ஹார்ப்பர் லீ எழுதிய To kill a Mocking bird-ஐ மீண்டும் படித்தேன். ஹார்ப்பர் லீ இரண்டு புத்தகங்கள்தான் எழுதியிருக்கிறார். 1960-ல் எழுதிய To kill a mocking bird அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. புலிட்ஸர் பரிசும் கிடைத்தது. ஒரு கிளாஸிக் என்று கருதப்படுகிறது. திரைப்படமாகவும் வந்தது.
அதற்குப்பிறகு லீ நீண்டகாலம் ஒன்றுமே எழுதவில்லை. ஐம்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2015-ல் Go set a Watchman என்கிற புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் அது 1950-லியே எழுதப்பட்டு அவருக்கு அவ்வளவு திருப்தி தராததால் வெளியிடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதை செம்மைப்படுத்தி 2015-ல் வெளியிட்டார்.TO KILL A MOCKINGBIRD க்கு prequel என்று சொல்ல முடியும். அது அவ்வளவு வரவேற்பு பெறவில்லை. TO KILL A MOCKING BIRD அவரது ஒரே மாஸ்டர்பீஸாக அமைந்து விட்டது. இதே போல் இரண்டு நாவல்கள் மட்டும் எழுதிய ப.சிங்காரம் ஞாபகத்திற்கு வருகிறார்.
ஜீன் லூயிஸ் ஃபின்ச் என்கிற சிறுமிதான் இந்த நாவலின் கதைசொல்லி. ஸ்கௌட் என்று அன்பாக அழைக்கபடுகிறார். அட்டிகஸ் என்கிற வழக்கறிஞரின் மகள். ஜிம் என்று ஒரு அண்ணன். டில் என்று ஒரு நண்பன். இந்த மூன்று குழந்தைகளின் வாழ்வின் வழி இந்த நாவல் செல்கிறது.
குழந்தை கதை சொல்கிற மாதிரி வேறு சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். ஒன்று ரொம்ப பெரிய மனுசத்தனமாக படிக்கவே எரிச்சலாக இருக்கும் அல்லது குழந்தைகள் கூட படிக்க முடியாத மாதிரி இருக்கும். இந்த நாவலின் நடை மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஒரு எட்டு வயசு சிறுமியின் வார்த்தைகளில் பெரிய விசயங்கள் எல்லாம் இலகுவாக சொல்லப்பட்டிருக்கும்.
அட்டிகஸின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் போ ரெட்லீ என்கிற இளைஞன் வசிக்கிறான். சிறு வயதில் நடந்த சில அசம்பாவிதங்கள் மூலம் மனநிலை சிறிதாக பாதிக்கப்பட்டு தனிமையில் வசிக்கிறான். வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. அவனை ஒருமுறையாவது பார்க்க மூன்று சிறுவர்களும் முயல்கிறார்கள். அவர்கள் முயற்சிகள் வேடிக்கைகரமான தோல்வியில் முடிவடைகின்றன. தனிமையில் இருக்கும் போவுக்கு இவர்களின் அருகாமை மகிழ்வைத் தருகின்றன. சிறு பரிசுகள் தர முயல்கிறான். ஸ்கௌட்டின் மீது அவனுக்கு அலாதிப்பிரியம். ஒரு தீ விபத்தை வேடிக்கைப் பார்க்க குளிரில் நடுங்கி நிற்கும் அவளுக்கு அவள் அறியாமல் போர்வை போர்த்துகிறான். இவர்களின் adventures அழகாக எழுதப்பட்டிருக்கிறது.
இன்பமாக சென்றுகொண்டிருக்கும் அட்டிகஸ் குடும்பத்தின் வாழ்க்கையில் புயலாக ஒரு சர்ச்சை குறுக்கிடுகிறது. ஒரு வெள்ளை இனப் பெண்ணை வன்புணர்வு செய்து விட்டதாக ஒரு கருப்பின இளைஞர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அட்டிகஸ் அந்த இளைஞருக்கு ஆதரவாக வாதாட நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார். அவர்கள் வசிக்கும மேகோம்ப் என்கிற சிறுநகரத்தில் வெள்ளை இனத்தவரிடம் அட்டிகஸிற்கு எதிராக உணர்வு கிளம்புகிறது. அதன் எதிரொலிகளை ஜிம்மும் ஸ்கௌட்டும் நேரிட வேண்டியிருக்கிறது. அவர்களால் தங்களுக்கு எதிரான இந்த வெறுப்புணர்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அட்டிகஸ் தன் குழந்தைகளை இந்த சூழலை எதிர்கொள்ள பக்குவப்படுத்தும் விதம் அற்புதமாக இருக்கும். வயது முதிர்ந்தவர்களிடம் பழகுவது போலவே அவன் அவர்களிடம் பழகுகிறான். அவர்களின் சந்தேகங்களுக்கு அவன் அளிக்கிற விளக்கங்கள், இன வெறுப்புக்கு எதிராக புரிந்துணர்வை அவர்களிடம் அவன் விதைக்கிற விதம், நகரமே எதிர்க்கிற போதும் ஏன் அந்த வழக்கை எடுத்துக்கொண்டான் என்று சொல்வது எல்லாம் ஹார்ப்பர் லீ எழுதியிருக்கும் முறைதான் இதை ஒரு கிளாஸிக் ஆக மாற்றுகிறது. அட்டிகஸின் ஒரு வரித் தெறிப்புகள் அட்டிகஸ் மேற்கோள்கள் என்றே புகழ் பெற்றிருக்கின்றன.
ஒரு வெள்ளை இனக் கும்பல் ஆயுதங்களுடன் குற்றம் சாட்டப்பட்ட டாம் என்ற கருப்பின இளைஞனையும் அட்டிகஸையும் தாக்க வருகிறது. ஸ்கௌட் அவர்களிடம் குழந்தைக்கே உரிய அறியாமையுடன் பேசும்போது அவர்கள் நடந்துகொள்ளும் விதம் ரசிக்க வைக்கிறது.
டாம் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க அட்டிகஸ் புத்திசாலித்தனமாக வாதாடினாலும் வெற்றி பெற்றானா என்பது எது வெற்றி என்று நாம் உணர்வதைப் பொறுத்தது.
அட்டிகஸ் அந்தப்பெண் அப்படி குற்றம் சாட்டுவதற்கான சூழல் எப்படி வந்தது என்று காட்டும்போது அந்தப் பெண் மீது பரிதாபம் எழுகிறது.
அட்டிகஸ்ஸின் சில மேற்கோள்கள்:
ஒரு மனிதனை அவன் கண்ணிலிருந்து விஷயங்களைப் பார்க்காவிட்டால் புரிந்துகொள்ளவே முடியாது. அவன் தோலுக்குள் இறங்கி அவனாக நடக்காதவரை அவனைப் புரிந்து கொள்ளமுடியாது.
தைரியம் என்பது நீ அடிக்கப்பட்டுவிட்டாய் என்று தொடங்குவதற்கு முன்பே தெரிந்திருந்தும் , தொடங்கி அதை எப்பாடு பட்டும் முடிப்பதுதான்.
பெரும்பான்மை விதியில் அடங்காத ஒரு விசயம் ஒரு மனிதனின் மனசாட்சிதான்.
மற்றவர்களோடு இணக்கமாக வாழ்வதற்கு முன், என்னோடே நான் இணக்கமாக வாழ ஆரம்பிக்க வேண்டும்.
படிக்காதவர்கள் நிச்சயம் படியுங்கள். ஹார்ப்பர் லீயின் மொழி உங்களை வசீகரிக்கக்கூடும். நான் இன்னும் சிலமுறை படிக்க வேண்டும்.