பக்கங்கள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020




அப்பா
என் தங்கை தேவி ஃபோன் செய்து அப்பா பேச்சு மூச்சின்றி இருக்கிறார் என்று அழுது கொண்டே சொன்ன போது முதலில் நான் பயப்படவில்லை. மாலை வரை நன்றாக பேசிக்கொண்டு, டிவி பார்த்துக்கொண்டு இருந்தவர் லேசாக மயக்கம் வருகிறது என்று படுத்தாராம்.  எழுப்பினாலும் எழுந்திருக்கவில்லை என்றாள். இதற்கு முன் இந்த மாதிரி மூன்று தடவை ஸீரியஸ் என்று அலறி அடித்துக்கொண்டு ஒடியிருக்கிறோம். இரண்டு நாள் மருத்துவமனையில் ICU-வில் இருந்தது விட்டு வீடு திரும்பி விடுவார். அடுத்த நாளே மட்டன் எடுக்கவில்லையா என்பார்.  ஆகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல் என்றேன். அங்கே உறுதி செய்துவிட்டு இறந்து விட்டார் என்று தெரிவித்தபோது கூட முதலில் துயரம் வரவில்லை.
இந்த கொரோனா காலத்தில் எப்படி போவதற்கு அனுமதி வாங்குவது என்று பீதிதான் தோன்றியது. எங்கள் மில் D.G.M (HR) சரவணனை அழைத்தேன். அவரும் அவர் சகாக்களும் போராடி அனுமதி வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இரவு பதினோரு மணி ஆகி விட்டது. காரில் ஏறிய பிறகு தான் அந்த மரனத்தின் தாக்கம் உறைத்தது. கடந்த மூன்று வருடங்களாகவே மிகவும் சிரமப்பட்டு விட்டார். அவர் படுகிற கஷ்டங்களை பார்த்து அவருக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் சமீப காலமாக நன்றாகத்தான் இருந்தார். தன் காரியங்களை தானே பார்த்துக் கொண்டார். இன்று பேசும்போது கூட நன்றாக பேசினார். உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறினார். ஆகவே இந்த திடீர் மரணம் ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு பூ உதிர்வதைப் போல மறைந்து விட்டார். அதில் ஒரு சின்ன ஆறுதல்.
அப்பாவின் நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தன.
கடந்த சில வருடங்களாக நோயால் அவதிப்பட்ட அவர் முகம் அவரது பழைய முகத்தை மறக்க செய்தது போல இருந்தது. அவர் முன்பெல்லாம் எப்படி இருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். அழகன். உயர்ந்த உருவம்.அவர் சிரிப்பு மிகவும் வசீகரமாக இருக்கும். மனதுக்குள் சென்று வருடும் அன்பு. சிறுவயதில் அப்பா அடித்ததே இல்லை என்று சொல்லலாம். எப்போதாவது அரிதாக அடித்தால் சந்தோஷமாக இருக்கும். எங்கள் ஊரில் ஒரு பாலம் உண்டு. அங்கே போய் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்வேன். வந்து ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போய் ரோஸ்ட் வாங்கித் தருவார்.
அற்புதமான ஆசிரியர். கம்பீரமான குரல். வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியர். ஆங்கிலமும் கற்றுத் தருவார்.  நானும் அவர் மாணவனாய் இருந்திருக்கிறேன்.  This is my prayer to Thee My Lord.Strike strike at the root of penury in my heart  என்ற தாகூரின் பாடல் அவர் குரலில் இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு ஒரு மனக்குறை உண்டு. நான் எல்லா பாடங்களிலும் முதல் மாணவன். ஆனால் அவர் பாடமான வரலாறு மற்றும் புவியியலில் மட்டும் இரண்டாமிடம். பாபு என்று ஒரு பையன். எப்போதுமே அவன் தான் முதல். எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை முந்த முடியவில்லை. விரிவான கேள்விகளில் ஒரு அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் கூடச் சேர்த்துப் போட்டிருந்தால் பிடித்திருக்கலாம். சொந்தப் பையன் தானே. போட மாட்டார்.
புத்தகம் படிக்கும் பழக்கம் அவரிடமிருந்து தான் ஒட்டிக்கொண்டது. சாப்பிடும் போதும் எங்கள் வீட்டில் எல்லாரும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்போம். என் மனைவி இப்போதும் சாப்பிடும்போது புத்தகம் படிக்காதீங்க என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். மாற்ற முடியவில்லை.
என் அப்பாவிடம் எதுவும் மறைக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது  செக்ஸ் புத்தகம் படித்தபோது கூட அவரிடம் சொன்னேன். இந்த வயது பத்தாது. இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று மென்மையாகத்தான் சொன்னார். தப்புத்தாளங்கள் என்று ஒரு பாலச்சந்தர் படம். A – சர்டிஃபிகேட் படம். போவதற்கு அனுமதி கேட்டேன். உனக்குப் புரியுமா என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு அனுமதி கொடுத்தார்.
எந்த நிலையிலும் என் அப்பா என்னை விட்டுக் கொடுத்ததேயில்லை. பாலிடெக்னிக்கில் ஒரு சம்பவம். முதலாமாண்டு ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். சாதாரணமாக டேஸ்காலர்ஸை விருந்தினராக மெஸ்ஸுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். தேர்வு சமயத்தில் விருந்தினர் அனுமதியில்லை என்று ஒரு அறிவிப்பு செய்திருக்கிறார்கள். அதை மெஸ்ஸில் ஒட்டாமல் , அலுவலகத்தில் ஒட்டியிருக்கிறார்கள். நாங்கள் பார்க்கவில்லை. சில நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தோம். எழுத்தர் ஸாமி நாத ஐயர் நின்றிருந்தார். இருக்கையில் அமர்ந்ததும், பறிமாறுபவர் அந்த நண்பர்களுக்கு மட்டும் தட்டு வைக்கவில்லை. கெஸ்ட் அனுமதியில்லை என்றார். ஏன் என்று கேட்டோம். ஐயரை கண் காட்டினார். அவரிடம் கேட்டோம். கெஸ்ட் அனுமதியில்லை என்று நோட்டீஸ் போட்டிருக்கிறோமே என்றார். எங்கே என்றோம். அலுவலகத்தில் என்றார். ஏன் மெஸ்ஸில் போடவில்லை, ஏன் உட்காருவதற்கு முன்பே சொல்லவில்லை, உட்கார்ந்தததற்கு பின் அவமானப்படுத்துகிறீர்கள் என்று உரக்க பேசிவிட்டு வெளியேறி விட்டோம். அந்த சம்பவத்தை மறந்தும் விட்டோம். இரண்டாமாண்டு ஹாஸ்டலில் சேர வந்த போது ஹாஸ்டலில் அறை தர முடியாது என்றார்கள். காரணம் கேட்டதற்கு பிரின்சிபாலை பாருங்கள் என்றார்கள். ப்ரின்சிபால் என் அப்பாவிடம் உங்கள் பையன் கலாட்டா பண்ணுகிறான் என்றார். அப்பா என்ன விசயம் என்று கேட்டார். அவர் சம்பவத்தை விவரித்தார். அப்பா பொங்கி விட்டார். என் பையன் நிச்சயம் தப்பு செய்ய மாட்டான். அவன் ஏதாவது செய்திருந்தால் அதில் நியாயம் இருக்கும் என்றார். ஹாஸ்டல் இல்லையென்றாலும் பரவாயில்லை என்றார். பிரின்சிபால் அசந்து போனார். ஒன்றும் பேசாமல் அனுமதிக்கவும் என்று எழுதி கையொப்பம் இட்டார்.
என்பதுகளில் ஆந்திராவில் கொஞ்ச காலம் வேலை செய்திருந்தேன். ஒருமுறை கேரளாவில் கொழிஞ்சாம்பாறையிலிருந்த என் வீட்டுக்கு  விடுமுறைக்கு வந்து விட்டு திரும்பிப் போனேன். வந்து சேர்ந்தேன் என்று கடிதம் எழுத மறந்து போனேன். போனில் தொடர்பு கொள்ளும் வசதியும் எங்களிடம் இல்லை. ஒரு நான்கு நாள் பொறுத்துப் பார்த்துவிட்டு கிளம்பி வந்து விட்டார். ஐனூறு கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து வந்து ஏண்டா போன் செய்யவில்லை என்று கேட்டுவிட்டு அரை மணி நேரம் இருந்துவிட்டுப் போனார்.
என் மகனின் காது குத்தும் வைபவத்தை என் மனைவி மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஒரு சாமியார் மடத்தில் நடத்த வேண்டும் என்று விரும்பிய போது அவருக்கு நம்பிக்கை இல்லாத போதும் அங்கே தான் நடத்த வேண்டும் என்றார். அந்த குழந்தை மீது உன் மனைவிக்குத்தான் அதிக உரிமை உள்ளது என்றார்.
நாங்கள் பாலக்காடு குடியிருப்பில் இருந்த போது என் பையன் கௌதமிற்காக ஒரு மூன்று சக்கர ஸைக்கிளை தூக்கிகொண்டு டவுன் பஸ்ஸில் வந்தது ஞாபகத்தில் சித்திரமாய் நிற்கிறது.
உறவினர்களுக்கு செய்ததை வெளிக்காட்டியதே கிடையாது.
செஸ், கேரம் அழகாக விளையாடுவார். அற்புதமான நண்பர். எல்லா வயதிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. அவர்  நண்பர்கள் மலையாளத்தில் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சுத்தமான தமிழில் பதில் சொல்லும் அழகே தனி. தகவல் தொடர்பில் ஒரு குழப்பமும் இருக்காது.
என்னை அதிகம் படிக்க வைக்கவில்லை என்ற குறை அவருக்கு உண்டு. அது தேவையில்லாதது, என் துறையில் நான் திருப்தியாய்த்தான் இருக்கிறேன் என்று நான் சொன்னாலும் அவருக்கு அந்த வருத்தம் போக வில்லை.
மின் மயானத்தில் அந்த எரிக்கும் சூலையில் என் அப்பா உள்ளே செல்லும் போது, இனி பார்க்க முடியாது என்ற நிஜம் உறைத்த போது ஒரு இரண்டு வயது பையனாய் அடிவயிற்றில் இருந்து அப்பா என்று கத்தி அழைத்தேன். அவர் திரும்பி பார்க்கவில்லை. போகட்டும். வரும் பிறவிகளிலும் அவரே அப்பாவாக வந்தால் நன்றாக இருக்கும்.




கருத்துகள் இல்லை: