பக்கங்கள்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பொள்ளாச்சி  மகாலிங்கம் 


HINDU  நாளிதழில்  பொள்ளாச்சி மகாலிங்கம்  மறைந்தார்   என்ற செய்தி படித்ததும் மனதில் நெருங்கிய உறவினரை இழந்தது  போல ஒரு உணர்வு . அவர் நிறுவனராக இருந்த நாச்சிமுத்து   POLYTECHNIC - இல்  தான் நான் படித்தேன். படிக்கும் போது அவர் மீது அப்படியொன்றும் பெரிய நல்ல அபிப்ராயம்  கிடையாது . பொதுவாகவே  

வியாழன், 2 ஜனவரி, 2014

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு ,

                                             நீண்ட நாட்களாக நான் ஏங்கிய விஷயம்  மகாபாரதத்தை முழுமையாக படிக்கவேண்டும் என்பது . ஆனால் அந்த மகாகாவியத்தின்  பிரம்மாண்டத்திற்கு முன்னால் மலைத்துத்தான்   போக வேண்டியிருக்கிறது. யாராவது  நம் மொழியில்  இதை தர மாட்டார்களா என்று ஏங்கினேன் . அதே  சமயம் எளிமை படுத்துகிறேன் என்று சிறுமை படுத்தி விடக் கூடாது . ஆனால்  நம் ஜெயமோகனே செய்கிறார்  என்பது ஒரு பாக்கியம் . இனி தினமும் சோமுவின்  காதில் சாத்தனூர் கோவில் மணி ஓசை   ஒலித்துக்   கொண்டிருந்தது போல   வெண்  முரசின் ஒலியும் என் உள்ளில்  ஒலித்து   கொண்டேஇருக்கும் .

அன்புடன்

A . ராமகிருஷ்ணன்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

காணி நிலம்


         காணி நிலம் வேண்டாம் பராசக்தி 
             காணி நிலம் வேண்டாம்  
             ஐந்து சென்ட் நிலம் போதும் பராசக்தி 
             ஐந்து சென்ட் நிலம் போதும் 
             அது இரண்டே வருடத்தில் 
             பத்து மடங்காய் மதிப்பு  உயர வேணும் 
             பராசக்தி ! மதிப்பு உயர வேணும் !
             பள்ளிக்கூடம், காலேஜ் ,ஆசுபத்திரி 
             பக்கத்திலே வேணும் , பராசக்தி 
             பக்கத்திலே வேணும் 
             நெடுஞ்சாலையிலே  பஸ் போகும் 
             சத்தம்  வந்து  காதில் விழ வேணும்,
             பஸ் ஸ்டாண்டும் பக்கத்திலே வேணும் 
              பராசக்தி பக்கத்திலே வேணும் 
              பத்து  பன்னிரண்டு தென்னை மரம் 
              கூடவே  வேணும் ,பராசக்தி 
              அதிலே தேங்கா போட்டு நான் 
              காசு பார்க்க வேணும் 
              வேறென்ன வேணும் பராசக்தி 
              முடிஞ்சா இனியொரு பிளாட் 
              இதேபோல வேணும்  

திங்கள், 18 பிப்ரவரி, 2013

திரு நாச்சிமுத்து -ஒரு இந்திய மாமா 


                                      சமீபத்தில் மறைந்த என் மாமா திரு நாச்சிமுத்து   இந்திய உறவு முறைகளின் ஆழமான  பிணைப்பிற்கு   ஒரு  சிறந்த  உதாரணம்.  அவர்  மாதிரியான மனிதர்கள்  இன்று அருகி வருகிறார்கள் . ஆனால்  இவரைப்போன்றவர்கள்  தான் இந்திய  உறவுகளின்  வேர்களாய்  இருந்து வந்திருக்கிறார்கள். பெற்றோர் , நண்பர்கள் என்கிற உறவுகளுக்கு மத்தியில் இந்த மாதிரி ஒரு உறவின் இடம் முக்கியமானது. என் மாமா என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரு துணையாக இருந்திருக்கிறார்.  என் திருமணம் , வீடு  என்று  எல்லா முக்கிய முடிவுகளிலும் அவர் பங்கு இருந்திருக்கிறது.   தாய்மாமன் என்ற உறவைப்பற்றி அவருக்கு மிக உயர்ந்த அபிப்ராயம் உண்டு . அது ஒரு தெய்வீகமான  உறவு  என்பார் .அவர் எனக்கு தாய் மாமன் இல்லை . என்  தந்தையின் சகோதரியின் கணவர்.ஆனால்  ஒரு தாய் மாமன் போல தான் இருந்தார். என் அம்மாவிற்கு சகோதரர்கள்  இல்லை. அவர் ஒரே பெண் . என் தங்கை பருவமடைந்த  போது  யாரிடமோ எனக்கு சீர் செய்ய தாய் மாமன் இல்லை என்று சொன்னார் என்று கேட்டு சண்டைக்கு வந்து  விட்டார் . உடனடியாக   தேவையான பொருட்களை வாங்கி வந்து சீர் செய்து விட்டு  நான் இருக்கும் வரை எதற்கும் கவலைப்படகூடாது : எல்லாவற்றுக்கும் மாமா  இருக்கிறேன்  என்ற போது அவர் குரலின் அன்யோன்யம்  நெஞ்சை தொட்டது. .

