பக்கங்கள்

திங்கள், 10 ஜனவரி, 2011

JEYAMOHAN-PIN THODURUM ORU KURAL

ஜெயமோஹனை  நான் கோவையில் செஞ்சிலுவை சங்கத்தில்  அவருக்கு தாகம் நாவல் போட்டியில் அகிலன் நினைவு  பரிசு பெற்றததற்காக நடந்த விழாவில் வைத்து பார்த்தேன். அது நடந்து ஒரு 22-23 வருடம் இருக்ககூடும். அந்த செஞ்சிலுவை சங்கத்தில் இருந்த ஒரே அழுக்கு கழிப்பறையில் நான் சிறுநீர் கழித்துவிட்டு வரும்போது அவர் வந்தார்.வழிமறித்து "ரப்பர் நன்றாக இருந்ததுங்க " என்றேன். அவரும் புன்னகைத்து விட்டு போனார். அவருக்கு, தமிழ் நாவலின் எதிர்காலத்தைப்பற்றியும், அதில் தனக்கு இருக்கபோகிற இடத்தைப்பற்றியும் ஒரு உணர்ச்சி மிகுந்த உரை ஆற்றிவிட்டு சிறுநீர் கழிக்க செல்கிற அவசரம்.  அந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற சந்திப்பை அவர் ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை. . ஆனால் இப்போது என் வாசிப்பில் தவிர்க்கமுடியாத எழுத்தாளர்களில் ஒருவராகி  விட்டார், ஒரு போட்டியில் பரிசு பெற்றது என்பதால் ஒரு அவநம்பிக்கையோடுதான் ரப்பரை வாங்கினேன். ஆனால் அந்த நடையும்  அந்தகளமும் ரொம்ப ஈர்த்தது. . தமிழில் ஒரு முக்கிய எழுத்தாளராக வரப்போகிறார்  என்பதற்கான அத்தாட்சிகள்  அந்த நாவலில் நிறையவே  இருந்தன.  அப்புறம் அவரின் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள்  நிறைய   படித்துக்கொண்டே இருந்தேன்.  சக்தி  வாய்ந்த எழுத்து. திசைகள் நடுவே என்கிற கதையில்  அம்மாவை இழந்த ஒருவனின் உணர்வை ஆழமாக சொன்ன விதம்,  சுஜாதா பாராட்டிய பல்லக்கு காட்டிய வாழ்க்கை, கிராம தெய்வம் மாடனின் இன்றைய பரிதாப நிலையை சொன்ன மிகச்சிறந்த நகைச்சுவை கதையிலிருந்த எள்ளல் நடை, (மாடனின் மோட்சம்) மடத்து வாழ்வின் அரசியலை சொன்ன கதை என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு ரொம்ப பிடிததவற்றில் கலைஞன் கலையாகவே  மாறிபோகும் லங்கா தகனம் என்கிற அற்புதமான கதையையும் ,  எல்லாம் காலசுழற்சியில் மீண்டும் நிகழும்  என்கிற தத்துவத்தை கண்டுபிடித்து அதை நிலை நிறுத்துவதற்காக தன் வாழ்வையே தொலைத்து பின் வாழ்வின் இறுதிக்கணங்களில்  அந்த தத்துவம் பொய்யாகிவிடகூடாதா என்று ஏங்குகிற அந்த நம்பூதிரியின் பரிதாபக்கதையையும்  சொல்லலாம். (ஜகன்மிதிரை?) . சங்கச்சித்திரங்கள் ஏன் வாசிப்பு உலகத்தை விசாலமாக்கியது.

ஜெயமோகனின் எழுத்தைவிட  என்னை பாதித்த விஷயம்  அவர் பெற்றோர் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது. முதலில் அதை நான் நம்பக்கூட   இல்லை. ஏதோ அதிர்ச்சி மதிப்பு ஏற்படுவதற்காக  சொல்கிறார் என்று எண்ணினேன். ஏற்கனவே  சாரு நிவேதிகா என் தங்கை ஒரு செக்ஸ் வொர்க்கர் என்று எழுதியதை  படித்திருந்தேன். இதொரு FASHION போல என்று எண்ணினேன். இதையெல்லாம் எதற்கு சொல்கிறார் என்றுகூட நினைத்தேன். ஆனால் ஒரு இணையதள பேட்டியில் அவர் அந்த மரணங்களை விவரித்த விதம்,அதில் இருந்த உண்மை ரொம்பவே பாதித்தது. அது எப்படி,ஒரு தாயால், ஒரு தந்தையால், தான் நேசிக்க ,தன்னைநேசிக்கிற,தன்னையே  நம்பிஇருக்கிற  ஜீவன் ஓன்று  இருக்கிறது என்பதை மறந்து எப்படி  போய் விட முடியும்,  தன் அன்பு கூட அவர்கள் மரணத்தை தடுக்க முடியவில்லையே என்று எண்ணும்போது அந்த இளம் மனம்  எப்படி பாடுபட்டிருக்கும். அதுவும் இருவரும்...! எப்படி அவர்களுக்கு மனசு வந்தது? எந்த சூல்நிலையாயிருந்தாலும்...  ரொம்ப படித்தாலே மனசு ஒருமாதிரியாய் விடும்போல... I AM NOBODY TO JUDGE . STILL .....!

                     பிறகுஆருயிர்நண்பனையும் இதே  மாதிரி இழக்கவேண்டியிருந்திருக்கிறது.  யாருக்கும் நேரக்கூடாத கொடுமை. இந்த மாதிரி துன்பங்கள் நேர்ந்ததால் தான்  அவர் ஒரு எழுத்தாளரானார் என்றால்  அவர் எழுத்தாளர் ஆயிருக்கவே வேண்டாம் . பெற்றோரோடும், நண்பனோடும் சாதாரண மனிதனாய் வாழ்ந்திருக்கலாம்  என்று தான் நான் சொல்வேன். ( சுந்தரராமசாமி ஜேஜேயில் சொன்னது போல) . ஆனால் நடப்பதுதானே நடக்கும்! இப்போது அந்தக்காயங்கள் கொஞ்சம் குறைந்து இனிய வாழ்வு அமைந்திருக்கிறது என்று தெரிகிறபோது சந்தோசமாக இருக்கிறது.

ஜெயமோகனின் பிற்கால நாவல்களைப்பற்றி பேச கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது. . காடு, . விஷ்ணுபுரம், பின் தொடரும்  நிழலின் குரல்  படித்தேன். விஷ்ணுபுரம்  பெரிய சாதனைதான். படிக்கும்போது பிரமிப்பாய்த்தான் இருந்தது. ஆனால் இரண்டு வருடம் கழித்து யோசிக்கும்போது மனதில் ஒன்றுமே தங்கவில்லை. இந்த கட்டுரை எழுதுவதற்காக யோசித்தபோது காட்டிலிருந்தும்  , விஷ்ணுபுரத்திலிருந்தும் ஒரு ஜீவன் கூட  நினைவில் வரவில்லை.  இருபது வருடம் முன்பு படித்த பொன்னு பெருவட்டரும், கங்கன் காணியும் , குளம் கோரியும், பிரான்சிசும் இன்னும் மனதை விட்டு போகாத நிலையில் விஷ்ணுபுரத்தில் இருந்து யாரும் உள்ளேயே வரவில்லையே? ஏன்? எனக்கு தெரிந்த காரணம் ரப்பர் எழுதியது. அதன் பின் வந்தவை எல்லாம் செய்தது.  ஆகவே செய்நேர்த்தி இருக்கிறது. பாத்திரங்களில்   ஜீவன் இல்லை.
பின் தொடரும் நிழலின் குரல்  சமீபத்தில் படித்ததால் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது. அதைப்பற்றி சொல்கிறேன். 
  இந்த தடவை ஊருக்கு வந்து விட்டு டெல்லி திரும்பும் முன்  ஏதேனும் புத்தகம் வாங்கலாம்  என்று விஜயா பதிப்பகம் போனேன்.  மணல் கடிகை, கொற்கை தேடினேன். கிடைக்கவில்லை. அங்கிருந்து தம்பிக்கு போன் செய்தேன். அவன் சரியாக சொல்வான். அவன் சொல்லித்தான் ஆழி சூழ் உலகு வாங்கினேன். ஜெயமோகனின் கொற்றவை , குரூசின்  கொற்கை இரண்டும் வாங்கு  என்றான். . இரண்டும் கிடைக்கவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் தான் இருந்தது. அதுவும் படிக்கலாம் என்றான். படிக்கலாம் சரி.. வாங்கலாமா? என்றேன்  வாங்காமல் எப்படி படிப்பது? நியாயமான கேள்வி! பின் தொடரும் நிழலின் குரலின்  சில பகுதிகள் அற்புதமாக இருக்கிறது. ஆரம்பம் அழுத்தமாக இருக்கிறது. KKM இன் பாத்திரப்படைப்பும் நன்றாக வந்திருக்கிறது. KKM- ஐ  அருணாசலம் பதவியில் இருந்து இறக்குவது,    புகாரினின் மனைவியை ரணில் சந்திப்பது, வீரபத்திர பிள்ளையின் சிறுகதைகள்,   போன்ற சில பகுதிகள் நன்றாக வந்திருக்கிறது.  நாவல் கொண்டு செல்லும் முடிவுகளோடும் எனக்கு உடன்பாடே.  ஆனால் நாவலில் முழுமையாக ஒன்றமுடியவில்லை.  முக்கிய காரணம் , புகாரினிர்க்காக  வாழ்வை இழக்கும் வீரபத்ரனையும் , அவருக்காக  வாழ்வை இழக்கும்  அருணாச்சலத்தையும் இயல்பாக ஏற்க முடியவில்லை. கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது.  கதா பாத்திரங்களின்  படைப்பும்  ஜீவனுடன் இல்லை. அருணாசலம், கதிர், வீரபத்திரன், ஜெயமோகன், ராமசாமி, ஜோனி எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறார்கள். பேசாமல் ஜெயமோகன் 1 , 2 ,3 என்றே பெயர் கொடுத்திருக்கலாம். பொன்னு பெருவட்டர் போன்ற பாத்திரத்தை  படைத்த பேனாவிலிருந்து இன்னும் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தேன். பொன்னு பெருவட்டர் எவ்வளவு அநீதி செய்திருந்தாலும் அவரை வெறுக்கமுடியவில்லையே.  அதுதான் படைப்பு.  நாகம்மை, KKM  , KKM -இன் அச்சி, கோலப்பன், சொக்கன் , நாராயணன் போன்ற சில தோழர்கள் , இவர்கள் எல்லாம் மண்ணில் நிற்பதால்  மனதில் நிற்கிறார்கள்.  .   ஆனால் பேசி பேசி ஒன்னயும் தெளிவுபடுத்திக்க முடியாது. தெளிவு இருக்கிற இடத்தில பேச்சு இருக்காது என்று நாகம்மை சொல்வது  நன்றாக இருந்தாலும் அதை நாகம்மைசொல்வாளா?என்றுசந்தேகம் தோன்றுகிறது.
                                                  ஜெயமோஹனே சொல்வது போல  "அருணாச்சலத்தையும், வீரபத்திரனையும் புரிந்துகொள்ள முடியவில்லை. எனது தட்டையான உலகத்தில் மிகையான நாடக நடிப்பு போல இருக்கின்றன."

.  ஆனால் இந்த புத்தகங்களால் தான் அவர் ரொம்ப புகழடைந்திருக்கிறார். அப்ப என் மீது தான் தவறோ?  நான்தான் வளராமல் பின் தங்கிவிட்டேனோ? சீக்கிரம் தீர்ப்பு சொல்லாமல் மீண்டும் படித்து பார்க்க வேண்டும். தம்பி கொற்றவை  நிஜமாகவே ஒரு நல்ல படைப்பு என்கிறான். அதையும் படிக்க வேண்டும். 

என் பிரச்சினை நான் ஒரு கதை விரும்பி. எனக்கு கதையும் கதா பாத்திரங்களும் தான் முக்கியம்.  என்னை மிகவும் பாதித்த KARAMAZOV BROTHERS - இல் மித்யாவும், அல்யோஷாவும் , இவானும் தாஸ்தாவஸ்கியின் பிம்பங்கள் ஆனாலும் எவ்வளவு வேற்றுமையுடன் அசலாக இருக்கிறார்கள். அல்யோஷாவும்  இவானும்  வாதம் நடத்தும் கட்டத்தில் இவானாகவே மாறி எழுதிய தாஸ்தாவஸ்கி எழுதி முடித்ததும் இவான் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த வாதங்களுக்கு அல்யோஷா எப்படி பதில் சொல்ல போகிறானோ? என்று கவலைப்பட்டதாக  சொல்வார்கள்.  ஆனால் அல்யோஷா வெளுத்து வாங்கிவிடுவான். அனுபவித்து அனுபவித்து படித்தேன். தாஸ்தாவஸ்கியின் எல்லா கதா பாத்திரங்களும் ரத்தமும் சதையுமான அசல் மனிதர்கள். CITADEL -இல் வருகிற டென்னி, ஜானகிராமனின் பாபு, சுந்தர ராமசாமியின் ஜேஜே , நாஞ்சில் நாடனின் சண்முகம் , ஜெயமோகனின் பொன்னு பெருவட்டர் , கந்தசாமியின் சிதம்பரம், சிங்காரத்தின் பாண்டியன், அசோக மித்திரனின் எந்த ஒரு நானும்  , குரூசின் தொம்மந்திரை, காகு சாமியார்   என்று சொல்லிக்கொண்டே போகலாம். கதை மூலமும், சுவாசிக்கிற கதா பாத்திரங்கள்  மூலமும் தான் மனித மனத்தின் உள்ளே கடந்து செல்ல முடியும். தத்துவங்கள் மூலமாகவோ கோட்பாடுகள் மூலமாகவோ அல்ல.  இந்த கோட்பாடு குறைந்த பட்சம் எனக்கு பொருந்தும்.

ஆனால் ஜெயமோஹனைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுத தூண்டியது எழுத்தின் மீது அவருக்கு இருக்கிற தீரா வெறி.  என்றைக்கு திறந்தாலும் அவரது  இணையத்தில் எதாவது புதிதாக இருக்கும்.  தினமும் படித்துக்கொண்டே இருக்கிறேன். அவரின் பரிமாணங்கள் தெரிந்து கொண்டே இருக்கிறது. அவருக்கும் தாஸ்தாவஸ்கி,அசோக மித்திரன், மாதவன் ,  சிங்காரம், நாஞ்சில் நாடன் பிடிக்கிறது. .சுஜாதாவின் நடை பிடிக்கிறது. கா,நா. சு வின் பொய்த்தேவு நல்ல நாவல் என்று கருதுகிறார். அவரும் கேரள தொடர்பு உள்ளவர். நல்ல மலையாள பாடல், நல்ல மலையாள படம் பிடிக்கிறது. இளையராஜா பிடிக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் பிடிக்கிறது.கலாபிரியாவின் கவிதை பிடிக்கிறது. அவரும் கம்யுனிசத்தை விட  காந்தியமே  நிரந்தர வழி என்று நினைக்கிறார்.  நிறைய விஷயங்களில்  எனக்கும் அவருக்கும் நிறைய  பொது ரசனை இருப்பதாக தோன்றுகிறது.

                                                      அவரது இணையத்தில்  வருகிற "முந்திய சில" ஒரு பெரிய தூண்டில். இந்த உத்திரப்பிரதேசத்தில், வருத்துகிற தனிமையுடன் , டிசம்பர் கடுங்குளிரும் சேர்ந்த ஒரு இரவில் படித்து கொண்டே திடீரென்று நேரம் பார்த்த போது இரண்டரை மணி! நாளை வேலைக்கு போகவேண்டுமே என்று அணைத்துவிட்டு படுத்தேன்.  அப்போதுதான் இவ்வளவு தூரம் பாதித்த மனுஷனை நம்ம BLOG -இல்  பதிவு  செய்யாவிட்டால் எப்படி என்று தோன்றியது.  எழுதிவிட்டேன்...!

1 கருத்து:

Jayaprakash Sampath சொன்னது…

ட்விட்டரில் கிடைத்த சுட்டி மூலமாக வந்தேன்.... இந்த மாதிரில்ல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு. தேங்ஸுங்க