CITADEL
எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நாவல்களில் ஒன்று CITADEL. A.J. CRONIN எழுதியது. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் .அதேசமயம் நல்ல எழுத்தாளர். CITADEL இலக்கியமா என்று எனக்குத் தெரியாது. எந்த இலக்கியவாதியும் இதைப்பற்றி சொல்லி நான் கேட்டதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. படிக்க மிக சுவாரசியமான புத்தகம். எப்போது படித்தாலும் உற்சாகமும் உத்வேகமும் கொடுக்கிற புத்தகம். என் மதிப்பீடுகளை உருவாக்கவும் உதவியது.
மருத்துவர்களைப் பற்றிய கதை. ஆன்ட்ரே மான்சன் என்கிற தற்போதுதான் மருத்துவ படிப்பு முடித்த இளைஞன். தன் துறையைப்பற்றி நிறைய கனவுகள் உள்ளவன். டிரின்ஃபி என்கிற நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள பள்ளத்தாக்கு நகரம் ஒன்றில் உதவி மருத்துவராகச் சேருகிறான். அவன் படிப்பிற்கும் நிஜ வாழ்விற்கும் உள்ள வேறுபாடுகள், சில சிக்கலான பிரச்சினைகளை அவன் சந்தித்து வெற்றி காண்கிற அனுபவங்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. க்ரோனின் ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவ நிகழ்வுகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன.
அவனுடய ஆரம்ப அனுபவமே அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வந்த முதல் நாளே ஒரு நோயாளியை பரிசோதிக்க வேண்டி வருகிறது. அவருக்கு என்ன நோய் என்று மான்சனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஆசிரியர்கள் வகுப்பில் கூறிய முறைப்படி ஒரு “காம்பௌண்ட் “ தயாரிக்கிறான். அந்த வழியில் வந்த டென்னி என்கிற உதவி மருத்துவன் அவனை எள்ளி நகையாடுகிறான். டென்னி ஒரு சினிக். வாழ்வில் பல ஏமாற்றங்களை சந்தித்து எல்லாவற்றையும் ஒரு ஏளனப் பார்வை பார்ப்பவன். ஆனால் மருத்துவத்துறையில் மிக உயர்ந்த கல்வித் தகுதியும், அறிவும் உள்ளவன். அவன் உதவியால் இது டைபாயிடு தொற்று நோய் என்று கண்டுபிடிக்கிறார்கள். இருவருடைய பல நோயாளிகளுக்கும் இந்த தொற்று நோய் பிடிக்கிறது. ஒரு குழந்தையும் இறக்கிறது. இதற்கு காரணம் சேதமடைந்த ஒரு கழிவுநீர் தொட்டியின் கசிவு என்று கண்டுபிடிக்கிறார்கள். மாவட்ட அரசு அதிகாரிகளிடம் இந்த கழிவுத் தொட்டியை மாற்ற மன்றாடுகிறார்கள். அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து அந்த கழிவுநீர்த் தொட்டியை வெடி வைத்து தகர்க்கிறார்கள்.
ஒரு திறமையற்ற மருத்துவர் பைத்தியம் என்று முடிவு செய்து மன நல மருத்துவமனைக்கு அனுப்ப நினைத்த ஒரு நோயாளியை தைராயிட் குறைபாடு என்று கண்டுபிடித்து குணப்படுத்துகிறான் மான்சன்.
பத்தொன்பது வருடங்களாக குழந்தையில்லாமல் தவித்தார்கள் ஒரு வயதான தொழிலாள தம்பதி. 43 வயதில் அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கிறாள். பிரசவம் நல்லபடியாக நடக்க மான்சனின் உதவியை நாடுகிறார்கள் அந்த தம்பதி. ஆனால் குழந்தை கிட்டதட்ட இறந்தே பிறக்கிறது. அதை புதிய ஒரு முறையைப் பின்பற்றி காப்பாற்றுகிறான் மான்சன்.இந்தப் பகுதிகள் அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன.
1930 களிலேயே மருத்துவத்துறை எப்படி வணிக மயமாகத் தொடங்குகிறது, லட்சிய வேகத்துடன் தொடஙுகிற மருத்துவர்கள் கூட எப்படி பணத்தின் ஈர்ப்பு என்கிற புயலில் சிக்கி வீழ்கிறார்கள் என்பது க்ரோனினின் வரிகளில் படிக்க பயமாகத்தான் இருக்கிறது.
ஒரு பெண்ணின் காச நோயை மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமல் போக, அதில் ஆராய்ச்சி செய்து புதிய முறையைக் கண்டுபிடித்த முறையான மருத்துவப் படிப்பு படிக்காத ஒரு நிபுணரின் உதவியை மான்சன் நாடுகிறான். அதன் காரணமாக அவன் வேலையே போகும் அபாயம் வருகிறது. இது குறித்த மருத்துவக் கௌன்ஸில் விசாரணயில் மான்சனின் உரை நல்ல வீச்சுடன் அமைந்திருக்கிறது.
மான்சனின் மனைவி க்ரிஸ்டி, நண்பர்கள் டென்னி, ஹோப் மருத்துவத் துறையில் உயர்பதவியில் இருக்கும் அப்பேய் என எல்லா பாத்திரங்களும் உயிர்ப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன
மான்சனின் உயர்கல்விப் பட்டத்திற்காக அவனை நேர்முகத்தேர்வு செய்யும் அப்பேய் மருத்துவத் தொழிலில் அவனது முக்கியக் கொள்கை என்ன என்று கேட்கிறார். மான்சன் “ I keep telling myself never take anything for granted” என்கிறான். இதுதான் இந்த நாவலின் அடிநாதம். மான்சனை எப்போதும் வழி நடத்துவது இந்தக் கொள்கைதான். அதனால்தான் செல்வாக்குள்ள ஒரு நர்ஸ் எதோ ஒரு எண்ணெயில் காயத்திற்கு மருந்து போடும்போது அது செப்டிக் ஆகும் என்று எச்சரிக்கிறான். அது அலட்சியப்படுத்தப்படுகிறது. அவன் பயம் உண்மையாகிறது. அதனால்தான் அனுபவம் வாய்ந்த மருத்துவர் காச நோய்க்கு இவன் பரிந்துரைக்கிற சிகிட்சை முறையை மறுக்கிற போது முறையான படிப்பு இல்லாத நிபுணரிடமும் துணிந்து செல்கிறான். அதனால்தான் ஒரு பணக்கார இளம்பெண்ணைக் கன்னத்தில் அரைகிறான் சிகிட்சைக்காக என்ற போதும். தனக்கு சரி என்று தோன்றாத விஷயத்தை செய்வதே இல்லை. NO என்று சொல்ல தயங்கவதேயில்லை.
கிரிஷ்டி போன்ற மனைவியும் டென்னி போன்ற நண்பனும் கிடைத்தது அவன் அதிருஷ்டம்.
க்ரோனின் பல மருத்துவ சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கிறார். நல்ல வாசிப்பின்பம் தருகிற கதை. இந்த புத்தகம் நிறைய திறப்புகளைத் தருகிறது. நம் மதிப்பீடுகளைப் பரிசீலிக்கச் சொல்கிறது. அனைவரும் குறிப்பாக மருத்துவர்கள் படிக்கவேண்டிய நாவல்.