                                   சிறிய வயதில் அவர்  ராமு என்று கூப்பிடும்போது குரலில் சொட்டும் பிரியம் இப்போதும் நினைவில் தித்திக்கிறது . பிறகு நான் அவர் சகோதரர்  மகளை மணந்து மருமகன் முறை ஆனதும் மாப்பிள்ளை என்று கூப்பிட ஆரம்பித்தார் .நீங்கள் என்கிற மரியாதை விளியும் தொடங்கி விட்டது.  எவ்வளவு சொல்லியும் மரியாதையை கை விடவில்லை . ஆனாலும் குரலில் சொட்டுகிற பிரியம் மட்டும் குறையவே இல்லை. சாப்பிடும் போது பார்த்து பார்த்து உபசாரம் செய்வார் . மாப்பிளைக்கு அதை எடுத்து வை , இதை எடுத்து வை என்று ஒரே தடபுடல்தான் . அவர் வீடே ஒரு பெரிய ஜங்ஷன் போல இருக்கும் . பொள்ளாச்சிக்கு எதோ வேலையாக வரும் எல்லா உறவினர்களும்  அவர் வீட்டிற்கு வராமல் இருக்க முடியாது . வராவிட்டால் கோபித்து கொள்வார். வீட்டில் தினமும் விருந்தினர் இருப்பார்கள்  வேலை இருந்துகொண்டே இருக்கும்.  ஆனால் அவர் சளைக்க  மாட்டார் . பார்த்து பார்த்து செய்வார் . வந்து போகிறவர்கள் முகமும் மனமும் நிறைந்திருக்கும்

                              PLANNING- இல், ORGANIZING- ல்  மன்னன் . எந்த வேலை  என்றாலும் ஒரு file  போட்டு விடுவார். அரசாங்க file  போல tag  போட்டு  பேப்பர் பேப்பராக  கோர்த்து வைதுகொண்டே இருப்பார். கால  அட்டவணை , பட்ஜெட் ,  பொறுப்புகளை  பகிர்ந்தளித்தல்  எல்லாம் பக்காவாக இருக்கும். கணக்குகள்  பைசா துல்லியத்திற்கு சரியாக இருக்கும். என் திருமணத்திற்கு , என் வீட்டு வேலைக்கு  அவர் தயாரித்து வைத்திருந்த கோப்புகளை பார்த்து வியந்து போனேன் . கொத்தனாருக்கு பஜ்ஜி வாங்கிகொடுத்த செலவு கூட எழுதி வைத்திருந்தார் .

                                  என் மேல் அவருக்கு கொஞ்சம் பாசம் ஜாஸ்தி . அவருடைய எல்லா உறவுகளுக்கும் அப்படிதான் தோன்றும் என்றாலும் என் மீது கொஞ்சம் ஜாஸ்திதான் . ஒருமுறை நானும் சுதாவும் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு வரும்போது அதிகாலை அவர் வீடு முன்னாலேயே பேருந்திலிருந்து இறங்கி விடுவதாக சொன்னேன். எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று கேட்டார் . காலை மூன்று மணியிலிருந்து நான்கு  மணிக்குள் வந்து விடுவோம் என்று சொன்னேன். காலை மூன்று மணிக்கு வந்து இறங்கியபோது , கொட்டும் பனியில் ,  கரும் இருளில் அந்த தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சால்வையை போர்த்துக்கொண்டு வரும் பேருந்துகளை பார்த்துகொண்டு நின்றிருந்தார். என்ன மாமா இது என்று கேட்டபோது தூக்கம் வரவில்லை மாப்பிள்ளை என்றார் . மென்மையான குரல் அவருடையது.  ஆனால் கேட்கும்போது நமக்காக ஏதும் செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்து விடும். என்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது, வீடு வாங்க வைத்தது  அந்த பேச்சு தான் .

                                  நான்  வேலைக்காக மதுரா  வந்தது அவருக்கு  வருத்தம் . ஒவ்வொரு  வாரமும் போன் செய்யும்போதும்  "ஏன்  மாப்பிள்ளை , கொஞ்சம்  சம்பளம் கம்மியாயிருந்தாலும்  இங்கே மாத்திட்டு வந்திருங்களேன் . அப்பா , அம்மா வயசான  காலத்திலே தனியாக இருக்காங்களே " என்பார் . கிடைக்க மாட்டேங்குதே  மாமா   என்று  நான் சொல்லும்போது ஒரு கணம் மௌனமாக இருப்பார் . பிறகு  பேச்சை மாற்றுவார்.

                           அவருக்கு  உடல் நிலை சரியில்லை  என்று  செய்தி வந்ததும் ஓடினோம். ஒருநாள் அவருடன் ஆஸ்பத்ரியில் இருக்க வாய்ப்பு கிடைத்தது . நீங்க கூட இருந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது என்றார். இந்த லிவர் பிரச்சினை இல்லாவிட்டால் இன்னும் பத்து வருடம் இருப்பேன் என்றார். இதுவும் சரியாக போய்விடும் மாமா என்றேன் . எனக்கும் நம்பிக்கை இல்லாமலில்லை என்றார் . ஆனால் அனைத்து  நம்பிக்கைகளும் பொய்த்துப்போனது .

                           இப்போதும் கண்ணை மூடினால் "மாப்பிளை , நம்ம புரோக்கர் ஒரு FIRST  CLASS  இடம் சொன்னாரு வாங்கி போட்டா ...." என்கிற குரல் கேட்பது போல இருக்கிறது . இனி வாழ்வில் கூட மாமா இருக்க மாட்டார் என்பது  ஜீரணிக்க கஷ்டமாக தான் இருக்கிறது.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

                         சங்கசித்திரங்கள மீண்டும் படித்து கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய  படைப்பாளிகளை குறித்து பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாக குறிப்பிடடு  இருக்கிறீர்கள் . அது புத்தகமாக வெளி வந்துள்ளதா ? பதிப்பகத்தின்  பெயர் தெரிவித்தால் என் மலையாள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த  உதவியாக இருக்கும் 

அன்புடன்

ராமகிருஷ்ணன்

                

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

மத்துறு தயிர்

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு,

அறம், சோற்று கணக்கு, இவை   தந்த பிரமிப்பு மாறுவதற்குள் மத்துறு   தயிர்.. !
உங்கள் மத்து இதயத்துக்குள் ஏற்படுத்திய கொந்தளிப்புகள்  அநேகம்..! ஏற்கெனவே  நான் பதினெட்டு வருடம் கழிந்து முதல் முறையாக  குடும்பத்தை பிரிந்து தனிமையின் பாலையை உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் செல்ல மகளின் புகைப்படத்தை  பார்க்கிற ஒவ்வொரு நிம்டமும் என் மனம் அடையும் உணர்வை அன்றே கம்பன் சரியாக சொல்லியிருக்கிறானே. கம்பன் ஒரு மகாகவி என்று உணர  வைத்ததற்கு நன்றி ஜெயமோகன்!. எழுத்து உங்களுக்கு ஒரு தவம் எனதை நீங்கள் நிருபித்துகொண்டே  இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிரிவும்  சின்ன சாவுகள் தான்... எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..!  ஆனால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது போன்ற துயரங்கள் தற்காலிகமானவை  ! ராஜத்தின் துயரம் முன்னால்  இதைப்பற்றி சொல்வதே அநாகரிகமானது.  சில மனிதர்களை மகத்தான துயரங்கள் தாக்குகிற போது கையாகலாமல் அருகிலிருந்து   பார்க்க நேரிடுவது ஒரு  சோகம்.. எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.. உங்கள் கதை இன்றும் எனக்கு உறக்கம் இல்லாமல் செய்துவிடும்..!

அன்புடன்
ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நன்றி

பிரிவு என்பது ஒரு பயிற்சியும் கூட

உனக்கு வணக்கம் பிரிவே
நீ கண்களைக் கட்டி எங்களை
ஒருவரை ஒருவர் பார்க்கச்செய்தாய்


என்பது வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனனின் மலையாள கவிதை

பிரிவில் நாம் பலவற்றை துல்லியமாக காண்கிறோம்

ஜெ

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு
சத்தியமான வார்த்தைகள்.

இந்த பிரிவில் எனக்கும் என் மனைவிக்குமான புரிதல் மேம்பட்டதை உணர்ந்திருக்கிறேன்.

இன்றைய  என் வாழ்வில் உங்கள் வலைப்பூவின் பங்கு மகத்தானது.  எனக்காக நேரம் செலவிட்டதில் நன்றி.

அன்புடன்

ராமகிருஷ்ணன்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அறம் , சோற்று கணக்கு - ஜெயமோகனின் புதிய சாதனைகள்

ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதைகளான  அறம், சோற்று கணக்கு இரண்டையும் அவரது தளத்தில் படித்தேன். நிச்சயம் அவரது சிறந்த படைப்புகளில் இவை சேரும்.  அறம் இதுவரை மூன்று முறை படித்துவிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் கண்ணில் நீர் மல்குவதை தவிர்க்கமுடியவில்லை. அறம் அது அவகிட்ட அல்ல இருந்தது என்ற முத்தாய்ப்பில் ஒ. ஹென்றியின் இறுதி வரிகள் தருகிற பரவசம் கிடைக்கிறது. இந்த கதையை எழுத்தாளர்களை , மற்ற எளியவர்களை சுரண்டி பிழைக்கிற கயவர்களை எல்லாம் படிக்க சொல்ல வேண்டும். கொஞ்சம் பேருக்காவது சொரணை வராதா?  கேதேல்  சாகிப்பு மகத்தான பாத்திரபடைப்பு.  இந்த மாதிரி மகாத்மாக்களும்  வாழ்ந்திருக்கிறார்கள் என்று எண்ணும்போது நிறைவாக இருக்கிறது. இந்த இரண்டு கதைகளும் நிச்சயம் ஜானகிராமனின் தரத்தை  அடைந்தவை

செவ்வாய், 11 ஜனவரி, 2011

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,
                                   
                                                     நிறைய  வேலை நெருக்கடிக்கு இடையிலும் பதில் அனுப்பியதற்கு நன்றி. உங்கள் நாவல்களைப்பற்றி கொஞ்சம் எதிர்மறையாக எழுதியபோதும் பொறுமையுடன் பதிலளித்த உங்கள் பண்பு என்னை கவர்ந்தது.   ஒரு சிறு விளக்கம்.  நான் முதல் வகை நாவல்களே சிறந்தவை என்று எண்ணவில்லை. அவைகளே எனக்கு பிடிக்கிறது என்றுதான் சொன்னேன். ஆனால் எங்கும் நின்று விடும் உத்தேசமில்லை எனக்கு. முன்னகரவே விரும்புகிறேன்.  ஆகவே இந்த நாவல்களை  மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு     செய்வேன்.  ஒருவேளை  மீண்டும் படிக்கும்போது புதிய  அழகுகள் புலனாக கூடும். 46  வயது நின்று விடும் வயதல்ல என்றே நினைக்கிறேன். . 

நான் இப்போது U .P -யில் இருக்கிறேன். கொற்றவை வாங்கி அனுப்ப சொல்லியிருக்கிறேன். படித்து விட்டு எழுதுவேன்.  இதே வரிசையில் நான் படிக்க ஏதேனும் நல்ல நாவல்கள் ஆங்கிலத்திலும் , தமிழிலும்  சொல்லுங்களேன்  . எனக்கு ஆற்றோட்டமான கதைகள்தான் பிடிக்கும்  என்றில்லை. எனக்கு ரொம்பவும் பிடித்த புத்தகங்களான  ஜே. ஜே. சில குறிப்புகள் , THE OUTSIDER  போன்றவை அப்படியில்லையே?  

எனக்கு இரண்டு சந்தேகம். 1 . இரண்டாம் வகை நாவல்கள் தான் சிறந்தவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 2 . என் நடையை பயில்முறைதன்மை கொண்டது என்று சொல்லியிருக்கிறீர்கள்.  எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா?  என் நடையை மேம்படுத்த உண்மையாகவே விரும்புகிறேன்.  உங்கள் ஆலோசனைகள் எனக்கு உதவியாகவிருக்கும். உங்கள் வேலைபளுவைப்பற்றி நான் அறிவேன்.  மீண்டும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இந்த கடிதத்திற்கு மட்டும் பதில் அளிக்கவும்.
அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு
சத்தியமான வார்த்தைகள்.

இந்த பிரிவில் எனக்கும் என் மனைவிக்குமான புரிதல் மேம்பட்டதை உணர்ந்திருக்கிறேன்.

இன்றைய  என் வாழ்வில் உங்கள் வலைப்பூவின் பங்கு மகத்தானது.  எனக்காக நேரம் செலவிட்டதில் நன்றி.

அன்புடன்

ராமகிருஷ்ணன்

திங்கள், 10 ஜனவரி, 2011

JEYAMOHAN-PIN THODURUM ORU KURAL

ஜெயமோஹனை  நான் கோவையில் செஞ்சிலுவை சங்கத்தில்  அவருக்கு தாகம் நாவல் போட்டியில் அகிலன் நினைவு  பரிசு பெற்றததற்காக நடந்த விழாவில் வைத்து பார்த்தேன். அது நடந்து ஒரு 22-23 வருடம் இருக்ககூடும். அந்த செஞ்சிலுவை சங்கத்தில் இருந்த ஒரே அழுக்கு கழிப்பறையில் நான் சிறுநீர் கழித்துவிட்டு வரும்போது அவர் வந்தார்.வழிமறித்து "ரப்பர் நன்றாக இருந்ததுங்க " என்றேன். அவரும் புன்னகைத்து விட்டு போனார். அவருக்கு, தமிழ் நாவலின் எதிர்காலத்தைப்பற்றியும், அதில் தனக்கு இருக்கபோகிற இடத்தைப்பற்றியும் ஒரு உணர்ச்சி மிகுந்த உரை ஆற்றிவிட்டு சிறுநீர் கழிக்க செல்கிற அவசரம்.  அந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற சந்திப்பை அவர் ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை. . ஆனால் இப்போது என் வாசிப்பில் தவிர்க்கமுடியாத எழுத்தாளர்களில் ஒருவராகி  விட்டார், ஒரு போட்டியில் பரிசு பெற்றது என்பதால் ஒரு அவநம்பிக்கையோடுதான் ரப்பரை வாங்கினேன். ஆனால் அந்த நடையும்  அந்தகளமும் ரொம்ப ஈர்த்தது. . தமிழில் ஒரு முக்கிய எழுத்தாளராக வரப்போகிறார்  என்பதற்கான அத்தாட்சிகள்  அந்த நாவலில் நிறையவே  இருந்தன.  அப்புறம் அவரின் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள்  நிறைய   படித்துக்கொண்டே இருந்தேன்.  சக்தி  வாய்ந்த எழுத்து. திசைகள் நடுவே என்கிற கதையில்  அம்மாவை இழந்த ஒருவனின் உணர்வை ஆழமாக சொன்ன விதம்,  சுஜாதா பாராட்டிய பல்லக்கு காட்டிய வாழ்க்கை, கிராம தெய்வம் மாடனின் இன்றைய பரிதாப நிலையை சொன்ன மிகச்சிறந்த நகைச்சுவை கதையிலிருந்த எள்ளல் நடை, (மாடனின் மோட்சம்) மடத்து வாழ்வின் அரசியலை சொன்ன கதை என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு ரொம்ப பிடிததவற்றில் கலைஞன் கலையாகவே  மாறிபோகும் லங்கா தகனம் என்கிற அற்புதமான கதையையும் ,  எல்லாம் காலசுழற்சியில் மீண்டும் நிகழும்  என்கிற தத்துவத்தை கண்டுபிடித்து அதை நிலை நிறுத்துவதற்காக தன் வாழ்வையே தொலைத்து பின் வாழ்வின் இறுதிக்கணங்களில்  அந்த தத்துவம் பொய்யாகிவிடகூடாதா என்று ஏங்குகிற அந்த நம்பூதிரியின் பரிதாபக்கதையையும்  சொல்லலாம். (ஜகன்மிதிரை?) . சங்கச்சித்திரங்கள் ஏன் வாசிப்பு உலகத்தை விசாலமாக்கியது.

ஜெயமோகனின் எழுத்தைவிட  என்னை பாதித்த விஷயம்  அவர் பெற்றோர் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது. முதலில் அதை நான் நம்பக்கூட   இல்லை. ஏதோ அதிர்ச்சி மதிப்பு ஏற்படுவதற்காக  சொல்கிறார் என்று எண்ணினேன். ஏற்கனவே  சாரு நிவேதிகா என் தங்கை ஒரு செக்ஸ் வொர்க்கர் என்று எழுதியதை  படித்திருந்தேன். இதொரு FASHION போல என்று எண்ணினேன். இதையெல்லாம் எதற்கு சொல்கிறார் என்றுகூட நினைத்தேன். ஆனால் ஒரு இணையதள பேட்டியில் அவர் அந்த மரணங்களை விவரித்த விதம்,அதில் இருந்த உண்மை ரொம்பவே பாதித்தது. அது எப்படி,ஒரு தாயால், ஒரு தந்தையால், தான் நேசிக்க ,தன்னைநேசிக்கிற,தன்னையே  நம்பிஇருக்கிற  ஜீவன் ஓன்று  இருக்கிறது என்பதை மறந்து எப்படி  போய் விட முடியும்,  தன் அன்பு கூட அவர்கள் மரணத்தை தடுக்க முடியவில்லையே என்று எண்ணும்போது அந்த இளம் மனம்  எப்படி பாடுபட்டிருக்கும். அதுவும் இருவரும்...! எப்படி அவர்களுக்கு மனசு வந்தது? எந்த சூல்நிலையாயிருந்தாலும்...  ரொம்ப படித்தாலே மனசு ஒருமாதிரியாய் விடும்போல... I AM NOBODY TO JUDGE . STILL .....!

                     பிறகுஆருயிர்நண்பனையும் இதே  மாதிரி இழக்கவேண்டியிருந்திருக்கிறது.  யாருக்கும் நேரக்கூடாத கொடுமை. இந்த மாதிரி துன்பங்கள் நேர்ந்ததால் தான்  அவர் ஒரு எழுத்தாளரானார் என்றால்  அவர் எழுத்தாளர் ஆயிருக்கவே வேண்டாம் . பெற்றோரோடும், நண்பனோடும் சாதாரண மனிதனாய் வாழ்ந்திருக்கலாம்  என்று தான் நான் சொல்வேன். ( சுந்தரராமசாமி ஜேஜேயில் சொன்னது போல) . ஆனால் நடப்பதுதானே நடக்கும்! இப்போது அந்தக்காயங்கள் கொஞ்சம் குறைந்து இனிய வாழ்வு அமைந்திருக்கிறது என்று தெரிகிறபோது சந்தோசமாக இருக்கிறது.

ஜெயமோகனின் பிற்கால நாவல்களைப்பற்றி பேச கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது. . காடு, . விஷ்ணுபுரம், பின் தொடரும்  நிழலின் குரல்  படித்தேன். விஷ்ணுபுரம்  பெரிய சாதனைதான். படிக்கும்போது பிரமிப்பாய்த்தான் இருந்தது. ஆனால் இரண்டு வருடம் கழித்து யோசிக்கும்போது மனதில் ஒன்றுமே தங்கவில்லை. இந்த கட்டுரை எழுதுவதற்காக யோசித்தபோது காட்டிலிருந்தும்  , விஷ்ணுபுரத்திலிருந்தும் ஒரு ஜீவன் கூட  நினைவில் வரவில்லை.  இருபது வருடம் முன்பு படித்த பொன்னு பெருவட்டரும், கங்கன் காணியும் , குளம் கோரியும், பிரான்சிசும் இன்னும் மனதை விட்டு போகாத நிலையில் விஷ்ணுபுரத்தில் இருந்து யாரும் உள்ளேயே வரவில்லையே? ஏன்? எனக்கு தெரிந்த காரணம் ரப்பர் எழுதியது. அதன் பின் வந்தவை எல்லாம் செய்தது.  ஆகவே செய்நேர்த்தி இருக்கிறது. பாத்திரங்களில்   ஜீவன் இல்லை.
பின் தொடரும் நிழலின் குரல்  சமீபத்தில் படித்ததால் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது. அதைப்பற்றி சொல்கிறேன். 
  இந்த தடவை ஊருக்கு வந்து விட்டு டெல்லி திரும்பும் முன்  ஏதேனும் புத்தகம் வாங்கலாம்  என்று விஜயா பதிப்பகம் போனேன்.  மணல் கடிகை, கொற்கை தேடினேன். கிடைக்கவில்லை. அங்கிருந்து தம்பிக்கு போன் செய்தேன். அவன் சரியாக சொல்வான். அவன் சொல்லித்தான் ஆழி சூழ் உலகு வாங்கினேன். ஜெயமோகனின் கொற்றவை , குரூசின்  கொற்கை இரண்டும் வாங்கு  என்றான். . இரண்டும் கிடைக்கவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் தான் இருந்தது. அதுவும் படிக்கலாம் என்றான். படிக்கலாம் சரி.. வாங்கலாமா? என்றேன்  வாங்காமல் எப்படி படிப்பது? நியாயமான கேள்வி! பின் தொடரும் நிழலின் குரலின்  சில பகுதிகள் அற்புதமாக இருக்கிறது. ஆரம்பம் அழுத்தமாக இருக்கிறது. KKM இன் பாத்திரப்படைப்பும் நன்றாக வந்திருக்கிறது. KKM- ஐ  அருணாசலம் பதவியில் இருந்து இறக்குவது,    புகாரினின் மனைவியை ரணில் சந்திப்பது, வீரபத்திர பிள்ளையின் சிறுகதைகள்,   போன்ற சில பகுதிகள் நன்றாக வந்திருக்கிறது.  நாவல் கொண்டு செல்லும் முடிவுகளோடும் எனக்கு உடன்பாடே.  ஆனால் நாவலில் முழுமையாக ஒன்றமுடியவில்லை.  முக்கிய காரணம் , புகாரினிர்க்காக  வாழ்வை இழக்கும் வீரபத்ரனையும் , அவருக்காக  வாழ்வை இழக்கும்  அருணாச்சலத்தையும் இயல்பாக ஏற்க முடியவில்லை. கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது.  கதா பாத்திரங்களின்  படைப்பும்  ஜீவனுடன் இல்லை. அருணாசலம், கதிர், வீரபத்திரன், ஜெயமோகன், ராமசாமி, ஜோனி எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறார்கள். பேசாமல் ஜெயமோகன் 1 , 2 ,3 என்றே பெயர் கொடுத்திருக்கலாம். பொன்னு பெருவட்டர் போன்ற பாத்திரத்தை  படைத்த பேனாவிலிருந்து இன்னும் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தேன். பொன்னு பெருவட்டர் எவ்வளவு அநீதி செய்திருந்தாலும் அவரை வெறுக்கமுடியவில்லையே.  அதுதான் படைப்பு.  நாகம்மை, KKM  , KKM -இன் அச்சி, கோலப்பன், சொக்கன் , நாராயணன் போன்ற சில தோழர்கள் , இவர்கள் எல்லாம் மண்ணில் நிற்பதால்  மனதில் நிற்கிறார்கள்.  .   ஆனால் பேசி பேசி ஒன்னயும் தெளிவுபடுத்திக்க முடியாது. தெளிவு இருக்கிற இடத்தில பேச்சு இருக்காது என்று நாகம்மை சொல்வது  நன்றாக இருந்தாலும் அதை நாகம்மைசொல்வாளா?என்றுசந்தேகம் தோன்றுகிறது.
                                                  ஜெயமோஹனே சொல்வது போல  "அருணாச்சலத்தையும், வீரபத்திரனையும் புரிந்துகொள்ள முடியவில்லை. எனது தட்டையான உலகத்தில் மிகையான நாடக நடிப்பு போல இருக்கின்றன."

.  ஆனால் இந்த புத்தகங்களால் தான் அவர் ரொம்ப புகழடைந்திருக்கிறார். அப்ப என் மீது தான் தவறோ?  நான்தான் வளராமல் பின் தங்கிவிட்டேனோ? சீக்கிரம் தீர்ப்பு சொல்லாமல் மீண்டும் படித்து பார்க்க வேண்டும். தம்பி கொற்றவை  நிஜமாகவே ஒரு நல்ல படைப்பு என்கிறான். அதையும் படிக்க வேண்டும். 

என் பிரச்சினை நான் ஒரு கதை விரும்பி. எனக்கு கதையும் கதா பாத்திரங்களும் தான் முக்கியம்.  என்னை மிகவும் பாதித்த KARAMAZOV BROTHERS - இல் மித்யாவும், அல்யோஷாவும் , இவானும் தாஸ்தாவஸ்கியின் பிம்பங்கள் ஆனாலும் எவ்வளவு வேற்றுமையுடன் அசலாக இருக்கிறார்கள். அல்யோஷாவும்  இவானும்  வாதம் நடத்தும் கட்டத்தில் இவானாகவே மாறி எழுதிய தாஸ்தாவஸ்கி எழுதி முடித்ததும் இவான் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த வாதங்களுக்கு அல்யோஷா எப்படி பதில் சொல்ல போகிறானோ? என்று கவலைப்பட்டதாக  சொல்வார்கள்.  ஆனால் அல்யோஷா வெளுத்து வாங்கிவிடுவான். அனுபவித்து அனுபவித்து படித்தேன். தாஸ்தாவஸ்கியின் எல்லா கதா பாத்திரங்களும் ரத்தமும் சதையுமான அசல் மனிதர்கள். CITADEL -இல் வருகிற டென்னி, ஜானகிராமனின் பாபு, சுந்தர ராமசாமியின் ஜேஜே , நாஞ்சில் நாடனின் சண்முகம் , ஜெயமோகனின் பொன்னு பெருவட்டர் , கந்தசாமியின் சிதம்பரம், சிங்காரத்தின் பாண்டியன், அசோக மித்திரனின் எந்த ஒரு நானும்  , குரூசின் தொம்மந்திரை, காகு சாமியார்   என்று சொல்லிக்கொண்டே போகலாம். கதை மூலமும், சுவாசிக்கிற கதா பாத்திரங்கள்  மூலமும் தான் மனித மனத்தின் உள்ளே கடந்து செல்ல முடியும். தத்துவங்கள் மூலமாகவோ கோட்பாடுகள் மூலமாகவோ அல்ல.  இந்த கோட்பாடு குறைந்த பட்சம் எனக்கு பொருந்தும்.

ஆனால் ஜெயமோஹனைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுத தூண்டியது எழுத்தின் மீது அவருக்கு இருக்கிற தீரா வெறி.  என்றைக்கு திறந்தாலும் அவரது  இணையத்தில் எதாவது புதிதாக இருக்கும்.  தினமும் படித்துக்கொண்டே இருக்கிறேன். அவரின் பரிமாணங்கள் தெரிந்து கொண்டே இருக்கிறது. அவருக்கும் தாஸ்தாவஸ்கி,அசோக மித்திரன், மாதவன் ,  சிங்காரம், நாஞ்சில் நாடன் பிடிக்கிறது. .சுஜாதாவின் நடை பிடிக்கிறது. கா,நா. சு வின் பொய்த்தேவு நல்ல நாவல் என்று கருதுகிறார். அவரும் கேரள தொடர்பு உள்ளவர். நல்ல மலையாள பாடல், நல்ல மலையாள படம் பிடிக்கிறது. இளையராஜா பிடிக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் பிடிக்கிறது.கலாபிரியாவின் கவிதை பிடிக்கிறது. அவரும் கம்யுனிசத்தை விட  காந்தியமே  நிரந்தர வழி என்று நினைக்கிறார்.  நிறைய விஷயங்களில்  எனக்கும் அவருக்கும் நிறைய  பொது ரசனை இருப்பதாக தோன்றுகிறது.

                                                      அவரது இணையத்தில்  வருகிற "முந்திய சில" ஒரு பெரிய தூண்டில். இந்த உத்திரப்பிரதேசத்தில், வருத்துகிற தனிமையுடன் , டிசம்பர் கடுங்குளிரும் சேர்ந்த ஒரு இரவில் படித்து கொண்டே திடீரென்று நேரம் பார்த்த போது இரண்டரை மணி! நாளை வேலைக்கு போகவேண்டுமே என்று அணைத்துவிட்டு படுத்தேன்.  அப்போதுதான் இவ்வளவு தூரம் பாதித்த மனுஷனை நம்ம BLOG -இல்  பதிவு  செய்யாவிட்டால் எப்படி என்று தோன்றியது.  எழுதிவிட்டேன்...!

புதன், 5 ஜனவரி, 2011

NAMMA NAANCHIL NADAN!

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது ஏதோ எனக்கே கிடைத்ததைப்போல ஒரு சந்தோஷம். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்களின் சிந்தனையும்  என்னுடையதும் எப்போதும் ஒத்துப்போவது போல ஒரு தோணல். நாஞ்சில் நாட்டிற்கே உரிய எள்ளல் மிகுந்த அவரின் நடை, பெண் பயணிகள்  சிறுநீர் கழிக்க  அவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகள், சதை வியாபாரம் செய்கிற பத்திரிக்கைகள் என்று பல சமூக பிரச்சனைகளிலும் அவர் காட்டுகிற தார்மீக கோபம் என்று அவர் எழுத்து பல விதங்களில் ஈர்க்கிறது
அவருடைய மிதவை, மாமிசப்படைப்பு, தலைகீழ்  விகிதங்கள், என்பிதலதனை வெயில் காயும் எல்லா புத்தகங்களோடும் வாழ்ந்திருக்கிறேன். என்னையே கண்ணாடியில் பார்ப்பதாக உணர்ந்திருக்கிறேன்.  நான் தான் கொஞ்சம் சண்முகம் , கொஞ்சம் நாராயணன், கொஞ்சம் சிவதாணு, கொஞ்சம் பூதலிங்கம்....
.மேலும் அவரும் என்னைப்போலவே ஒரு TEXTILE  பிராணி. மில்லில் வேலை செய்யாவிட்டாலும் ஏதோ WINDING MACHINE  விற்பதற்காக ஊர் ஊராய் அலைந்திருக்கிறார். பிழைப்பிற்காக வெளியூர் சென்று அவதிப்படும் நம்ம வாழ்வை அழகாய் எழுதியிருக்கிறார்.  மேலும் என்னைப்போலவே ஒரு சாப்பாட்டுப்பிரியர்   என்பது அவர்  ரசித்து எழுதியிருப்பதிலியே தெரிகிறது. அப்புறம் என்ன நாஞ்சில்நாடன் நம்ம ஆள்தானே! வாழ்த்துக்கள் நாஞ்சில் !!. இன்னும் நிறைய எழுத வேண்டும். ஆண்டவன் அதற்கு நல்ல ஆயுளை தரவேண்டும்.!