பூமணி
பூமணி மறைந்துவிட்டார். நான் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் இலக்கியத்தின் ருசியைக் காட்டியவர்களில் முக்கியமானவர் பூமணி. அவருடைய வெக்கை நான் படித்த அவரின் முதல் படைப்பு. இன்று வேகப் புனைவு என்று சொல்லுகிறார்களே அதன் முன்னோடி அதுதான்.ஆரம்பத்தில் ஒரு கொலை நடக்கிறது.ஒரு சிறுவன் வடக்கூரான் என்கிற பண்ணையாரை வெட்டுகிறான். அந்த சிறுவனும் அவன் தந்தையும் கரிசல் காடுகளில் ஒடுகிறார்கள். எழுத்தும் ஓடிக்கொண்டேயிருக்கும். நாவலைத் தொடங்கினால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது.அந்த மண்ணின் வெக்கையையும் வாசத்தையும் நாம் அந்தப் பக்கங்களில் உணர்ந்து கொண்டேயிருப்போம்.
அசுரன், வெற்றி மாறனும் தனுஷும் வெக்கையை திரையில் கொண்டுவர எடுத்த நல்ல முயற்சி என்றாலும் பூமணியின் கதாபாத்திரங்களின் உயிர்ப்பை கொண்டு வருவதில் பூர்ண வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. அந்தப் பையனின் தந்தை, அண்ணன், மாமா, அம்மா, அத்தை அனைவரும் அலாதியான குணாதியசஙளோடு அசல் கரிசல் மனிதர்க்ளாக நாவலில் இருப்பார்கள். அதை திரையில் கொண்டுவருவது கஷ்டம்தான்.
பிறகு நாவல் ஒரு தலித் சமூகத்தின் பாசமும் ஈரமும் நிறைந்த கூட்டு வாழ்க்கையைக் காட்டியதென்றால் நைவேத்தியம் கிராமத்தில் நசிந்து கொண்டிருக்கும் அக்ரஹாரத்தின் வாழ்வை சித்தரித்தது. சங்கரையருக்கும் தலையாரிக்கும் உள்ள உறவு அழகாக சொல்லப்பட்டிருக்கும் நைவேத்தியத்தில். இந்த மூன்று நாவல்களும் தமிழின் முக்கியமான நாவல்கள்.
பூமணி குறிப்பிடந்தகுந்த சிறுகதைகளும் குறுநாவல்களும் எழுதியிருக்கிறார். சிறு உரையாடல்கள் மூலம் ஒரு திரைப்படம் போல காட்சிகளை கண் முன்னே காட்சிகளை காட்டுவதில் வல்லவர்.இரண்டு காவலர்கள் சமூக அவலங்களை நக்கலுடனும் நையாண்டியுடனும் பேசிக்கொள்ளும் கதைகள் நன்றாக இருக்கும். நாஞ்சில் நாடனின் கும்ப முனியைப் போன்றவர்கள் இவர்கள்.
அவர் எழுத்தில் நிறைய சாதனைக்ளை நிகழ்த்தியும் நீண்ட காலம் விருதுகள் எதுவும் பெறவில்லை. ஜெயமோகன் வழங்கிய விஷ்ணுபுரம் விருதுதான் அவருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். பிறகு அஞ்ஞாடி என்கிற பெரிய நாவல் எழுதினார். அதற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அந்த நாவலையும் படித்தேன். அவ்வளவாக அந்த நாவலுடன் ஒரு பிணைப்பு வர வில்லை.
கடந்த திமுக அரசு அவருக்கு கனவு இல்லம் வழங்கி கௌரவித்தது. இன்றைய தமிழக முதல்வர் விஜய் அவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு அரசு மரியாதைகளோடு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடக்குமென்று அறிவித்திருக்கிறார். யூமா வாசுகியின் நியாயமான பணி நீடிப்புக் கோரிக்கையை அவருடைய வாசகர்களில் ஒருவனாக அறிவித்து ஏற்ற கல்வி அமைச்சரின் நடவடிக்கையை அடுத்து இந்தச் செயலும் மிகுந்த மன நிறைவை ஏற்படுத்துகிறது.
தன் படைப்பாளிகளை கொண்டாடுகிற சமூகம்தான் ஆரோக்கியமான சமூகம்.
அஞ்சலி தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவருக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக