பக்கங்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

                                                           மாமல்லன்

விமலாதித்த மாமல்லனைப் பற்றி ஜெயமோகனின் தளத்தில் தான் பார்த்தேன். சென்னை புத்தக கண்காட்சியில் பார்த்ததைப் பற்றி எழுதும்போது தன்னை கடுமையாக  விமரிசனம் செய்து எழுதுவதாக நண்பர்கள்  சொன்னதாகவும்  அதனால் என்ன தமிழின் சிறந்த சிறுகதைகள் சில எழுதியவர் என்று சொன்னதாக குறிப்பிட்டிருந்தார். உடனே கூகிளில் தேடி அவர் ப்ளாகை பார்த்தேன். அவர் சிறுகதைகளைப் படித்தேன். இலக்கியதரமான அபூர்வமான கதைகள் என்று தோன்றியது. அவர் சிறுகதைகள் மின்னூலையும் வாங்கினேன்.  ஜெயமோகனைப்பற்றிய அவர் விமர்சனங்களையும்  படித்தேன்.  சில தகவல் பிழைகள், சில மொழிக் குறைபாடுகள்  போன்றவை  சரி  என்று  தோன்றினாலும்   ஜெயமோகனின்  கருக்களின் ஆழத்தையும்  அவர்  கதைகளின் பல பரிமாணங்களையும் அவர் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றியது.அவர் விமர்சனங்கள் ஜெயமோகன் மேல் எனக்கு இருந்த அபிமானத்தைக் குறைக்கவில்லை. இருந்தாலும் மாமல்லனை ப்ளாகிலும்   முக நூலிலும்  தொடர்ந்து வந்தேன்.தமிழில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவு, யார் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவது, அநீதி இழைக்கப் படுவதாக தோன்றினால் தனக்கு சரி என்று தோன்றும் பக்கத்தின் பக்கம் நின்று தீவிரமாகப் போராடுவது ( சின்மயி, ஓலா டிரைவர்  விவகாரங்கள்), கஷ்டப்படும் இலக்கிய வாதிகளுக்கு பிரதி பலம் பாராமல் உதவுவது (ரமேஷ், மோகன்   போன்ற இலக்கியவாதிகளுக்கு செய்த உதவிகள்)  போன்றவை அவர்  மேல் மதிப்பு அதிகரிக்க  செய்தது. அவரது புனைவு ஒரு புதிர் இரண்டு  புத்தகங்களும் வாங்கினேன். நவீன இலக்கியங்களை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு திறப்பை அது அளித்தது.  கதைகளை அற்புதமாக திறனாய்வு செய்திருந்தார்.  ஜெயமோகனின் ஒரு கதை கூடவா அவருக்குப் பிடிக்கவில்லை என்ற அங்கலாய்ப்பும் இல்லாமல் இல்லை.

அவரது  ஆபீஸ் தொடருக்காகவே   மெட்ராஸ் பேப்பர்   இணைய இதழுக்கு சந்தா கட்டினேன்.  சமீபத்தில்  அவரது விளக்கும் வெளிச்சமும்  புத்தகம்  வாங்கினேன்.  அவரது படைப்புகளைப் பற்றிய  அபிப்ராயத்தை பொதுவில்  வெளியிடுமாறு அறிவித்திருந்தார்.  அதற்காகவே இந்தப் பதிவு.

ரிட்டயரான பிறகு அவரது படைப்புகள் சுயசரிதைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. மத்திய அரசின் கலால் வரி வசூல் அலுவலகங்கள் இலக்கியத்துக்குள்  முதன்முறையாக கொண்டு வரப்படுவதால் படிக்க சுவையாகவே இருக்கின்றன.  அவை வெறும் சம்பவங்களாக இல்லாமல் சில வரிகள் மூலம் இலக்கியமாக்கிவிடுகிற விற்பன்னர் தான் மாமல்லன். 

அமன் என்ற கதையில் ஒரு சிறுவன்  இவரிடம்  சைக்கிள்  கேட்கிறான். இவர் மறுத்து விடுகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் இவர் மனைவிக்கு அந்த சிறுவனின் முகம் வாடுவது கண்டு  வருத்தம். இவருக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் ஸைக்கிள் யாருக்கும் கொடுப்பதில்லை என்ற கொள்கை. அடுத்த நாள்  சைக்கிள் சக்கரத்தில் காற்று இறங்கியிருக்கிறது. அந்தப் பையன்  பிடுங்கி விட்டிருப்பானோ என்று இவருக்கு சந்தேகம். மெக்கானிக்கிடம்  போகிறார். அவர் காற்று போவதற்கான  பல காரணங்களை அடுக்குகிறார். இவருக்கு அப்பாடி அந்த பையன் பிடுங்கி விடவில்லை  என்ற நிம்மதி. நமக்கும். சரி செய்து கொண்டு வருகிறார். இப்படியே விட்டிருந்தால் அது ஒரு சம்பவம். அசோகமித்திரன் பாணியில் ஒரு கடைசி வரி. அது இதை இலக்கியமாக்குகிறது.

மறைவு என்ற கதையில் ஓரு இளைஞனின்  தற்கொலை நடக்கிறது. ஏதோ அவமானம். அதைப் பார்க்கிற  ஒரு   முதியவருக்கு தன் சிறு வயது அவமானம் நினைவு  வருகிறது. வகுப்பை கட் அடித்து விட்டு சினிமா சென்று வருகிற  சிறுவனை  பொதுவில் நிர்வானமாக்கி  அவமானப்படுத்த தன் தந்தை திட்டமிட்ட  போது   விளக்கை அணைத்து  காப்பாற்றிய ஒரு பிசினஸ்  மேனை நினைவு கூறுகிறார்.  அவரையே  ஒரு டிரைவராக  சந்திக்கிற  வாய்ப்பு  கிடைக்கிறது.  ஆனால்  அவரிடம்  தன்னை  ஏன்  அடையாளம்   காண்பித்துக் கொள்ளவில்லை.? மறைவு   பேருக்கேற்ற   சிந்தனையை தூண்டும் கதை.

பயம்  என்ற கதையில் மதம் சார்ந்த  நம் அர்த்தமற்ற பயங்களையும் அதே சமயம் சாதுக்கள் என்று நாம் நினைப்பவர்கள்  சில சமயம் காட்டுகிற  வன்மத்தையும் கலால் வரி ஊழல்களின்  பிண்ணனியில்  விவரிக்கிறார்.

காவி இன்னொரு நல்ல கதை. அன்றாட வேலையின் அலுப்பிலிருந்து  தப்பிப்பதற்காக  சாமியாரான  ஒரு இலைஞனை  முதலில் துறவி என்று வணங்கிய பூஜாரி  அவன் அணிந்திருந்த விலை உயர்ந்த  ஜட்டியை வைத்தே  வீட்டிலிருந்து  கோபித்துகொண்டு வந்தவன்  என்று புரிந்து கொண்டு  அவனை திரும்பி போகக் சொல்லி உபதேசிக்கிறார். நன்றாக எழுதப்பட்ட கதை.

விளக்கு என்கிற நெடுங்கதை அவர் இப்போது எழுதுகிற ஆபீஸ் தொடருக்கு  ஒரு முன்னோடி போல. படிக்க நன்றாக இருந்தாலும்  ஒரு குறு நாவலின்  பூரணம் கூடி வரவில்லை என்று தோன்றுகிறது.

இந்த கதைகள்  அவரது முந்தையக் கதைகளின்  தளத்தில் இல்லாவிட்டாலும்   இன்றும் தவிர்க்கமுடியாத  எழுத்தாளராகவே இருக்கிறார் விமலாதித்த மாமல்லன்.




கருத்துகள் இல்லை: