக் கேட்டுக்கொண்டு,விஸ்கியை துளித்துளியாய் ரசித்துக்கொண்டு வாழ்ந்திருப்பார்கள். பள்ளத்தாக்கில் ஒட்டு வீடுகளில் மந்தையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களின் மீது சிறு கரிசனமாவது வந்திருக்குமா? தெரியவில்லை. ஆனால் என்ன செய்வது? அப்படித்தான் செல்கிறது வாழ்க்கை.
புத்தக அலமாரியைப் பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. இயற்கையின் எல்லா அழகுகளும் சூழ்ந்திருக்க நடுவில் வைக்கப்பட்ட புத்தக அலமாரி. ஒரு வோர்ட்ஸ்வொர்த்? ஒரு ராபர்ட் ஃப்ராஸ்ட்? ஒரு ஷெல்லி? ஒரு பைரன்? ஒரு ஸேக்ஸ்பியர்? ஒன்றும் இல்லை. Readers Digest யுடைய பெயர் தெரியாத நபர்கள் எழுதிய சில சுருக்கப்பட்ட பவுண்ட் புத்தகங்கள்.. புத்தகங்களைப்பற்றித் தெரியாத ஒருவர்தான் இந்த புத்தக வரிசையை தயாரித்திருக்க வேண்டும். இடையில் யாரோ ஒரு ஹாரி போட்டரையும், பௌலோ கொய்லொவையும் வைத்திருக்கிறார்கள். துருத்திக்கொண்டு தெரிந்தன.
வெளியே புல்த்தரையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். இயற்கையின் பிரமாண்ட மோனம்! அழகான பூக்கள் தலையாட்ட கூட வந்த ஒரு ரசிக நண்பர் ஒலிக்கவிட்ட இளையராஜாவின் இசையில் புல்லாங்குழல். இதமான குளிர் கவிழ்ந்தது. எல்லாத்துயரங்களும் பின்னால் செல்ல, எல்லா வெறுமைகளையும் அழகு நிரப்ப கொஞ்சம் வாழ்ந்தேன்.